haneefaசிறைச்சாலையின் தனிமையில்
செடிகளோடு
பேசிக் கொண்டிருக்கிறேன்
என் கண்ணீர்த் துளிகளால்!
 
ஆயுள் தண்டனையை விடவும்
அதீத காலம் ஆனது
என் விசாரணைக் காலம்!
 
கணவன்
உயிரோடிருந்தும்
விதவைகளாகினர்!
விசாரணைக் கைதிகளின்
மனைவிகள்!  
 
ஒரு எளிய மனிதனின்
நம்பிக்கையைப் போல
சூரியனின் ஒளிக்கதிர்கள்
பரவிக்கொண்டிருந்த
காலைப்பொழுது
எனக்கு மட்டும் இருளானது!
 
கைவிலங்கிட்டு இழுத்து
செல்லப்படுகிறேன்!
என் செல்ல மகளின்
திருமண நாளன்று!
 
பூமிக்கடியில்
குழாய்க்குண்டுகளை
பதுக்கி வைத்தாயா?
 
தொடர்வண்டி செல்லும் 
வழிபார்த்து
தண்டவாளத்தைத் தகர்த்தாயா?
 
பயங்கரவாத செயல்களுக்கு
பயிற்சி அளித்தாயா?
 
உளவுத்துறையின் யூகங்களால்
தயாரிக்கப்பட்ட
மலர்வளையத்துக்கு மத்தியில்
 
உண்மைகளைப் பேச இயலாத
ஊமை நாவுகளின்
உயிர்ப்பிணம் நான்!

காந்தி தேசமே!
மதச்சார்பின்மை நாட்டில்
எனக்கான மரண தண்டனையை
நிறைவேற்றாத
உன் கருணையை என்னவென்பது?

காந்தியைக் கொன்றவனை             
தண்டித்தோம்!
அதன் காரணங்களை
உயிரோடு உலவ விட்டோம்!

"நாம் வெளியில் இருப்பதை விடவும்
சிறையில் இருப்பதே சிறந்தது!"
சிறுபான்மை மக்களைக் காக்கும்
அரசுகள் சிந்திக்கின்றன!

நீதியின் புனைப்பெயரால்
அநீதியின்  ஆவேசம் அடங்க
ஆண்டுகள் பதிமூன்றுகள் ஆயின!
விடுதலையாகி
வீடு திரும்ப!

கோலிக்குண்டு விளையாடும்
என் பேரன் கேட்கிறான்!
"வெடிகுண்டு எப்படி இருக்கும்
 சொல்லுங்க தாத்தா?"
 
பயங்கரவாதி என
முத்திரைக் குத்தப்பட்ட
நான்
எப்படி சொல்வேன்?
"பார்த்ததே இல்லை என்று"  
 
(சகோதரர் குணங்குடி அனிபாவின் சிறை வாழ்க்கைக் குறித்த கவிதை)         

-  அமீர் அப்பாஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It