இது மூன்றாம் ஜாமம்
நான் தற்செயலாக எழுந்திருக்கவில்லை
அப்படி எழுந்திருப்பவனுமல்ல
என்னை யாரோ
எழுப்பி இருக்க வேண்டுமென
நீங்கள் நினைக்கலாம்
என்னை நான் எழுப்பி இருக்க வேண்டுமென
நீங்கள் யூகிக்க முடியாது
நான் நன்றாக தூக்கத்திலிருந்ததை
நீங்கள் இப்போது வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இப்படி முடிவிற்கு வரலாம்
மழை நாட்கள் என்பதால்
ஒரு குளிர் என்னை
எழுப்பி இருக்கலாம்
அல்லது நுளம்புகள் சில
எழுப்பி இருக்கலாம்
நுளம்பு எழுப்புவதற்கு வாய்ப்பில்லை
வலையை கட்டிலில் மனைவி
சென்ற வாரந்தான்
ஒரு கூடாரம் போல் அமைத்திருந்தாள்
அப்படியெனில்
குளிர்தான் இந்த வேலையைச் செய்திருக்க வேண்டும்
குளிரை இனி அருகி்ல் வைத்திருக்க முடியாது
அதனை குளிர் சாதனப் பெட்டிக்குள் வைக்க வேண்டும்
குளிர் என்னிடம் இருக்கிறது
மன்னிக்கவும் பெட்டி உங்களிடம் இருக்கிறதா.

- ஏ.நஸ்புள்ளாஹ்

Pin It