இறைந்து கிடக்கும்
விளையாட்டு சாமான் ஏதுமின்றி
பொருட்கள் அடைத்துப் போன
மியூசியம் என இருக்கிறது வீடு!

இரைச்சலற்ற வீடுகளின்
அறைகளில் அனுமதியின்றி
அந்நியன் போல்
அமைதி வந்து அமர்கிறது!

தேடுதலுக்கு இடமின்றி
வைக்கப்பட்ட பொருட்கள் அத்தனையும்
கேட்பாரின்றி கைவிடப்பட்டு அதனதன்
இடத்தில் அப்படியேயிருக்கிறது!

சோட்டா பீம்முக்கும்
இசையருவியும் சண்டையின்றி
சமாதானமாகிப் போனார்கள்
புதிய தலைமுறை மட்டுமே முன்னிலை!

அடிதடியும் ஆர்ப்பாட்டமும்
அழுகையும் குதூகலமுமின்றி
பேரமைதி பூண்டு சோகத்தோடும்
சவலைப்பிள்ளை போலிருக்கிறது வீடு!

விடுமுறைக்கு ஆச்சி வீடு போன
பிள்ளைகளுக்காய்...
வீடும்... பொருளும்... தொலைக்காட்சியோடு
நானுமிருக்கிறேன்!

- இசைமலர்

Pin It