மரணத்தின் கவிதைகள் - 3

கண்ணீர் அஞ்சலி
போஸ்டரில் அழகாய்
சிரித்துக் கொண்டிருந்தது
பிணம்.

மரணத்தின் கவிதைகள் - 4

பூக்கடையில் தொங்கும்
ஒவ்வொரு மாலையும்
தனக்கான பிணத்தை
எதிர்நோக்கி காத்திருக்கின்றன.

மரணத்தின் கவிதைகள்-5

வெட்டியானின் கனவில்
கடவுள் வந்தார்
பிணமாய்.

மரணத்தின் கவிதைகள்-6

காதலியிடம் காமத்தை
உண்டாக்கிய ரோஜா
பிணத்திடம்
ஞானத்தை உண்டாக்குகின்றது

மரணத்தின் கவிதைகள்-7

பிணங்கள் எரியும்
நறுமணம்
அந்தப்புரங்களின் அக்தரை
கேலி செய்கின்றது

மரணத்தின் கவிதைகள்-8

பெயர்களைப் பற்றிய
பிரச்சினை ஒருவழியாய் ஓய்ந்தது
எப்ப பாடிய எடுப்பீங்க?

- செ.கார்கி

Pin It