பொழுது புலர்கையில்
கண்ணுக்குள்ளேயே வரிசை கட்டி நிற்கின்றன
அன்றாடத்தின் எதிர்கொள்ளல்கள்

சன்னல் காக்கை ஒரே மாதிரிதான் கரைகிறது
இங்கேயோ
சோம்பல் எரிச்சல் தயக்கம் துள்ளல்
என ஆயிரம்
ஹார்மோனியக் கட்டைகள்

நாய்க்குட்டி போல் தலைசாய்த்து
காத்துக் கொண்டிருக்கும்
உங்கள் வாகனம் ஓர் உதையில் புரிந்துகொள்ளும்
தினத்தின் பாதைக்குள்
அன்றைய பாட்டைச்
சுமந்து நகரும்

தினம் என்பது
கிரீம் பிஸ்கெட்டின் எதிரி
அதற்குத் தெரியும்
இரண்டையும் பிரித்துக்கூட
நக்கித் தின்றுவிடும்
நீள் நாக்கை

மாலை மீண்டும் நாய்க்குட்டி
தலைசாய்த்து நிற்கையில்
படியேறுகிறது
கிரீம் உதிர்ந்த சவுத்த ரொட்டி

- உமா மோகன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.