மற்றவர் தம்மை அடிமை கொள்ளும்
சிற்றினப் பண்பைப் பற்றிய முதலியே
ஆண்டான் அடிமை கொடுமை மட்டுமே
ஈண்டு தொடர்ந்தால் வினைஞர் இணைந்து
போரிடல் வேண்டும்; புவிவெப்ப உயர்வால்
சீரிய உலகு அழிவதைக் கண்டபின்
அடிமை கொள்ளும் ஆசையை விட்டு
நொடியினில் சமதர்மம் ஏற்று அழிவைத்
தடுப்பது முறையெனத் தோன்றவே இலையா?

(மற்றவர்களை அடிமை கொள்ளும் சிற்றினப் பண்பைக் கொண்டுள்ள முதலாளி வர்க்கமே! ஆளுபவர்கள் (அதாவது சுண்டுபவர்கள்) அடிமைகளைச் (அதாவது உழைப்பவகளை) சுரண்டும் கொடுமைகள் மட்டுமே, இன்று தொடர்ந்து கொண்டு இருந்தால், தொழிலாளர்கள் இணைந்து (விடுதலைக்காகப்) போரிட வேண்டும் என்பது சரியாக இருக்கும். (ஆனால் முதலாளித்துவ உற்பத்தி முறையால் தோன்றி வளர்ந்து கொண்டே இருக்கும்) புவி வெப்ப உயர்வால் சீரிய இவ்வுலகம் அழிந்து கொண்டு இருப்பதைக் கண்ட பின் (அவ்வழிவைச் சோஷலிச உற்பத்தி முறையால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும் என்பதோடு, ஏற்கனவே உயர்ந்துள்ள வெப்பத்தையும் குளிர்விக்க வைக்க முடியும் என்ற நிலையில்) அடிமை கொள்ளும் ஆசையை விட்டு விட்டு உடனே சோஷலிச முறையை ஏற்று இவ்வுலகை அழிவில் இருந்து தடுப்பது தான் முறை என்று தோன்றவே இல்லையா?)

- இராமியா

Pin It