ஒவ்வொரு முறையும்
தெரியாமல் செய்த தவறுக்கு
மன்னிப்பு கோரும் குழந்தைகளின் முன்
கடவுளாய்
காட்சித்தருவதாக நாமும்
சாத்தான்களாக அவர்களும்
நினைத்துக் கொள்கிறார்கள்.


குழந்தைகளுக்கு
அம்மாக்களை விட
பொம்மைகளையே பிடிக்கிறது.
அம்மாக்கள் கொஞ்சுவதைப் பார்த்து
பொம்மைகளைக் கொஞ்சும் குழந்தைகள்
கோபத்தில் அம்மாக்கள் அடிக்கும் போது
பொம்மைகளிடமே
தஞ்சமடைகின்றன.


அழுதால் கோபிக்கவும்
மகிழ்ந்தால் முத்தமிடவும்
பழக்கப்பட்ட குழந்தைகள்
பொம்மைகளிடம்
எப்போதுமே
கோபிப்பதில்லை.
 

காதலியிடம்
பெறுவதை விட
குழந்தையிடம்
முத்தம் பெறுவது கடினமாயிருக்கிறது.
ஏனெனில்
பொய்களை
மிகச்சுலபமாக
கண்டுபிடித்து விடுபவை குழந்தைகள்.


கலர் உடை தரிக்குமன்று
மெனக்கெடும் அம்மாவுக்கு
கேட்காமல் முத்தமிடும்
குழந்தைகளின் ஈரத்தில்
வழிந்தோடுகிறது பேரன்பு.


மழை வரும் நேரத்தில்
நனையும் குருவிகளுக்கு
காய்ச்சல் வராதா
எனக்கேட்கும் மகளிடம்
எந்த வார்த்தையைச் சொல்லி
ஆறுதலடையச் செய்ய முடியும்?
 

அடம்பிடித்து
அழும் குழந்தையை ஏமாற்ற
அத்தனைப் பொய்களை
உதிர்த்து விட்டு
பொய்யே பேசக்கூடாதென
போதிக்கும்
சராசரி
தகப்பன்களில் நானும் ஒருவன்.


குழந்தைகளிடம் கற்றுக்கொள்ள
அன்றாடம்
ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன.
கற்க மறுக்கும்
நமது பாவனைகளைக்
கேலி செய்தவாறு
உறங்குகின்றன குழந்தைகள்.


பெற்றோர்களை விட
பல நேரங்களில்
ஆசிரியர்களையே
குழந்தைகளுக்குப் பிடிக்கிறது.
எப்போது பார்த்தாலும்
படி படி என்பதற்கும்
ஒழுங்காகப் படி என்பதையும்
பகுத்துப் பார்க்கத்
தெரிந்தவை குழந்தைகள்.
 

சில்வர் தட்டில்
சாமி சிலைகளோடு
கையேந்தி வரும்
குழந்தைகள்
சொல்லாமல்
சொல்கின்றன
மனிதர்கள் மட்டும் தான்
எப்போதும் உதவுவார்கள் என்று.


மழை பார்த்து
மகிழும் தருணம்
தவளைகளின் குரலோசை.
மழை வராத நாட்களில்
தவளைகளுக்கு
பேச்சு வராதா
எனக்கேட்கும் குழந்தையிடம்
பதில் தெரியாத
குழந்தையாகிறேன்.

- ப.கவிதா குமார்

Pin It