பொருள்களின் ஆற்றலின் இயக்கம் உணர்ந்து
கருத்திலும் கரத்திலும் உழைத்திடும் மக்கள்
பிறர்துயர் அறியாது மகிழ்ச்சியில் திளையார்
புறத்தே இருந்து வளத்தை இயக்கும்
பார்ப்பரும் முதலியும் பிறர்துயர் அறியார்
தேர்ந்து தெளியாது இருவகைப் பணியும்
ஒன்றே என்று நினைப்பவர் இருப்பினும்
நன்றது பொருளின் ஆற்றலின் இயக்கமே
வளமதை இயக்குதல் மக்கள் உரிமையே

((இயற்கை வளங்களாக உள்ள) பொருள்கள் மற்றும் ஆற்றல்களின் இயக்கங்களை உணர்ந்து அறிவாலும் உடலாலும் உழைத்திடும் மக்கள் (அதாவது அறிவியல் அறிஞர்களும், தொழிலாளர்களும்) பிறருடைய துயரத்தைப் பற்றிய அக்கறை இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள். (ஆனால் அறிவாலும் உடலாலும் உழைக்காமல்) வேலை செய்யும் நிலைக்கு வெளியில் இருந்து கொண்டு, இயற்கை வளங்களை என்ன பணிகளுக்காகப் பயன்படுத்துவது என்பதைப் பற்றி மட்டும் யோசிக்கும் பார்ப்பனர்களும் முதலாளிகளும் மற்றவர்களுடைய துயரங்களைப் பற்றி அக்கறை கொள்ள மாட்டார்கள். (மூளை உழைப்பு என்பது பொருட்களின், ஆற்றல்களின் இயக்கங்களைப் பற்றிய அறிவு தான் என்றும், இயற்கை வளங்களை என்ன என்ன பணிகளுக்காகப் பயன்படுத்துவது என்பது மூளை உழைப்பு ஆகாது என்றும்) தேர்ந்து தெளிந்து அறியாதவர்கள் (அறிவியல் அறிஞர்கள், முதலாளிகள் ஆகிய) இருவரின் உழைப்பையும் மூளை உழைப்பு என்று தவறாக நினைப்பார்கள். அது சரி அல்ல. பொருட்களின் மற்றும் ஆற்றலின் இயக்கத்தை ஆள்வதே மூளை உழைப்பு ஆகும். இயற்கை வளங்களை இயக்குவது மக்களின் உரிமையான அரசியல் நடவடிக்கை ஆகும்.)

- இராமியா

Pin It