1.

பனி நிரம்பிய கண்ணாடி

பார்த்தேன்

சுட்டுவிரல்

எழுதியது

ஒன்றுமில்லை.

2.

கானகத்தின் மஞ்சள் பூக்கள்

இரவைக் கொண்டாட

எங்கும் சிவந்தது வானம்

மாலையை முடிக்க

இடம் தேடிய பறவையின்

விழிகளில் பிம்பங்களை

விலக்கியது இரவு.

3.

இலைகளுக்கிடையில்

ஊடுறுவிச் செல்கிறது

மழைத்துளி

ஒற்றை வெயில் கோடுடன்.

4.

பசுமைத் தோய்ந்த குட்டையில்

முன்னங்கால்களை

மடக்கிப் படுக்கின்றது எருமை

மெல்ல உறங்க

சுண்டுகிறது வெயில்.

5.

தேடித் தேடி

தனியே நடந்து

கணிக்க முடியாத இருப்புகளின்மேல்

அமர்ந்து கொள்கையில்

கிடைக்கிறது வேர்.

6.

கடிகாரம்

நின்று

போய் விட்டதாய்

எடுத்துப் போனாய்

இன்னமும்

ஓடிக்கொண்டேதான்

இருக்கிறது காலம்.

7.

சப்தம் எழுப்பிப் பறந்து வந்த ஈசல்

தந்தது அதன் சிறகுகளை.

8.

சாலையோர மழைநீரில்

மிதந்து செல்கின்றன

குமிழ்கள்

துளியொன்று அதன்மேல்

விழும்வரை.

9

உக்கிர வெயிலின் சாட்டைகளுக்கு

முது களித்து திமிர்ந்த

பாறையின் கம்பீரம்

குழைகிறது

நிலாவொளியில்.

 

- யாழன் ஆதி

 

Pin It