வயலிடைப் பகுந்தது நல்யானை எனினும்
இயல்பாய்ப் பயனிலும் அழிவே மிகுமே
முதலிய உற்பத்தி முறையோ அதனினும்
சிதைக்கும் இயற்கை வளத்தைக் காண்பீர்
வசிக்கும் புவியின் வெப்பம் குறைக்கவும்
பசிப்பிணி போக்க வேளாண் தொழிலையும்
மரம்வளர்த் தலையும் ஏற்க மறுத்து
மிரண்ட யானை வயலிடைப் புகுந்து
தானும் நிறையாது அழிப்பது போல
நெருக்கடி தன்னில் முதலிக்கு நிம்மதி
அருகுவது அல்லால் புவிவெப்ப உயர்வில்
உயிரினம் அழிவது உறுதிப் படுதே
யானையை உரிய இடத்தில் விட்டு
ஏனையோர் உழைத்து விளைப்பது போல
உலகில் சமதர்ம உற்பத்தி முறையை
நலமாய் ஏற்று உழைத்திட் டாலே
அழிவைத் தடுத்து நலமாய் வாழலாம்.

((மதம் பிடிக்காத) நல்ல யானையாக இருந்தாலும் அது வயலிடையே புகுந்தால் உண்பதை விட அதிகமான பயிர்களை அழித்து விடும் என்பது இயல்பு தான். முதலாளித்துவ உற்பத்தி முறையோ, அதைவிட அதிகமான அழிவை ஏற்படுத்துகிறது. நாம் வசிக்கும் இப்புவியின் வெப்பத்தைக் குறைக்கவும், பசிப்பிணி போக்கவும் வேளாண் தொழிலும், மரம் வளர்த்தலும் தவிர்க்க முடியாத செயல்களாகும். ஆனால் (இலாபம் குறைவாக உள்ளது என்பதற்காக) அத்தொழில்களைச் செய்ய மறுத்து, மிரண்ட யானை வயலுக்குள் புகுந்து, தானும் நிறைவாக உண்ணாது மற்றவர்களுக்கும் எதுவும் கிடைக்காத படி அழிப்பது போல, பொருளாதார நெருக்கடியினால் முதலாளிகளும் நிம்மதி இழந்து, புவி வெப்ப உயர்வினால், உயிரினங்களை அழிவுப் பாதையிலும் கொண்டு செல்கின்றது முதலாளித்துவம். யானையை வயலுக்குள் விடாதது போல முதலாளித்துவ வாதிகளை ஆட்சியில் விடாது, சோஷலிச உற்பத்தி முறையை நல்லபடியாக ஏற்று, உழைத்தால் இப்புவி அழிவதைத் தடுத்து உயிரின வாழ்வு தொடரலாம்.)

- இராமியா

Pin It