ஆழியெனச் சுழலும் ஒற்றை அறைக்குள்
இரயில் தடத்தில் ஒற்றைச் சிறகுடன்
எக்கணத்திலும் நிறுத்தச் சாத்தியமல்லாத
என் பயணம் நெருப்பின் நுனி சொட்டும்
பனியாலும் விதைக்கப் பட்டிருக்கிறது

மீன்களோடு நீந்தும் இரவின் ஆறுகளும்
முத்தம் பதிக்காத மலைத்தொடர்களும்

என்னைக் குறித்து உணர்ந்திருந்தன
புலர்வில் இருந்து ஏகாந்தமென

புதைந்திருந்த என் இரவுகள்
புத்தகங்களோடு மட்டுமே திளைத்திருந்தன

உலர்த்திய மௌன மனவுளைவில்
அலறும் சுழல்காற்றாய்
ஆர்ப்பரித்த பேராறுகளாய்
மாபெரும் விடி தாரகைகளாய்
தூய்மையின் பூவுலகை
தரிசித்த அனைவருக்காகவும்
மகரந்த இமைகளாய்
என் விரல்களும் உணர்வுகளும்

பிரக்ஞையடைந்து உயிருற சம்பவித்தன

சிறகுகளை படர்த்தி நெகிழ்கிறேன்.
நான் ஒரு பறவையாகிறேன்
உங்கள் இளவேனிலுக்கு
நீங்கள் விதைத்திருக்கும் நெல்மணிகளுக்காக
எப்போதும் நினைவிலிருந்து மீள் திரும்புவேன் 

00 

மோனத்தின் கொந்தளிப்பில்
பூமியின் மாடத்தில்
அவனொரு வனம் சமைக்கிறான்,
தலைகீழான கனவொன்றின்
மருளொளியில் நாளின் இருண்மையை
மீண்டு கடத்துகிறான்

உயிர் மாய்க்கும் நூலிழை ஒன்றை
கூர் தீட்டி இழுக்கிறது
துடிப்புற நிலவிய நகைப்பின் இதய நாவு

அவனின் எழில் சூழ் சுருங்கு விழிகள்
தாரகைகளை மிளிர்த்தின,
காயத்துள் ஆழ்த்திய நீள் கணங்களுக்குள்
அவன் சிரம் மார்பு சாய்ந்திருக்கக் கூடும்

வளைவற்ற தொனிகள்
இதழ்களில் சிவந்து திரியப்பழகின,
நிசப்த இரவின் கிளைகளில்
இருந்து பொழியும் நிலவின் வார்த்தைகளை
அவனுள் பதிக்கிறான்

ஒளிநெரிவில் நசிந்து கல் தூணில்
பன்னிரண்டு வகிடுகளோடு கடிகாரமுள்
புதிதின் திறவுகோலுக்காக
ஒரு காலையூன்றி காத்திருக்கிறது

விறைப்புற்று அலைவுறும்
நீல அல்லி மலர்கள்
அதரங்களில் மிதந்திருக்கும்
கடத்துகை நீரூற்றென
ஞாபகம் கொள்கிறேன்

கவிதை செய்யப் போதுமான
வெண்பனித்துகள் உதிர் மலருடனிருக்க
எப்போதும் கனிந்திருந்தது
என் நாளங்களில்
இழையிழையாய் நீண்ட நிமிடங்கள். 

00 

நுரைத்த கடற்கரு நொடிகளில்
திசையறியாத அலை
உன் குரலில்லை
வழிந்து வாய்த்திருக்கும்
ருசியேறிய வைன் குவளைக்குள்
உன் மொழியை நானறிவேன்

அருகமர்ந்த ஆதிவிருட்சத்தின்
வசீகரித்துப் பொங்கும் பேராற்றில்
மூழ்கடிக்கப்பட முன்
என் சொற்களிடை புகுந்த
தீவிரவாத உயிர்த் தாக்குதலுக்கு
வெற்றுக்கனவுகள் என பெயர் சூட்டி அறியேன்

நமக்கிடையே அமர்ந்திருக்கும்
இரு பறவைகளின்
உதிர்மொழியற்ற பாஷை வேட்கையை
துயிலின் நெய்தல் பூம்பாத்தியில்,
பொழிந்திருக்கின்ற ஆவாரம் பூக்களிடை ,
அனாதியான பாலையூற்று மணலிடை,
மறுபடி எப்படி விதைப்பேன்

அசுரத்தன மழைவிளைச்சலுக்குப் பின்னான
உடலெங்கும் பூத்து உயிர் நிமிர்த்திய,
நீங்கிச் செல்ல மறுத்த ஒரு கோடி கொள்ளளவு
நிலவொளியின் அறுவடையை
இரண்டு கட்குழியின் வெளிப்பரப்பில்
அப்போது தான் வாசித்துக் கொண்டிருக்கிறேன்

கரம் அரும்பும் மொழியின் சூட்சுமத்தில்
நிரம்பி இருப்பவை உன் குரலில்லை
கவிதை திறக்கும் முன் இறுக்கிய கைகளுக்குள்
திரண்டிருக்கிறது நீ வரைந்த
இமயமலையின் நீள்கோடுகள்

ஆம் நானறிவேன்
துடிக்கும் இமைகள் போலல்லாத
அலை ஒருபோதும் உன் குரலில்லை.

- தமிழ் உதயா, லண்டன்

Pin It