தெளித்து விட்ட சிறுமணிகள்
செடியாய் உயிர்த்திருக்கு சாடிக்குள்ளே
விதையளவு செடியேது
குத்துமதிப்பாய் கணக்குப் பண்ணுது பூமி.
ஆனாலும்
விதைத்த யாவுமே முளைத்ததாயும்
வார்த்த ஒரு வாளிக்கே
பூத்துவிட்ட பூவாயும் ஆயிரத்திலொன்றாய் நான் காணும்
அபூர்வம் நீ.
முற்றத்து சாடிகளின் நடுவிலே
மரகதஞ் சூடிய பச்சைத்தேவதையாய்
தனித்தொளிர்கிறாய்
ஒவ்வொரு இயல்பிலுமான உன்தனித்துவங்களை
விரியும்
ஒவ்வொரு இளமஞ்சள் குருத்தினூடேயும்
நிரூபணம் செய்கிறாய் நீ.
சுற்றயல் சாடிக்காரிகள் நெற்றிசுருக்குவதினூடே
உணர்ந்து கொள்கிறேன்
உன் அழகீர்ப்பின் முழுமையை.
இப்போதெல்லாம்
கால்கணுக்கள் வீங்க வெண்படலம் சிவந்தெரிய
முற்றங் காவலிடல் கூட
கட்டாக்காலிகள் காந்துவிடுமென்றோ
காகம் குந்திக் கழிப்பிடுமென்றோ அல்ல
முடிச்சுப்போடும் இச்சூனியக்காரிகள்
உனை நோக்கியும் ஊதிவிடக்கூடாதேயென்றுதான்.

- கிண்ணியா எஸ்.பாயிஸா அலி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It