என்னைத் தொட்டுத் தழுவிச் செல்லும்
தென்றல் காற்றே வேண்டுவேன் உன்னை.
நான்குப் பக்கமும் அடைக்கப் பட்டு
நரகமாம் சிறைக்கொட் டடியில் எம்மகனை
இருநூற்று எண்பத்து எட்டுத் திங்களாய்
மண்மீது மானிடர் எவரும் படாத
கொடுமையில் பட்டழிய வைத்தார்; அந்தோ!
எந்தன் முதுமையால் ஏதுசெய்ய வுமியலேன்
எட்டிச் சென்றே பார்த்துச் சொல்லவும்
எவரு மில்லை என்செய்வேன் தென்றலே?
இந்தக் கோடையோ நீதியைப் போன்றே
வெந்த புண்ணை வெப்பத்தால்; தீக்கிறதே!
பருகும் நீரும் உவர்ப்பாய்த் திரிந்தே
பெருத்த மனிதரின் சிறுத்த மனம்போல்
அருமை புதல்வனின் அணுவைத் திரித்ததே!
இருப்பாய் நீதான் நம்பிக்கைத் தோழன்.
கண்ணீர் வழியும் விழியைத் துடைத்து
மண்ணைப் பிளக்கும் எரிமலைக் குழம்பாய்க்;
கொதிக்கும் மகனின் குருதியை ஆற்று.
வதைக்கும் சட்டம் உனக்கு விதித்துத்
தடுக்கும் ஆற்றல் எவர்க்கே உண்டு?
கெடுக்குஞ் சாதிச் சிந்தனை கொண்டு
நடுங்கும் தமிழரின் அச்சம் கொண்டு
பதவிக் காகப் பதுங்கிப் பேசி
உதவத் துணியா மனித னில்லைநீ.
சென்றுவா. சிறைக்குள் நுழைந்தால் காண்பாய்.
முன்றில் திறக்கும் நாள்வரை மகனின்
மெய்யை மனதைத் தழுவிக்; காப்பாய்.
பொய்யாப் புவியின் தென்றலே வாழி!

- குயில்தாசன்

Pin It