செருப்பு அணிந்த பாதம்
ஆணிக்கால் நோய்க்கு ஆளாகாது
முள் தைத்து
சீழ் கோர்த்து
முள்ளை முள்ளால் நீக்கும்
நிலையும் வராது
கடுங்கோடை வெப்பம்பட்டு
கொப்புளங்கள் காணாது
உறைபனி மிதித்து
மரத்தும் போகாது
பாதங்கள் வழியாக
நோய்க்கிருமிகள்
உடலுக்குள்
ஊடுருவவும் செய்யாது
ஒரு சாயலில்
பார்க்கப்போனால்
செருப்பு எனும்
கவசக் குண்டலங்களுடன்
நடமாடும்
கர்ண மாமன்னன்தான்
ஒவ்வொருவனும் இங்கு

கல்லும் முள்ளும்
தன்னைத் தைக்க
ஊரெங்கும்
உன்னை சுமந்தலைந்து
நாயாய்க் குழைந்து
மாடாய் உழைத்து
ஓடாய்த் தேய்ந்து
குப்பையில் வீசப்பட
அங்கும்
மக்கி எருவாகி செருப்பு
மவுனமாய்
நற்பல கடமைகள் நமக்காற்ற
நன்றி கொன்றவனான
உன்னால்
அவமானச் சின்னமானது
செருப்பு
அடிப்பேன் செருப்பால்
என்றால் யாரேனும்
அவமதித்ததாயடா என்று
சினந்து சீறி
செருப்பை
இழிவுபடுத்தும்
உனது கண்ணால்
நானும் ஒரு நாள்
செருப்பைப் பார்க்க
என்ன ஆச்சரியம்
கக்கூஸ் அறையில்
குண்டி கழுவுவதைப்
படம் பிடித்து
குளோபளைசேசன் என்று
தம்பட்டம் அடிக்கும்
அதிகார மையமெனும்
செருப்பால்
அன்றாடம் அடிபடும்
நடுத்தரமாய்
இருக்கிறாய் நீ

- வெ.வெங்கடாசலம்

Pin It