பாட்டி

man 246பின்வாசல்
கடந்த முன்னிரவில்,
நொடிக்குள் ஏதோ
கடந்து போனதாக பாட்டி
சொன்ன கதையை
பாட்டி இறந்த
அன்றுதான் நம்பினேன்...
-------------------------------------------------
ஓவியப் பெண்...

பெருமழை ரசித்த
தனிமைக்குள்
சுவரோரம் ஒதுங்கிய
பேரழகியாய்
நிர்வாணத் துளிகளால்
கரைந்து கொண்டிருந்தாள்
குடையோடு
நின்ற ஓவியப் பெண்...
------------------------------------------------
பொம்மலாட்டம்

அவரைப் போல
பார்த்தேன்
இவரைப் போல
சிரித்தேன்
அவரைப் போல
நடந்தேன்
இவரைப் போல
கிடந்தேன்
அவராகிப் பின்
இவராகி
கடைசியில் அவரைப்
போலவோ இவரைப்
போலவோ மரித்தேன்
முண்டம் திரும்பும்
கணத்தில் தலை
திரும்பாத பொம்மலாட்ட
நாடகத்தில்
கயிறுகள் அவரிடமோ..
அல்லது
இவரிடமோ...
--------------------------------------------

- கவிஜி

Pin It