இங்குவந்து ஏன்பிறந்தீர்?
 அய்யா பெரியாரே!
 எங்காவது பாலையில்
 பிறந்திருப் பீரெனில்
 அங்குள்ள ஒட்ட கங்களின்
 கூன்முதுகும் நேராக
 நிமிர்ந்திருக்கும் !
 பாலையே தன் இயல்பைத்
 திருத்திப் பயிர்விளையும்!
 
 பிறந்ததுதான் பிறந்தீர்
 வேறோரு நாட்டில்
 பிறந்திருக்கக் கூடாதா?
 அங்குப் பிறந்திருந்தால்
 தத்துவ ஞானியென்றும்
 புத்துலகச் சிற்பியென்றும்
 போற்றிப் புகழ்ந்து
 வணங்கி இருப்பாரே !

 இங்கே பிறந்துவிட்டீர் !
 எங்களுக்கு என்ன
 மருந்தை ஏற்றி
 வசியம் செய்தீர்?
 எங்களை மட்டும் ஏன்
 ஓயாத போர்க்களத்தில்;
 விட்டு விட்டுச் சென்றரீர்?
 உங்கள் உழுபடைகளாகிய
 நாங்கள் உங்கள்
 சொல்லை ஏற்றுத்
 தன்மானம் துறந்தோம்.
 இனத்திற்கு யாவுமிழந்து
 கன்னல் பாகாய்த்
 துன்பம் பலபட்டு விட்டோம்.!

 மடமையை அழிப்போமா?
 மானத்திற்குப் போராடுவோமா?
 சமத்துவத்தை உரிமையை
 இனஉணர்வை உணர்த்துவோமா?
 இவற்றுடன் இனப்பகையின்
 எதிர்நிற் போமா?

 விரல்விட்டு எண்ணும்
 அளவில்தான் இனப்பகைவர்
 இருக்கின்றார். ஆனால்……
 எம்மைச் சுற்றி எங்குமே
 இனத்துரோகிகளே எதிரில்!
 இவர்களைக் கொண்டே
 இனப்பகைவன் நம்மினத்தைத்
 தேனீக்களைக் கொல்வதுபோல்
 கொன்றும் வருகின்றான்.!
 
 நம்மினமோ
 சாதியால் மதத்தால்
 அரசியலால் மதுவால்
 பதவியால் பணப் பேராசையால்
 உடைந்த கண்ணாடிச்
 சிதறல்போல் கிடக்கின்றதே!
 
 இருப்பினும் அய்யா !
 இந்தப் பணி, எங்கள்
 மானத்தை நாங்களே காக்க
 அறிவை நாங்களே கூர்தீட்ட
 உரிமையை நாங்களே உணர
 சந்ததியரை நாங்களே காக்க
 விடுதலைக்கு நாங்களே போரிட
 என்பதை அறிவோம்.

 எங்களுக் குற்ற வலியை
 நாங்கள்தான் தாங்கிடவும்,
 எங்கள் புண்ணை
 நாங்கள்தான் ஆற்றிக்
 கொள்ளவும் வேண்டும்.
 என்பதைத் தெளிந்தோம்.

 மனிதநேய மாண்பாளரே !
 எங்கள் தமிழர்களை
 எல்லா வற்றிலி ருந்தும்
 மீட்டிட இந்தப் பணியில்
 உங்கள் கொள்கை
 ஆயுதங்கொண்டு போராடிப்,
 பிறந்ததன் பயனைப்பெற்றுப்
 பேரின்ப மடைவோம் என்று
 உறுதி கூறகின்றோம்.

 மானிடப் பரிணாமத்தின்
 உச்சி அடையாளமே!
 நன்றி பாராட்டாது
 தமிழருக் குழைத்த
 வரலாற்று நாயகரே
 வணங்கு கின்றோம்.

 - அற்புதன்

Pin It