lady face 300கிழக்கின் வரலாற்று ஏட்டில்
கிழிந்துதான் கிடக்கிறது
முதலாம் சமுகத்தின் இரண்டாம் பந்தி

மாசடைந்திருக்கும் நம்
மண்ணெங்கும்
முடிவற்ற துயரை
தன் நரைக்குறிப்பால்
எழுதி கொண்டிருக்கின்றன
பாலியம் கடந்த பருவத் தூரிகைகள்

காட்சியோடு உறைந்து போகும்
சித்திரங்களின் வலி
மனசை கீறியபடி வரைபட்டிருக்கிறன
யாரும் பயணிக்காத முற்றங்களில்

கற்பனையின் உலகத்தை அன்றி 
வேறேதும் கானா 
வாழ்வின் நீட்சி
மயான வீதிகளை
சமீபித்து கொண்டிருக்கின்றன

எந்த கங்கையிலும்
கழுவ முடியா கறைபூசி
‘அத்தர்’வாசமாய் காட்டிக் கொள்ளும்
பீ நாத்தங்கள்

இருப்பின் வசமிருக்கும்
தராசுகளின் தட்டில்
இயலாமை எப்போதும்
பொருளற்ற பொதியாய் ஆக
மனிதத்துவம்
கணிதத்துவத்தை மிஞ்சும்படி
கணிக்கப் படுகின்றன

வாழ்வென்பது
பொருந்தத் தகாத பொய் கூற்று
என்றானதால்;
காலப் புல்லாங்குழல்
வாசித்துக் கொண்டிருக்கின்றது
இயலாமையின் பொருளை

தனித்தலையும்
மௌனப் பறவைகளின்
ராகங்களையொத்த 
ரணங்களில் பிரிகிறது மொழி
கேட்பதற்கான
புலன்கள் தான்
பூமியிலில்லை என்ற
வலியோடு ஒலிக்கிறது
இசையற்ற பாடல்!

- ரோஷான் ஏ.ஜிப்ரி

Pin It