விடியலில் ஒலித்த அலைப்பேசி
அப்பாவின்
மரண அறிவிப்பை வெளியிட்டது.

ஐயோ நம்பள எல்லாம் விட்டுட்டு
உங்கொப்பன் போயிட்டாண்டா
என்ற அம்மாவின் குரல் கதறியது

விடியலில் கிடைத்த வண்டியைப் பிடித்து
அப்பாவின் பிணத்தைக் கைப்பற்றுவதற்காக
100 கிலோ மீட்டர் தூரம் விரைந்தேன்

அவசரப் பிரிவில்
பிணமாகக் கிடந்த
அப்பாவைப் பார்க்க
மருத்துவமனைக் காவலர்
100 ரூபாய் கேட்டார்

லஞ்சத்தில் இருந்து
ரத்தம் வழிந்தது

அப்பாவின் பிணம் அநாதையாகக் கிடந்தது.
யாரின் வருகையையோ எதிர்பார்த்து
கண்கள் மூடாமல் சிரித்தபடி.
அப்பா எதை நினைத்து சிரித்திருப்பார்,
அவரின் பிணத்தை நான் லஞ்சம் கொடுத்துதான்
எடுத்து செல்லப் போகின்றேன் என்றா?

உண்மையை
பிணங்கள் முன்பே
கண்டறிந்து விடுகின்றனவா?

இருக்கலாம்,
எப்போது இந்த உலகம்
அவனின் கொள்கையோடு
அவனை வாழ விட்டது?

இருந்தும் உண்மைக் காரணத்தை
இன்று வரையிலும்
கண்டறிய முடியவில்லை!

பணம் இல்லாத ஏழைகளின்
கடைசிப் புகலிடம்
அரசு மருத்துமனைகள் என்பது மிகையில்லை.

அப்பாவின் பிணம்
இப்போது பிணவறை வாசலின் முன்னே
ஒரு பொட்டலமாய் கட்டப்பட்டுக் கிடந்தது.

சார் நாங்க நாலு பேர்
பார்த்து கவனிங்க
என்றான் பிணவறைக் காவலாளி,
மறுக்காமல் கவனிக்கப்பட்டது.

பிணம் இலவச அமரர் ஊர்தியில் ஏற்றப்பட்டது
ஆனால் அப்பா
கொடுத்து வைத்தவர்
வழித்துணைக்கு மேலும் மூன்று பிணங்களை
உடன் சேர்த்துக் கொண்டார்.

ஒவ்வொரு பிணமாக
ஒவ்வொரு ஊரில்
இறக்கப்பட்டது
அப்பா சில மணி நேரங்களிலேயே
மீண்டும் அநாதைப் பிணமாய் மாறிப்போனார்.

இப்போது நானும் ஆம்புலன்ஸ் டிரைவர் மட்டும்
புகையை இழுத்து விட்டுக்கொண்டே
அவர் சொன்னார்
சார், பாடியை வெளி வண்டில் கொண்டுபோனால்
10000 ஆயிரம் செலவாகும்.
ஆனா பாடிய கொடுக்க மாட்டாங்க,
நான் அவ்வளவு எல்லாம் கேட்க மாட்டேன்.
பார்த்துப் பண்ணுங்க.

பேரம் பேசாமல்
1000 கொடுக்கப்பட்டது.

ஆம்புலன்ஸ் டிரைவரின் சிரித்த முகம்
என் நினைவில் இன்றும் உள்ளது.
ஒருவேளை அப்பா டிரைவராக இருந்தது
ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

ஊரே கூடி நின்று
அப்பாவுக்கு இறுதி அஞ்சலி
செலுத்தினார்கள்.

அப்பாவை பதைபதைக்க
புதைத்துவிட்டுத் திரும்பினேன்
வழியில் என் அப்பாவைப் போலவே
பல அப்பாக்கள்
மதுக்கடை வாசலில்
சாவதற்காக காத்துக் கிடந்தார்கள்.

ஆனால் நான்
அதற்காகவெல்லாம் கவலைப்படவில்லை
எனக்கு இருக்கும் ஒரே கவலை
தோழர்களே!
என் அப்பா இன்னும்
சிரித்துக் கொண்டுதான் இருப்பாரா? என்பதுதான்
யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்...

- செ.கார்கி

Pin It