தேமே என்றொருவன்

பசியோடு இருக்கிறான்
கடவுள்
அலைந்து கொண்டு இருக்கிறான்
பக்தன்.

பதுக்கிய உணவைத் தின்று
சிலையைச் சுற்றி
சிரித்து விளையாடுகிறது
சுண்டெலி.

*** 

ஜென்

மதம் பிடித்து
இரவு வனமெங்கும்
கனவு தூசி பறக்க
அதம் செய்த
நினைவு
நீ

நேரில்
மெய்யுரச நிற்க
பாகன் போல
ஞானம்.

ஜென் ஆகிறேன்
நான்

***

பிழைப்பு பூதம்

காற்று வெளி
கடற்கரைப் பொழுது
கடலலைகளின் பேச்சு
தனிமை துணையாய்
உடனிருக்க....

இரவின் விரல்களால்
இதயத்தைத் தடவி
கடந்த கதையை
பிரெய்லியில்
படிக்கச் சொல்லி விட்டு
அசைந்து அசைந்து
மறைகிறது அந்தி.

இன்னும்
ஒரிரு மணிப் பொழுதுகளில்
காலக் குகையில்
செதுக்கி வைத்த
நம் காதல் வரலாறு
விடியலின் கரங்களில்
வாசிக்கத் தரப்படும்.

அப்போது
நகரத்தின்
மனித இயந்திரங்களாய்
வெவ்வேறு நகரங்களில்
இயங்கியபடி இருப்போம்

பிழைப்பு பூதத்தின்
கட்டளைகளுக்குகேற்ப .....

- இரா.மதிபாலா

Pin It