போய்வருவதாகச் சொல்லி
துணிக்கடை பொம்மையிடம்
கையசைக்கிறாள் பாப்பா.

***

காற்றசைக்கும் மர இலைகளில்
சலசலக்கிறது
மெல்லிய நீரோட்டம்.

***

அழைப்பிற்குத் திரும்பாமல்
காதை மட்டுமே அசைக்கிறது
பூனை.

***

அசையாத புத்தர் சிலை
சலனத்துடன் நின்றபடி
நான்.

***

தாய் மறந்தாலும்
சேய் மறப்பதே இல்லை
பொம்மைக்கு சோறூட்ட.

***

சன்னலுக்கு வெளியே மரம்
கண்ணாடி மேசைமீது அசைகிறது
தலைகீழாக.

***

கூண்டினைத் திறந்துவிடுங்கள்
பறந்தே சாகட்டும்
பறவைகள்.

***

பிறந்தநாள் மெழுகில்
உருகிப்போகிறது
வயது.

- வான்மதி செந்தில்வாணன்

Pin It