நேரில் தழுவாமல்
முகம் பார்த்துப் பேசிய
இடைவெளியொன்றின் பின்
சந்தித்த வேளை அவன் சிரித்தபோது
வான தேவதைகளின் கொலுசுகள் கழன்று
விழுந்தன வாசலில்..

புத்திரப் புதையல் என்பதால்
உள்ளுர உயிர் பருகி
மகுடமாய் சூடி மகிழ்ந்தேன்
சின்னச்சின்ன கதைகள் பல சொல்லி
களிப்பிலாழ்த்தியவன்
இன்னொரு நல்ல கதை சொல்கிறேன் என..
பட்டங்கள் பற்றி பட்டியலிட்டு
கதை சொல்ல காதினுள் நுழைந்தான்

பட்டங்களில் அலாதி பிரியம் அவனுக்கு
ஒவ்வொரு நிகழ்வையும்
பட்டங்களாய் சிருஷ்டித்து வைத்திருந்தான்

அடுக்களையிலிருந்து
கூட்டமாய் வெளியேறும் புகையினை
அம்மாவின் பட்டம் என்றான்

மேலே அண்ணாந்து விரலுயர்த்தி
தெளிவற்று மின்னும் நட்சத்திரங்களைக் காட்டி
பாட்டியின் பட்டம் என்றான்
எப்போது வேண்டுமாகிலும்
உதிர்ந்து விழும் என்பதுபோல்

தாத்தாவின் பட்டம் தரையிறங்கி
தோளில் கிடக்கிறது என்றான்
துண்டைக் காட்டி

அக்காவை அவள் ஒரு பட்டம் என்றான்
நூல் கட்டி விட்டால் இந்த பூஞ்சோலைகளுடன்
எப்போது வேண்டுமானாலும்
பறப்பதற்குத் தயாராக இருக்கிறாள் என்று 

தனது பட்டம் நிலா என்றான்
நான் கேட்டேன் “சரி ஏன் தேய்கிறது?”என
தூரம் சென்று திரும்புவதாய் சொன்னவன்
உங்கள் கவனப் பிழையும்,
காட்சிப் பிழையும் என்றான்

மாமாவின் பட்டம் மட்டும்
விலை மிக உயர்ந்தது
வேலை இல்லாமல் சும்மா
வீட்டுக்குள் இருக்கிறது பத்திரமாய் என்றான் 

அப்பாவின் பட்டம் எது என்றேன்
அப்பாவுக்கு பட்டமே இல்லையென்றான்
எல்லா பட்டங்களையும்
அப்பாதான் கட்டி விடுகிறார்
உண்மையும் அதுதான்! 

- ரோஷான் ஏ.ஜிப்ரி, இலங்கை.

Pin It