man maskஇதோ என் வயிறு நிரம்பியாகிவிட்டது,
நாசியைத் துளைக்கும் மணமிக்க உணவுகளால்,
என் பர்ஸ் பருத்து
சற்றே உப்பித் தான் போயிருக்கிறது,
குளிரூட்டப்பட்ட அலுவலக அறையும்,
நேரத்துக்குக் கிடைக்கும் உபசரிப்புகளும் அருமைதான்,
பாதுகாப்பான, நிம்மதியான உறக்கம் தரும் வீடும் உண்டு,
வாழ்க்கையைப் பற்றி
பெரிதான கவலையேதுமில்லை தான் எனக்கு,
அடுத்தவர்களின் பசித்த வயிறுகளைப் பற்றி
எனக்கென்ன கவலை?
நாள் முழுதும் உழைத்தும்
கால்காசு சேர்க்க இயலாதவர்களைப் பற்றி எதற்குப் பேச்சு !
கல்விக் கூடங்களைப் பார்த்திராத
குழந்தைகள் என் சொந்தமா என்ன?
தெருவுக்குள் செருப்பணிந்து நடக்க
மறுக்கப்படுபவர்களைப் பற்றி நான் கவலை கொள்வேனோ?
துப்பாக்கி குண்டுகளால் சல்லடையாக்கப்பட்டு,
ஏவுகணைகளால் தகர்க்கப்பட்ட வீடு எனதல்லவே
மலக்குழிகளில் இறங்கிச் சுத்தம் செய்யும் கைகள் எனதல்லவே
என் வீட்டைக் பாதுகாக்கும் தூக்கம் தொலைத்த கண்கள் எனதல்லவே
எனக்கென்ன கவலை,
வாழ்க்கை நன்றாகத்தான் நகர்கிறது..
ஆனாலும் ஒரு சந்தேகம்,
நான் வாழ்கிறேனா அல்லது பிழைக்கிறேனா?

- வேணுகோபால்.வெ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It