இரண்டரை மணி நேரப் பயண நெரிசலில்
கண்ணில் ஈரம் பூசி
மனதை ருசித்துக் கொண்டிருந்தது
ஒரு புத்தகவாசனை
முற்றிலும் அடர்ந்த வனத்தில்
கீழே விழுந்து
வெளிச்சம் காட்டி அமர்ந்திருக்கிறது முதல் பனிச்சீவல்
இது லண்டனுக்கு
உதடு துடிக்கக் குளிரேகும் மாதம்
யூனிபோர்ம் போல
கறுப்பு நிறமோ
பழுப்பு நிறமோ
சிவப்பு நிறமோ
யாரையும் போர்த்தியிருக்கும்
ஆற்றில் அலம்பிக் கொண்டிருந்த
மருத விழுதுகளுக்கு மட்டும்
இடை ஓய்வு
என்னைப்போல
உதிர்ந்துதிர்ந்து தளிர்க்க

000

விக்டோரியா நஷனல் எக்ஸ்பிறஸ்
சரசரப்பு மிகுத்து
ஒரு பறவையைப்போல் பாடுகிறது
அதே குரலில்தான்
மனதில் கரகரக்கிறது வேகம்
ஒவ்வொருவருக்கும்
ஒருசமயம் இது நிகழ்கிறது
வெகு சுலபமான பாதைகள்
சில சமயங்களில்
வெகு கடினமாகி விடுகின்றன
ஒற்றைச் சமாதானச்சொல்
உங்களுக்கு சிரிப்பாக இருக்கிறது
தூக்கத்திலிருந்து
தன்னை உதறி மடித்துக்கொண்டு
ஓடிவந்தவள்
மூன்று ரயில் மாறி மாறி ஏறி
முன்பதிவு செய்த முதல் பேருந்தை
ஓரிரு நொடிகளில் தவறவிட்டு
அடுத்த பேருந்திற்கு
மறுபடியும் பணம் கொடுக்கும் போது
முகம் கழன்று போய்
தளும்பும் படியாகவும்
வெறும் கைகள்
யன்னல் வழியாக நீண்டு கொண்டிருந்தது
என்னவோ விநோதமாக இல்லை

000

இந்த உலக லௌகீகம்
எங்கேயும் ஒளித்து வைக்கமுடியாதபடி
தந்திருக்கிறது இந்தமுகத்தை
ஒவ்வொரு நாளும்
நாட்களை நகர்த்தும் வண்ணம்
வாடகை அறையில்
என்னைப் பொருத்திக்கொண்டு
நானும் வரைந்து கொண்டிருக்கிறேன்
பல முகங்களை
என் சிலந்தி வலை
நீலச்சிறகுகளால் ஆனது
பின்னல் இழையின் கச்சிதமான
நெருக்கத்தில் அடைபட்டவர்கள்
மீளப்போவதில்ஸை
மலர்ந்திருத்தல் ஒரு கலை
எல்லாவற்றையும் விட அதை
மிகச்சிறப்பாக செய்வதில்
திரட்சியடைகிறேன்
எந்த ஆதாரமும் பிடிமானமும் இல்லை
என் விலாக்கூட்டின் சிறகுகள்
சிறைக்கான கதவுகள் என்பதற்கு
வெற்றுக்கைகளை
வெற்றுக்கைகளால் பற்றிக் கொள்கிறேன்
அந்த வெதுவெதுப்பில் கனிகிறது
மழையின் நீர்மை

000

தேர் பார்க்கத்தான் போயிருந்தோம்
ஆனாலும் தேன்குழல் மிட்டாய் பெட்டிகளையும்
துண்டு துண்டாக வெட்டிப்பிளந்து
மிளகாய்ப்பொடியோடு
உப்புப் போட்டுக் குலுக்கி நனைத்து
நீட்டிய மாங்காயையும்
யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்
உலகத்தில் எவ்வளவோ
செய்ய வேண்டும் என்றுதான்
ஆர்ப்பாட்டப்படுகிறோம்
அதையெல்லாம்
செய்து விட்டா போகிறோம்
எந்த விதத்திலும்
குறைவதே இல்லை
விதையும் விருட்சமும்
எந்த வித்தியாசமுமில்லை
எல்லாம் ஒன்று போலத்தான் இருக்கிறது நட்சத்திரங்கள்
அதென்னவோ சாகிறவரைக்கும்
நம்ப மறுக்கிறீர்கள்
அவர்கள் தராசில்
பார்வையிழந்து கிடக்கும்
நீதிக்கட்டிகளை 

- தமிழ் உதயா, லண்டன்

Pin It