கடனக் கேட்டு சின்னாண்ட ஆளனுப்புவாரு
நான் இல்லன்னு சொல்லிடென்று
வாசல் தெளிக்க சென்றவளிடம் சொல்லி
காய்ந்து கிடக்கும் வயக்காட்டுப் பக்கம்
தலைமறைவானான்
இரை தேடி வந்த
தவிட்டுக்குருவியின் கால்
வெடிப்புகளில் மாட்டி
பனியில் நனைந்தபடி படுத்திருந்ததை
எடுத்து வந்து மஞ்சள் பத்திட்டு
தின்ன நொய்யரிசித் தூவி
துண்டை நனைத்து வயிற்றில் கட்டி
சித்தெறும்புகள் ஊறிக்கொண்டிருக்கும்
பின் திண்ணையில் படுத்துக்கொண்டவனை
மேய்ந்து கொண்டிருந்தது சூரியன்.

- சிவ.விஜயபாரதி

Pin It