வயதின் முதிர்வால் ஓய்வான போதும்
நயமிலா இடரால் திறனிழந் தாலும்
வினைஞர் ஆண்ட சோவியத்து நாட்டில்
அனைவர்க்கும் வாழ உரிய பொருட்களைத்
தடையின்றி வாங்கும் ஆற்றல் அமைந்ததே
உடைந்து போன நிலையில் மக்கள்
உழைப்பைப் பெரிதும் நல்கிய போதும்
பழைமைத் தரத்தில் பாதியைக் கூடத்
தக்க வைக்கும் ஆற்றல் இன்றி
மிக்க வறுமையில் வாடு கின்றாரே

(வயது முதிர்வதால் ஓய்வு பெற்றவர்களும், (விபத்துக்கள் போன்ற) நலம் பயக்காத இடர்களினால் (வேலை செய்யும்) திறனை இழந்து விட்டாலும், தொழிலாளர்களின் தலைமையில் அரசு அமைந்து இருந்த சோவியத் நாட்டில் (அவர்களுக்குக் கிடைக்கும் ஓய்வூதியத்தின் மூலம்) அனைவரும் வாழ்வதற்கு வேண்டிய பொருட்களை வாங்கும் சக்தி அமைந்து இருந்தது. (ஆனால்) அந்நாடு (முதலாளித்துவப் பாதைக்குச்) சிதைந்து போன நிலையில் பெரிதும் உழைப்பை நல்கிக் கொண்டு இருக்கும் மக்களே கூட, பழைய வாழ்க்கைத் தரத்தில் பாதியைக் கூட தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றல் இன்றி, மிகுந்த வறுமையில் வாடுகின்றனரே.)

- இராமியா

Pin It