desert 600

இழுத்துப் பார்த்து விடும்
நிஜத்துக்கும்
இழுத்தாலும் உடையாது என்ற
கற்பனைக்கும்
இடையினில் தான்
சொல் பேச்சு கேட்கிறது
வளர்ப்பு யானை...
----------------------------------------------------

போதி தேடிப் பார்த்த
புத்தன்கள் மீண்டும்
சித்தார்த்தனாகவே வீடு
திரும்பினார்கள்...
மரங்கள் இல்லாத ஊரில்....
-----------------------------------------------------

காத்திருந்து காத்திருந்து
கிழவியாகியிருந்தாள்
தவறுதலாக
இறங்கி விட்ட வேற்றுக்
கிரகனின் காதலி...
------------------------------------------------------

முதல் வரிகளில்
அடுத்த வரி கிடைக்கிறது
அடுத்த வார்த்தைகளின்
போதே அதற்கடுத்த
வார்த்தை கிடைக்கிறது...
அதற்கடுத்த எழுத்து
அப்போதே கிடைக்கிறது
எல்லாம் கிடைத்த
பக்கத்தில்- கடைசியில் என்
கையொப்பம்
இடுகையில்தான்
நானும் கிடைக்கிறேன்...

- கவிஜி

Pin It