அவன்
வேர்விட்டிருக்கும்
இந்த நிலத்தில்
நமது கற்பனைக்குள் வளையாது
நகரங்களை சுற்றி அலைந்து
இப்போது
ஒரு மரக்கிளையில்
பறவையொன்றாக அமர்ந்து கொண்டிருக்கலாம்
அல்லது
அவன்
போதியளவு வெளிச்சமில்லாத
ஒரு கிராமத்து குடிசையில்
பெரும் பாரத்தை சுமந்து
எறும்பாக நகர்ந்து கொண்டிருக்கலாம்
மேலும்
அவன்
காலடி படாத
மலைப் பிரதேசமொன்றில்
நீண்ட நெடிய சர்ப்பமொன்றாக
தவளையொன்றை துரத்தலாம்
அப்படி இல்லையெனில்
இந்தக் காட்சிகளை படமெடுக்கும்
ஒரு நபராகக்கூட அவன் இருக்கலாம்
அவனை முதன் முதன் முறையாக
சந்திக்க காத்துக்கொண்டிருக்கிறேன்
அவன் யார் எனவும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

- ஏ.நஸ்புள்ளாஹ்

Pin It