வழக்கம் போல்
கைகளால் துழாவிக்கொண்டே
கண்விழிக்கையில்
அகப்படாதிருக்கும்
அலைபேசியைக் காணாது
திடுக்குற்றேன்.

அலைபேசியின்
ஸ்பரிசம் அது
அகலவில்லை
என் கைகளில்...

அலாரம் அடித்து
என் பொழுதைப் புலரச்செய்யும்
அபூர்வ இயந்திரப்
பறவையல்லவா அது!

மினுக்கென
குறுஒலியில்
குறுஞ்செய்தியைக் கொண்டுதரும்
தேவதூதனல்லவா அது!

பொழுதுகளத்தனையும்
நொடியில் கரைந்து போகும்
அலைபேசி கைகளிலிருக்கையில்...

எங்கோ
அழைக்கும்
அலைபேசியின் சப்தமெல்லாம்
எனக்கான ஒலியென
மனம் அடித்துக் கொள்கிறது

யாரெல்லாம்
அழைத்திருப்பார்கள்?
எடுக்காத அலைபேசி
அவர்களுக்குள் ஏமாற்றமாயிருக்கக் கூடும்
என்றெல்லாம் பதறுகிறது!

அலைபேசி
தொலைந்த நாளில்
ஆமை வேகம் நடக்கிறது!
பொழுதுகளலெல்லாம்!

பேச வேண்டியது
பேச வேண்டியவர்கள்
தேடுபவர்கள்
தேடப்படுபவர்கள் என
ஒரு பெரும்பட்டியல்
மனதிற்குள் நிழலாட
மலைத்துப் போயிருக்கிறது மனசு!

உடன் பயணிக்கும்
நிழலொன்று
தொடராது
ஓரிடம் நின்று
உறைந்தாற் போல...

உடன் பயணித்த
உறவொன்று
பட்டென
விலகுதலைப் போல...

பார்வையுடையவனின்
பார்வையொன்று
பாதியிலே
பறி போனது போல...

ஆனாலும்
மறந்தே தான் போனது
அலைபேசி
அது தொலைந்த துயரத்தை!

- இசைமலர்

Pin It