எங்க
காளிக்குட்டி அம்பட்டனின்
கொட்டாங்கச்சி கிராப்பு
ரொம்பவும் பிரபலம்.

புதன் சந்தை என்றால் போதும்
ரோட்டோரப் புளியமரத்தடியில்
கட்டாயம் காண முடியும்
அவனை.

அடிமசுரு அக்குள் என
எங்கு சிரைக்க நேர்ந்தாலும்
ஒருபோதும் அவன்
முகம் சுழித்து நான்
பார்த்ததில்லை.

பதர் நிரம்பிய நெல்லுக் கட்டு
பக்குவமில்லாத சோளமென
கிழவனின் வாழ்க்கை
நகர்ந்து கொண்டிருந்தது.

பண்ணையம் பாழாகி
பாதிப்பேர் பிழைப்பு தேடி
பெங்களூர் போன பின்னால்
கஞ்சிக்கும்
அம்பட்டன் குடும்பம்
ஏங்கித்தான் போனது.

பிள்ளை ஒடம்புக்கு
பெரிய நோய் என
கெஞ்சியபோது
ஊர்கவுண்டன் ஒருத்தனில்லாமல்
கைவிரித்து விட
செத்துப்போனது
அஞ்சாவது குழந்தை.

விரக்தியில்
வெந்துபோன அம்பட்டன்
'பள்ளி'களுக்கு
வீடு வீடாய்
செரைக்கப் போவதை விடுத்து
ரோட்டோரமாக
கடைபோட்டு விட்டான்.

கூடவே
பறையனுக்கும்
முடிவெட்டப் படுமுன்னு
பலகையும் போட்டுவிட்டான்.

எல்லா ஊர் கவுண்டன்களும்
அம்பட்டனிடம்
சமாதானம் பேசினர்.
அவனது குலப் பெருமை குறித்து
கோடிட்டுக் காட்டினர்.
எதற்கும்
மசியாமல் போகவே
மிரட்டியும்,
புதன் ராத்திரி ஒருநாள்
அடித்துமே பார்த்துவிட்டனர்.

பண்டமென்பது மாறி
பணமென ஆகிவிட்டபோது
சவரக்கத்திக்குப் பதிலாக
சீமை பிளேடு வந்துவிட்டபோது
எவனுக்கும் பயப்படவில்லை
அம்பட்டன்.

பறையன் தலையிலேயும்
இனி
என் கத்திரி பணி செய்யும் என
பகிரங்கமாக அறிவித்து விட்டான்.

இரண்டொரு தடவை
செங்கொடி
ஊர்வலத்திலும் தலைகாட்டி விட
கவுண்டன் என
எவனும் அவனிடம்
மல்லுக்குத் துணியவில்லை.

காளிக்குட்டியிடம்
செரைக்கப்போவதில்லை
என
போடப்பட்ட ஊர்கட்டுப்பாடு
ஒருமாதத்துக்கு கூட
நீடிக்கவில்லை.

இருபது வருடமாக
ஆண்ட பரம்பரையின் மசுரையும்
அடிமையின் மசுரையும்
ஒரே மூட்டையில்தான்
கட்டி வைத்தான்.

இதோ
அவன்
சிதை அருகில் நின்றிருக்கிறேன்.
ஆயிரமாண்டுகால
அடிமை வாழ்வை
அழித்தவன் என்ற
பெருமையோடு அவனை
அணைத்துக் கொண்டிருக்கிறது
தீ.

- பாவெல் இன்பன்

Pin It