உங்கள் கருத்துக்களில்
கொள்ளி வைக்கலாம்
உங்கள் மதமோ இனமோ
பிரிவோ சாதியோ
சாகட்டுமென மண்ணள்ளி வீசுகிறேன்
வல்லரசோ வாட்ஸப்போ வாய்க்கரிசி
வாங்கி வெந்து தணியட்டும்
துப்பாக்கிகளும் தோட்டாக்களும்
செல்பிக்களும் இன்னபிற முகங்களோடு
உயிரழித்து தொலைக்கும் எதுவும்
இல்லாமல் போகக் கடவது
மாற்றம் என்ன பெரிய மாற்றம்
கொடி நாட்டி சரித்திரம் படைக்க
கோடி திருடி கோட்டை கட்ட
ஒரு மயிரும் யோசனை இல்லை
பசிக்கழுபவனை
கொல்லாமலாவது விடுங்கள்
பச்சிளம் குழந்தைகளை பசிக்கு
அழவாவது விடுங்கள்
உங்கள் போக்கத்த இசங்களின்
மூத்திரப்பை வெடிக்க வேண்டுகிறேன்
பிச்சையிட்டுப் போங்கள்
சிரியாவும் என் நாடே
செத்த மதுவும் என் கூடே

- கவிஜி

Pin It