அரேபிய தேசத்தின்
மற்றுமோர் ஒப்பாரி பிரதேசத்தில்
மரித்துப் போன உயிர்களின்
குருதியை ஒவ்வொரு
வீட்டிலும் தெளிக்கிறது
பெரும் புலம்பலோடு அறிவிக்கும்
செய்தியாளரின் குரல்...
காற்று கூட ரசாயனத்தால்
காயம் பட்டு கிடக்கிறதாம்
செவிமடுக்கும் வீட்டுக்காரர்
ரயிலடியில் இரைதேடும்
வயிறு புடைத்த பெருச்சாளி போல்
உண்டுவிட்டு கைகழுவி தோளின் துண்டால்
வாய் துடைத்து நீண்டதொரு
கொட்டாவி விடுகிறார்...
அலுவலகத்தின் வழக்கமான
அரசியல் கேலி கிண்டல்களோடு
அரேபிய துயரமும் அலசப்படும்
மதியத்தில் இவர்களின் அரட்டைக்காக
மற்றொரு ஊரில் கலவரம்
வெடித்து பிணங்கள் விழக்கூடும்...
மாலைக்கருக்கலில்
கைப்பை தூக்கிக்கொண்டு
ஆசுவாசத்தோடு நடக்கிறார் உத்தியோகஸ்தர்
அன்றைய நாளின் வரவுக் கணக்குகளை
அசை போட்டபடி

- சிவா.அமுதன்

Pin It