விருந்தாளியாகிய எனக்கு
குடிப்பதற்கு சுடுதண்ணீர் கேட்பதற்குள்
நாக்குச் சில்லிட்டுவிடுகிறது
காபியோ டீயோ எதுவாயினும்
விருப்பொன்றினைத் துணிக்கும்
அதிகாரமில்லை
சத்தமிட்டுதான் சிரிக்கிறேன்
ஏனோ உள்ளேயொரு பெண்
கயிறு திரிக்கிறாள்
ஏதாவது பேசிப் பேசிக் கழியும் போதும்
நேரத்தின் மீது தீராக் காதலாகிவிடுகிறது
எத்தனை முறை பார்த்தாலும்
சலிக்கவேயில்லை கடிகாரம்
உண்பதற்குத் தயாராகிறது வயிறு
ஆனாலும் உண்டபின்
போதுமென்ற சொல்லைக்
காயப்படுத்தாதவாறு பிரயோகிக்க
தாமதித்தபடியே இருக்க வேண்டும்
உறங்கச் செல்வதிலும் சிக்கலுண்டு
உண்மை கூடப் பொய்யாகத்
தோற்றமளிப்பது இங்கு தான்
எனக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும்
அறை முழுவதிலும்
திரும்பித் திரும்பிப் புரண்டும்
தூக்கம் பீடிக்கவில்லை
மெல்ல அலைப்பேசியைத் திறக்க
மங்கலாய்த் தெரிகிறது எனதுரிமை
இந்த இருளில் முற்றிலும்
தொலைந்தே போயிருந்த
சுதந்திரத்தைப் பற்றி முன்பே
இந்த அறையில் இரவு விளக்கு
இல்லையென்பதை
ஒரு புன்னகையோடே
எச்சரித்துவிட்டுத் தான் சென்றார்கள்....

- புலமி

Pin It