வெயில் தீண்டாத கருமேகங்கள்
அடர்ந்து நிறைந்திருக்கிறது
வெட்டவெளியெங்கிலும்
இருளைப் போர்த்தியபடி.......

நத்தையின் ஊரலென
விட்டுவிட்டு பெய்கிற மழையின் ஈரத்தில்
தரையில் விரைந்து நடக்க
நடுங்குகிறதென் பாதங்கள்...

சன்னலைத் திரைச்சீலையால் முடி
கதவுகளை அடைத்து
உள்ளங்கைகளை ஒத்தியெடுக்கும்
அடுப்புகொண்டை வைத்தியங்கள்.....

துவரம்பிஞ்சுகளை துளைத்து உறங்கும்
வண்டுகளென
உருண்டு புரண்டு மூர்க்கமாய்
ருசித்துண்கிறேன் உம்மில் படரும்
வெம்மைதனை......

கொஞ்சம் கொஞ்சமாக
கொஞ்சும் கிளியென மாறி
மழைக்கால கூதலுடன் குதூகலிக்கிறது
தேகத்தின் ஒத்திகைகள்.....

வீட்டைச் சுற்றியெழும் பூச்சிகளின்
இரைச்சல்களினூடே
பெருந்தூக்கமொன்று கண்களை வட்டமிட
அறைக்குள்ளிருந்து வெளியேறுகிறது
தத்தளித்த குளிரோடை......

- வழக்கறிஞர் நீதிமலர்

Pin It