ஒரு நாள் எல்லாம்
மாறிப்போயிருக்கும்
அப்போது நான் ஒரு சராசரியாக
இருக்கப் பழகியிருப்பேன்

புத்தகங்கள் வாசிப்பதை நிறுத்தியிருப்பேன்
கூட்டங்களுக்குப் போக
எங்க நேரமிருக்கு என்று யாரிடமாவது
சலித்து பேசிக்கொண்டிருப்பேன்
எழுத்தாளர்களைப் பற்றி யாரும்
பேசினால்
உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருபேன்
தீவிரமாய் வாசிக்கத் தொடங்கிய புதியவனை
ஏளனமாய் பார்க்கத் தொடங்கியிருப்பேன்

கவிதைகளை விட்டு விலகிப் போயிருப்பேன்
எழுத்த வச்சு ஒன்னும் ஆகாது என்று
உபதேசம் செய்யத் தொடங்கியிருப்பேன்

அறிவுரை சொல்வதற்கான அனுபவம்
என்னிடம் இருப்பதாய் ஒரு மமதை வந்திருக்கும்

சபிக்கப்பட்ட ஒருவனாய் என் வாழ்க்கையை
சுமந்து கொண்டிருப்பேன்

இப்படி இருந்தவர்கள் எல்லாம்
இப்போது இந்த மாதிரி தான் இருக்கிறார்களாம்

சொற்களின் போதை தெளிந்து போகும்
ஒரு வயதில்
எதாவது வரிசையில் மெதுவாக முன்னாடி
நகர்ந்து கொண்டிருப்போம்!!

- ஞா.தியாகராஜன்

Pin It