சீமைக்கருவேல முள்
வெட்ட
கூலிக்குப் போயி
கருவேல முள்
வெறகுக் கடையில
வேலை பார்த்து
கருவேலங்காய ஆடுகளுக்கு
தொரட்டில அறுத்துப் போட்டு
பொங்கித் திங்க
அடுப்புக்கு முள்ள வெட்டி
சீமக்கருவ மரத்தடி
குடிசைக்கு மோட்டுவலை
கழியா கருவேலங்குச்சி
போட்டு வேய்ந்த வாழ்வு
வெக்கை படிந்த
நிலமெங்கிலும்
முள்ளும் முள் சார்ந்தும் முளைத்து நிக்குது
மண்ணையும் மனிதனையும் மலடாக்கி ..
ஆளாகி
அஞ்சாறு வருசத்துல வாக்கப்பட்டு
நான் போனேன்
சீமக்கருவ ஏப்பம்விட்ட ஏரியூருக்கு..
கருவ மரக்கணக்கா
கறுத்த நெற வெறப்பான மாப்ளக்கி
முள் பார்வை..
மொத நாள் ராத்திரி
மொடாக்குடி குடிச்சுப்புட்டு வெசமேறிய
ஒடம்போட பாய்படுக்கையெல்லாம் சீமக்கருவ
முள் வெதச்சான்
என் நிலமெல்லாம்
முள்ளு வெதை
எங்கப்போயி
சொல்லுவேன் இத
இதை கருவருக்கப் போவது
எந்த விதை ..

- சதீஷ் குமரன், திருச்சி

Pin It