theatre 340காலத்தின் புயலால்
அலைக்கழிக்கப்பட்டு
காலாவதியான திரையரங்கம்
கல்யாண மண்டபமாகக்
காட்சியளிக்கிறது..!

கண்களின் முன்னே
கனவுகள்
நடனமாடிய இடத்தில்
மணமகன் அமர்ந்திருக்கிறான்..!

ஆரவாரச் சப்தங்கள் ஒலிக்க
பூக்கள் வீசப்பட்ட இடத்தில்
மணமகள் அமர்ந்திருக்கிறாள்..!

ஆப்ரேட்டர் ரூம்
இருந்த இடத்தில்
அடுப்பு எரிந்து கொண்டிருக்கிறது..!

கண்கள் உண்பதைக்
கண்டு இரசித்தவர்கள்
உணவு பரிமாறும் இடத்தில்
கூட்டமாக நிற்கின்றனர்..!

முதல் அமைச்சர்கள்
உருவாவதைப் பார்த்து
வளர்ந்த திரைச்சுவர்கள்
எளிய மனிதர்களின்
உறவுக் கொண்டாட்டத்தை
மெளனசாட்சியாய்
பார்த்து நிற்கின்றன..!

இணைதலும் பிரிதலும்
திரைகளில் அன்றி
தரைகளில் நடக்கிறது..!

கற்பனைகள்
கலைக்கப்பட்ட அரங்கில்
உண்மைகள் மட்டுமே
அரங்கேறுகின்றன..!

காலம்
வண்ணங்களை இழக்கிறது
வாழ்க்கை மீது..
புதிய வண்ணங்களை
வரைந்து செல்கிறது..!

எல்லோர் மனதிலும்
எல்லா வண்ணங்களும்
ஒட்டுவதில்லை..!

அவரவருக்கான வண்ணங்கள்
அவ்வப்போது வேறுபட்டுக்
கொண்டே இருக்கிறது..!

Pin It