அதிகாலை மஞ்சள் மலரில்
விழிக்கும் விழிகளிலிருந்து வெளியேறுகிறது
நாளைய தேவைக்காக
இன்றே திட்டமிடும்
புத்துணர்ச்சியுடனான உணர்வுகள்...

முதலிரவில் களைந்து கிடைக்கும் அழகை
வெளிச்சமிடும் வானத்தை விடவும்
அதிசயம் வேறொன்றுமில்லை
உள்ளழகை விடப் பேரழகு கொண்டது
இருளைத் துவைத்துப் பிழியும் வெளியழகு...

அடர்ந்த மௌனம்
உனக்குள்ளும் எனக்குள்ளும்
உதிப்பதற்கு முன்பாகவே
அலைகளில் விழுந்து
காற்றில் பரவிக்கொண்டது

படிக்கட்டில் இறங்கிவரும் நீருக்கு
எதிர்த்திசையில் ஏறிவருகிறது
கரையோரப் பாறையில்
நீரின் உயர்மட்டம்

இரண்டும் ஒன்றோடொன்று
கலந்து திரும்பும்போது
கனவிலிருந்து எழுந்த குழந்தை
கூடுகளை அசைத்தன...

நீரிலாடும் நிழலை மிதிக்காமல்
வெள்ளி நதி ஜதியிசையில்
கிழக்கில் குளிப்பதை ரசித்தபடியே
மேற்கில் மதி மயங்கிக் கொண்டிருந்தாள்...

- திருமூ

Pin It