எங்களால்
பரிமாறிக் கொள்ளப்படும்
முறைமை சொற்களுக்கடியில்
ஊடோடுகிறது
பிரத்யேக அரும்பொருள்
கடலடி நீரோட்டமாக

எங்களின்
பார்த்தும் பாராத பார்வைகளுக்குள்
எப்போதுமிருக்கிறது
துருவனின் மாறா நோக்கொன்று

ஒவ்வொரு பிரிவின்போதும்
இழுபடு வடமென
மேலும் மேலும் இறுகுகிறது
எங்களுள்
உட்கரந்தவொன்று

விலகி விலக்கி நடக்கும்
எங்களை ,
இணைந்தபடி தொடர்கின்றன
நடிக்கத் தெரியாத
எங்களின் எண்ண நிழல்கள்

- கா.சிவா

Pin It