ஒரு நிலை வரைக்கும்
வாழ்வு என்பது
தவம்
ஒரு நிலைக்குப் பின்
வாழ்வது என்பது
வதம்

இப்போது முதுமையின்
முற்றத்தில் நீ
இது விடுதலை இல்லை
சிறை பிடிக்கப் பட்டிருக்கிறாய்
தேவை இல்லாத வாழ்க்கை
உன் கையில்
விலங்குபோல் மாட்டப்பட்டிருக்கும்
விளங்குவாய்

தேவைகள் இருக்கும்
ஆனால்;
அருகே வந்தமரக் கூட
அருகதையற்றிருப்பாய்

கூட இருந்தவர்கள்
கூடியிருப்பார்கள்
நீ தனித்திருக்கும் காலத்தில்......,

ஒரு காலத்தில்
பேசிப்,பேசி கொன்ற நீ
மௌனித்துக் கொள்வாய்

சுவைகள் உனக்கெதிராய்
சூனியம் வைக்கும்
நாக்கின் மீதான உன்
நம்பிக்கை பொய்க்கும்

நரம்பேற ஓடிய குருதி
நடை தளர்ந்து நடமாடும்
சதைக் கூறும்
பல..கதை கூறும்

கால்மாறி உன் காலணியும் கூட
கவனிக்க மறுக்கும்

வசதிக்காக உழைத்த நீ
இப்போது
அசதிக்காக உழைப்பாய்

மையவாடி உன்
நினைவுகளில்...,
மையம் கொள்ளும்
இருந்தும்
இத் தாழ்வாரங்களில்
ஒன்றித்திரியென
மரணம் உன்னை மதிக்காமல்
கால் படாது முன்னால்
கடந்து செல்லும்
நேரம் வரும் வரை
நில் என்று பணித்து!

- ரோஷான் ஏ.ஜிப்ரி

Pin It