என்னால் சொல்ல முடியவில்லை கிராமம் ஒரு சொர்க்கம் என்று...
ஆழமான கிணறு தேடி அலையடிச்ச ஞாபகங்கள்
ஏரி குளம் சுற்றி சுற்றி எதிர் நீச்சல் போட்ட ஞாபகங்கள்
பனை நுங்கு வண்டி ஓட்டி பசிமறந்த ஞாபகங்கள்
தென்னங்கீற்றின் மேல் அமர்ந்து தெரு சுற்றி வந்த ஞாபகங்கள்
சூரப்பழம் பறிச்சித் தின்று சுவையறிந்த ஞாபகங்கள்
இதுபோல இன்னுங்கூட எத்தனையோ ஞாபகங்கள்
அதுகூட நானும் சேர்ந்து செத்த சில ஞாபகங்கள்
அறுவடைக்கு போன அப்பா அரை மறக்கா நெல் கூலி என்றார்
அது அரை வயிறும் போதாமல் அழுத சில ஞாபகங்கள்
அறுவடையில் சிந்திய நெல் அந்த வயலெல்லாம் சிதறி நிக்க
அதை அம்மா போய் பொறுக்கிவந்து எங்கள் பசி தீர்த்த ஞாபகங்கள்
பறையடிக்க போன மாமா பேச்சியம்மன் சன்னதியில்
உரியடிக்க உரிமை
கேட்டு உயிர் துறந்த ஞாபகங்கள்
எங்கள் மனம் எரித்த கூட்டத்திலே சிலர்
மரித்துப் போன பிறகும் கூட
அவர்கள் பிணம் எரித்து தொண்டு செய்து
துவண்டு போன ஞாபகங்கள்
இதுபோல எத்தனையோ இன்னும் பல ஞாபகங்கள்
எனைவந்து தீண்டையிலே
என்னால் சொல்ல முடியவில்லை
சாதி சாக்கடையில் மூழ்கிப் போன
இந்தக் கிராமம் ஒரு சொர்க்கமென்று...

Pin It