யார் மிருகம்?

சுட்டு வீழ்த்தப்பட்ட புலி
சிறகுகளை இழந்து
சிலுவையின் வடிவில் கிடந்தது.


புன்னகையுடன் திரும்பிச் சென்றது
மிருகம்.

அம்மா

துணி துவைப்பாய்
சமையல் செய்வாய்
வீடு துடைப்பாய்
பூஜை செய்வாய்

அன்பனைத்தும் எனக்களித்து
துன்பமென வாழ்ந்திருப்பாய்

இன்று வரை நான் அறியேன்.


என் முதல் முத்தம் பெற
நீ பட்ட கஷ்டத்தை.


யார் மிருகம்?

மனிதன் படைத்த ஊரில்
வந்து சேர்ந்த யாவும்
மனிதனுக்கு அடிமையே.

நாயும், பூனையும் வீட்டுக்குள் அடிமை
குதிரையும், கழுதையும் வீதிகளில் அடிமை.

கோயில் நகரங்களில்
குரங்குகள் அடிமை
.
கிராமத்து வீதிகளில்
மாடுகள் அடிமை.

அடிமையாகாத எதுவும்
ஊருக்குள் அனுமதிக்கப் படுவதில்லை.

விரட்டி அடிக்கப்பட்ட யானைக் கூட்டம்
ஊருக்கு வெளியே
குப்பை மேடுகளில் காத்திருக்கிறது.

ஊருக்குள் வந்த முதல் மிருகம் இன்னும்
அங்கேயே இருக்கிறது.

கூலி தரும் முயற்சி

உறக்கத்தில் வரும் கனவு
ஒருநாளும் உதவாது...

உனை உறங்கவிடா கனவுகள்
ஒருபோதும் தோற்காது...

வானம் என்ன வானம்
நிலவில் கூட நீ நடப்பாய்...

நாளை என்ன நாளை
இன்றே நீ புறப்படுவாய்...

விடியும் வரை காத்திருந்தால்
வெற்றி உனதாகும்...

விடியும் முன்பே எழுந்துவிட்டால்
வானம் உனதாகும்...

அனுபவங்கள் பாடமாகும்.
படித்துவிட்டு நீ நடந்தால்,
பாதை உனதாகும்...!

கொல்லாமை சூழும் நெறி

எல்லா இனமும்
அழிந்த பிறகு மிச்சமிருந்தது
மனிதனும் ப்ராயிலர் கோழியும்...

சேராத காதல்

மகரந்தங்களை தாங்கிச் சென்ற
வண்ணத்துப்பூச்சி
குரங்கின் கையில் சிக்கிக்கொண்டது.


சிறகுகளைக் கிழித்த குரங்கு
மகரந்தங்களை
காற்றில் கலந்தது.

கடவுளின் தேசம்

பச்சை இலைகளும்
பஞ்சவர்ண மலர்களுமாய்
இருந்தது பாலைவனம்.

வெள்ளை நிற சிறுத்தை
புல்வெளியை மேய்ந்து கொண்டு
இருந்தது .

பனி மலையின் பாறை இடுக்குகளில்
குறட்டை சத்தம் கேட்டது.

என் நிழல் எல்லா திசைகளிலும்
விழுகிறது.

புறாக்கள் பருந்துகளை
வேட்டையடின.

சாத்தானின் தேசம் என்னை
சஞ்சலப்படுத்தியது.

நான் கடவுளைத் தேட
தொடங்கினேன்.

கண் விழித்தேன்.

வீதிகளும் வீடுகளும்

அடை மழையின் உச்சத்தில்
வீதிகளில் தண்ணீர்
நிரம்பியிருந்தது.

வீடுகளோ ஏரிகளை
ஆக்கிரமத்திருந்தன.

ஈரம்

வற்றிப் போன ஆற்றின்
மணல் வெளியில்
நடந்து சென்றார் கடவுள்.

அவர் பாதம் பட்ட இடத்தில்
கோவில் கட்ட வந்தது கும்பல்.

கடவுளோ சாபமிட்டு சென்றார்.

யார் அறிவார்?

வெட்டப்பட்ட மரத்தின்
கிளைகள் பசுமையோடு
இருந்தது,
சறுகாவதறியாமல்.

மனிதனும் அப்படித்தான்.

--

- பா.சதீஸ் முத்து கோபால்

Pin It