கீற்றில் தேட...

 

மரணம் குறித்த ரகசியங்களைத்

தெரிந்து கொள்வது பற்றிய

எனக்கும் கடவுளுக்குமான போரில்

கடைசி ஆயுதமென

மௌனங்களை வீசி

வென்று விட்டதாய் வீடுதிரும்புகையில்

எனது உடலுக்கு வெள்ளைத் துணி

போர்த்தப்பட்டிருந்தது

 

எவரிடமும் சொல்லாத

ரகசியங்கள் திணித்து வைக்கப்பட்டு

இறுக்கமாய்த் தைக்கப்பட்டிருக்கும்

தலையணை அழுத்தத்தின்

கடைசித் தையலுக்குள்

எனது கடைசி ரகசியத்தை ஒளித்து வைத்து

தைக்கையில் நான் வெடித்து சிதறிக்கொண்டிருந்தேன்

 

பெண்களுக்கு அருகிலிருந்தால்

காட்டிக் கொடுக்கப்படுவோம்

எனப் பயந்திருந்த

ரகசியமொன்று ஆணிடம் ஒன்றி

படுக்கையறை தலையணை ஊர்ந்து

சென்றவிடம் அவளே என

பெண்ணை அடையாத

பிரம்மச்சாரி ரகசியங்கள் தங்களுக்குள்

அலுத்துக் கொண்டன!

 

யாருக்கும் தெரியாத ரகசிய இரவொன்றில்

யாருமற்ற ரகசியத் தெரு நடையில்

தெரியக்கூடாத ரகசியக் காம முனகலொன்று

முன்னோருநாளில் யாருக்கும்

தெரியாமல் பரிமாறிக் கொள்ளப்பட்ட

ரகசிய புன்னகைகளை நினைவூட்டி

ரகசியமாய் தற்கொலைப்

பூக்களைச் தூவிச் செல்கிறது

- பரமானந்தம்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.