வெண்டை
விளைந்த
பூமியை
வெடித்துச்
சிதறிய
விதைகள்
வெளிப்படுத்துகின்றன.

***

வரப்புச் சண்டைகளை
வாய் திறக்காமல்
பார்த்துக் கொண்டிருக்கிறான்
திரட்டுக் கம்பத்தடியான்.
கூலியாக
மாசி மாதக்
கடைசி வெள்ளிக்கிழமையில்
உதிரம் கிடைத்து விடுகிறது.

***

பெரும்
பதற்றத்தைக்கூட
திறமையாக
மறைத்து விடுகிறான்
பெரும் பாணன் ஒருவன்.
சிறு உணர்ச்சியைப்
பாடலாகச் சிந்தி விடுகிறான்.

***

ஆழ்வார் தாத்தா
வெட்டிய
எருக்கிடங்கு
ஞெகிழிகளால்
மூச்சுத் திணறுகிறது.

- ப.சுடலைமணி, கோயம்புத்தூர்

Pin It