jallikattu police attack

உலகமே உற்றுக் கவனித்த
இளையோர் அறம்
எழுச்சி....
முயற்சி....
இறுதியில் தீவிரமென்று ஒடுங்க
அறத்தை எடுத்துவிட்டு
இளையோரை விரட்டும்
இச்சலனத்தை
கொச்சைச் சொற்களோடு
உடன்படுத்தி
மானம் மறிக்கின்றனர்
ஒத்திவைக்க வேண்டுமென்ற
சமரசத்தால்
பிறகு ஒடுக்குகின்ற
இவ்விகழ்
அதே உலகம் உற்றுக் கவனிக்க
போராட்டம் என்பதைச்
சலசலப்பாக்கிக் கலைக்கிறது
துரித நடவடிக்கை
நாங்கள் அடைபட்டிருப்பது
தமிழ்நண்டுக் கதை தான்
எங்களின் கால்களில்
இறுகப் பற்றுவதுதைத் தான்
தீர்மானித்திர முடியாமல்
முன்னேற்றத்திற்கும் பின்தங்குவதற்கும்
நடுவே ஒரு குடியாகிப் போனோம்...

பப்புவா நியூகினியாவில்
சக்தி வாய்ந்த நிலநடுக்கமென
நேற்று சுனாமி எச்சரிக்கை
எங்களின் நிலம் நடுங்குவதற்கல்ல
சுனாமியென எழுந்த போதும்
இவர்களின் அச்சம் இயற்கைக்கும்
தொற்றி ஓடிப் போயிருக்கலாம்
நீங்கள் அப்புறப்படுத்த நினைப்பதும்
அதே அச்சத்தைத்தான்
இறுதியில் கவிழ்ந்துபோவதே
அச்சங்களின் அச்சமாய்ப்
பீடித்து நிற்கும் மனிதச் சங்கிலியில்
பேரெழுச்சியைக் காப்பாற்றிக் கொள்ள
கொச்சைப்படுத்திவிட்டீர்கள்....

உங்களிடம் காவல் இருக்கிறது
அது எங்களிடமும் இருந்த போது
நம்பினோம்...எம்பினோம்....
முகத்தலடித்தது போன்ற உணர்வினில்
கண்டிக் கிடக்கிறது
நீண்ட கடற்கரைகளில் ஒன்று.....

பறை ..பறை...எங்கும் பறை....
கருப்புச் சட்டைக்குள் கொதிக்கிறது பறை
அடக்கு அடக்கு என்ற ஆளுமையே
இது இளைஞரெழுச்சி முறை...

அணைப்பதாக நினைத்துக்
கொளுத்தியிருக்கிறீர்கள்
இனி மெல்லப் பற்றி விரல் சுடுவோம்
அந்நாளில் எங்கெளுக்கென்ற
சுடரைத் தேடிக் கொணர்வோம்
இன்று தலைபிடித்து எரியும் நெருப்பு கொளுத்தியதன் துவக்கு..

ஓர் இரவு தானே
உங்களுக்கெல்லாம் கடைசி ஆயுதம்?!
இது கடலுக்குள் உப்பைக் கொட்டிய சதி
இனி கவனமாகக் கையாளுங்கள்....

- புலமி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.