நினைக்க மறந்த சொற்களோடு
புன்னைகைத் தாய்
அத்தனை அருகில் சாத்தியம் தான்
கற்பனையும்

மறுபடியும் காணேன் என்பதை
மாற்றிப் பார்த்தது உன் பார்வை
தேன் ஊற்றிப் பார்த்தது
உன் மேட்னி வேர்வை

கூட்டத்தில் கொன்றைப் பூவென நீ
கூட்டத்தையே கொன்றாலும்
தகுமென நான்

இதழ் சாயம் வலை விரித்தது
உரசிய கைகளில் சிலை சிரித்தது
உன் அனல் கடந்த நிம்மதியில்
விதி உண்டு நம்பினேன்

காண இருந்த சினிமா மறந்தேன்
காணக் காண நீ இருக்க
தானாய்ப் பறந்தேன்

நீண்ட நெடிய தூரங்களை
வட்டமிட்டு மொட்டு வைத்தாய்
மெட்டுமிட்டு வாயசைத்தாய்
நொடியில் பூத்த கடிகாரம் ஆனேன்

கூட்டம் நெருக்கி இருவரிசை ஒன்றாக
நானுமில்லை நீயுமில்லை
நுழைவாயில் கடக்கும் ஏழடி வரை
நாமுமில்லை ஞாபகமில்லை

ஒத்த செருப்புக்கு தான் வந்திருந்தேன்
ஒத்த நெருப்புக்குள் நிற்க வைத்தாய்
கத்தும் குயிலோசை எனக்குள்ளே
"கேட்டுச்சா புள்ள........!"

- கவிஜி

Pin It