கீற்றில் தேட...

1
இந்த இதழின் கடைசிக் குறிப்பு இது. தற்செயலாக முதலில் எழுத நேர்ந்துவிட்டது. நினைவோட்டத்தில் அடுக்கடுக்காக முகிழ்த்தெழும் தீராத கவனங்களில் அழுதால் தீரும் துயரம் போல எழுதித் தீர்ப்பவை கொஞ்சம்தான். வயதும் காலமும் வாழ்வை எதிர்கொள்வதில் கவனப் பிசகாய் நழுவும் பேசாப் பொருள்களுக்குக் கணக்கு வழக்கில்லை.

அந்தப் புலர்காலைப் போதில் செல்பேசியில் தொடர்பு கொண்ட மலேசியத் தோழரிடம் ஒரு நினைவுக் குறுக்கீடாய், ''நாளை ஜூன் 3 அல்லவா?" என்றேன்.

தோழர் தன் வாழ்வின் பக்கங்களை மார்க்சியத்தால் நிரப்பி, தனித்தமிழ்ப் பற்றால் உயிர்ப்பித்தவர். சுதந்திர வெளியின் போராளிக் கனவுகளால் வழி நடத்தப்பட்டு தத்துவ மிதவைகளால் இழுத்துச் செல்லப்படுபவர். தேடலே இருப்பாய், தோழமையே இலக்காய், தேவைக்குத் தொழில் என்பதாய் இயங்குபவர்.

என் சுட்டலை ஒரு தீவிரக் கருத்துப் பரிமாற்றத்தின் தொடுபுள்ளியாய் அவதானித்தவராய், ''சொல்லுங்கள், ஐயா. நீங்கள் குறிப்பிட்டுச் சொல்வதால் அதற்கொரு சிறப்பு இருக்கும்தானே?" என்றார்.

அவர் என் அலைவரிசையில் இல்லை என்றாலும் நான் பிரிதொன்றுக்குத் தாவிச் செல்ல விரும்பாமல், ''நாளை கலைஞர் கருணாநிதி தன் நீண்ட நெடிய 85ஆம் பிறந்த நாளை ஆட்சியதிகாரக் கவசத்தோடு கொண்டாடும் நாள் அல்லவா," என்றேன்.

''சே, விடுங்கய்யா," என்றார். அந்தக் கணத்துக்காகக் காத்திருந்தாற்போல் அவரது பேசி செயலற்றுப்போனது. இது வழக்கமாய் நடப்பதுதான் என்றாலும் இப்போது அது இறக்கி வைத்த கனம் குரல்வளையை நெறிப்பதாய் இருந்தது. மதிப்பீடுகளின் கருணையற்ற தருணங்களில் என்னை நான் இழித்துக்கொள்வதில்லை என்பதால் நான் அதை அவமதிப்பாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. மேலும் சிறிது நேரம் தொலைபேசி அருகிலேயே அமர்ந்திருந்தேன். மனம் தொடரோட்டம் போல நிகழ்வைத் தொட்டும் தொடாமலும் தன்போக்கில் சொல்லாடிக்கொண்டிருந்தது.

இந்த உலகம் பெரியது. அதில் நாம் ஒரு சுழியத்திற்குச் சமமான சின்னஞ்சிறு துகள். நம் மனமோ நமக்குள் அடங்கிவிடும் துகளின் துகள். இந்த உலகத்தையே துகளாகச் சுருக்கிவிடக்கூடிய அண்டவெளியோ மிகப் பெரியது; மிக விரிந்தது; கங்குகரை இல்லாதது. அப்படிப்பட்ட "வெளி" யையே விழுங்கிவிடக்கூடிய விரிபேரண்டம் ஒன்று உண்டெனில் அது நம் மனத்தைவிடப் பரப்பில் சிறியதுதான். அதுதான் மனத்தின் மகத்துவம். அந்த மனம்தான் நாம். அதாவது, ஒன்றுமில்லாததும் எல்லையில்லாததுமான எதிர்மைகளைத் துல்லியப்படுத்த நாம் என்றும் மனம் என்றும், நம்மைப் பகுத்துச் சொல்லிக்கொள்கிறோம். ஆனால் பயிற்றுவிக்கப்படாத வெள்ளை மனத்துக்கு இவையாவும் புலப்பாடற்ற மயக்குறு சொற்படிமங்களே. ஆகவே நம்மில் பெரும்பாலோர், பென்னம்பேருலகில் நாம் ஒரு சின்னஞ்சிறு துகள் என்னும் பிள்ளை மதிப்பிடலைக்கூட அறிதலின் தொடக்க அலகாகப் பார்க்கப் பழகாமல் வாழ்ந்து முடித்துவிடுகிறோம். "இந்த உலகமும் நாமும்" என்னும் விரிவஞ்சி "நாமும் நம் உலகமும்" என்பதாகச் சுருங்கிக் கொள்கிறோம். நாம் எதில் கவனம் குவிக்கிறோமோ அதற்கு இசைவாகவே நம் உலகத்தைப் பாவித்துக்கொண்டு முரண்உலகத்தை அப்பால் நிறுத்துகிறோம். சமூக விஞ்ஞானம் அரசியல் விசைப் பலகையில் பந்தாடப்படுகிறது.

தோழர் மீண்டும் தொடர்பு கொண்டார்.

''நாம் வேறு பேசலாம், ஐயா," என்றார்.

'"பேசலாம்தான். ஆனால் நான் சொன்னதைப் பேசப் பிடிக்காத விஷயமாக்கி நம்மை நாமே புனிதப்படுத்திக் கொள்வதாகக் கற்பித்துக்கொள்ள வேண்டாமே. சமூக அறிவியலாளர்கள் என்னும் முறையில் நமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் நம் கண்முன்னே நிகழ்ந்தேறும் வரலாற்றை நீங்களோ நானோ பொறுப்பில்லாமல் புறக்கணித்து விடலாகாது."

''அப்படி என்ன வரலாறு?"

''ஒற்றை வாக்கியத்தில் சொல்வதென்றால் மனித மாண்புகளைப் பேணத் தெரியாத இந்த அழிசாதிக் கழிசடை சமூகத்தில் சொல்லிக்கொள்ளும்படியான அடையாளமோ, முகவரியோ, பின்புலமோ, குலப் பெருமையோ, புலமைத்தளமோ இல்லாத ஒரு சாமானியன் - அதிலும் ஆகப் பிற்படுத்தப்பட்ட ஒரு அதிசூத்திரன்- தான் வாழும் சகாப்தத்தின் புறக்கணித்துவிட முடியாத வரலாறாகத் தன்னை எடுத்து நிறுத்திக் கொள்ள முடியும் எனில், அந்த நம்ப முடியாத வரலாற்று விந்தையைக் கருணாநிதி நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்தானே? இதில் நீதிக் கட்சியின் அரசியல் கோட்பாட்டுக்கு முதல் பங்கு உண்டென்றால் கருணாநிதியின் பிறவிக் கொடையாகத் தொடரும் இடையறாத உழைப்புக்கு ஆகப் பெரும் பங்கு உண்டு என்பதை நாம் மறுதலித்துவிட முடியுமா?

''சரி, அந்த உழைப்பு யாருக்காக? எதற்காக? அதற்காக இந்த மண்ணும் மக்களும் கொடுத்த விலை என்ன?"

''இவை விமர்சனங்கள். கருணாநிதியின் வரலாற்றில் படிந்திருக்கும் கறைகளும் நிறைகளும் பற்றிய கணக்கெடுப்புக்கான விமர்சனங்கள். நான் சுட்டுவது வரலாற்றில் கருணாநிதி வென்றெடுத்த இடத்தை. அதை ஏற்பதன் அம்சமாகத்தான் விமர்சனங்களே எழுகின்றன. இன்றைய மறுவாசிப்பு யுகம் ராஜராஜ சோழனைப் பொற்காலச் சோழனாகக் கொண்டாடுவதைக் கேள்விக்குள்ளாக்குகிறது. ஆனால் அவன் பேரரசனாகக் கோலோச்சிய பார்ப்பனச் சேவகன் என்பதைக் கேள்விக்குட்படுத்தவில்லை. அது வரலாறு. கருணாநிதிக்கும் அதுதான் வரலாறு. உரிய காலத்தில் நாம் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யத் தவறி விடுகிறோம். நம்மை நாமே அங்கீகரித்துக்கொள்வதற்கு- நம்மை ஒருபோதும் தன்னெழுச்சியாய் அங்கீகரிக்காத இனப்பகையாளிகளின் தர மதிப்பீட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

இங்கு வெளிப்படையாக ஒன்றைச் சொல்லத் தோன்றுகிறது. முறைகேடான அதிகாரப் பொறுக்கித்தனங்களில் கருணாநிதிக்கு இணையான அல்லது அதனினும் கூடுதலான குற்றச்சாட்டுக்கு உரியவர்தான் ஜெயலலிதா. கருணாநிதி 50 ஆண்டுகளில் வளர்த்தெடுத்த அரசியல் தடித்தனங்களை ஜெயலலிதா அதில் ஐந்தில் ஒரு பங்கு காலத்தில் வென்றெடுத்தார். வர்ணாசிரமம் அவருக்கு வழங்கிய வசதி அப்படி. ஜெயலலிதா தன் இருப்பிடத்திலிருந்து இழுவை ரயிலில் மலை உச்சிக்குச் செல்லக்கூடியவர். கருணாநிதி அதே தூரத்தை நடந்தே கடந்து உச்சியை வசப்படுத்தியவர். ஆனாலும் ஜெயலலிதாவின் அடாவடித்தனங்களை ஒரு பராக்குப் பார்வையில் கண்டுகொள்ளாமல் நழுவவிடுவதற்கும், அவரது அரசியல் செயல்பாடுகளை வெகு நெளிவுசுளிவுகளோடும் நீக்குப்போக்கோடும் உள்ளார்ந்த கொண்டாட்ட உணர்வோடும், எங்கே இந்தப் பார்ப்பன நெல்லுக்குப் பாய்ச்சும் நீர் "திராவிடக் கட்சி" என்னும் புல்லுக்கும் போய்ச் சேர்ந்துவிடப் போகிறதோ என்னும் தள்ளிவைப்பு எச்சரிக்கை உணர்வோடும் பாராட்டுவதற்கும் ஆசீர்வதிப்பதற்கும் ஜாக்கிரதைப் படுத்துவதற்கும் எத்தனை எத்தனை ஊடகக் கைகள் கைநிறைய அட்சதையோடு கண்மறைவில் காத்திருக்கின்றன நமது சூத்திர உடன்பிறப்புகள் இல்லையென்றால் ஜெயலலிதா அரசியல் தளத்தில் நிற்க ஒரு குண்டூசித் தலையளவு நிலம்கூட இல்லை என்பது யாருக்குத் தெரியவில்லை? தன் தலைமையைப் பற்றுறுதியோடு தக்கவைத்துக்கொள்ள, கருணாநிதியால் "எடுத்தேன் கவிழ்த்தேன்" என்று மேற்கொள்ளப்பட்ட அரசியல் களையெடுப்பில் முகிழ்த்த இரண்டாம் கட்ட விளைச்சல் அல்லவா ஜெயலலிதா.

ஊடகங்கள் பதுங்கித் தாங்கும் அவரது இருப்பையும் ஜொலிப்பையும் நம்மால் பார்த்துக்கொண்டிருக்கத்தான் முடிகிறது என்பதோடு, இடைவிடாத அந்தப் பாவனைக்கு நாளாவட்டத்தில் பலியாகவும் நேர்கிறது. ஆனால் கருணாநிதி விஷயத்தில் அப்படியொரு தோழமை உண்டா? இவரது ஒவ்வொரு செயலையும் ஒளி குன்றச் செய்து உள்ளரங்குப் பகடிக்குட்படுத்துவதிலும் மலினமாகப் பொருட்படுத்துவதிலும் என்னமாய் மேட்டிமைத்தனம் விளையாட்டு காட்டுகின்றன. நமக்கும் பல உடன்பாடின்மைகள் இருப்பதால் எப்போதும்போல அவர்களையே வழிமொழிகிறோம். தர்க்கரீதியாக அது சரியாக இருக்கலாம். ஆனால், நோக்க ரீதியாக நாம் அவர்களிலிருந்து வேறுபட வேண்டிய புள்ளிகளைத் தவற விட்டுவிடுகிறோம். அதன் காரணமாக நமக்கும் நம் நலன்களுக்கும் எதிராகவே நாம் சென்றுகொண்டிருக்கிறோம். அந்த ஊடகங்களைப் பொறுத்தவரை கருணாநிதி ஒழித்துக்கட்டப்பட வேண்டியவர். ஆனால் நம்மைப் பொறுத்தவரை? அதிக பட்சம் போனால் "ஒழியட்டும் போ" என்று விட்டொழிக்கப்பட வேண்டியவர். பிறகெதற்கு இனநல அரசியலை இழுத்திழுத்து மோப்பம் பிடிப்பது? ஜெயலலிதாவை விட்டால் இன்னொரு பார்ப்பனப் பிறவி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரமுடியாது என்பதால்- காஞ்சி மடத்தைத் தன் அகம்பாவத்தால் கழுதை புரளும் புழுதிக்களமாக்கிவிட்டவர் என்றாலும் - பார்ப்பனர்கள் அவரை ஆதரிப்பதையும் கொண்டாடுவதையும் தங்கள் வாழ்வாதாரக் கடமையாக்கிக் கொண்டுள்ளனர்.

பொறுக்கித் தின்னும் கட்சி அரசியலில் நாம் வெகுவாக முன்னேறிவிட்டதாலும், அதைக் கருணாநிதிதான் கூர்மைப்படுத்தியவர் என்பதாலும் நம்மால் ஓரணியில் நின்று அவரைக் கொண்டாட முடியாது. நமது தன்மானம் - அப்படியொன்று இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கும் பட்சத்தில் - இடம் கொடுக்காது. ஆனால் அவர் வென்றடைந்த வரலாற்றிடத்தை அதே வரலாற்றுணர்வுடன் கொஞ்சம் அண்ணாந்து பார்க்க அந்தத் தன்மானம் அனுமதிக்காது எனில் அதனால் நமக்கென்ன பெருமை? வெளிச்சப் பூனைகளுக்கு கருணாநிதியின் ஒவ்வொரு அசைவும் அல்லது அசைவின்மையும் விமர்சனத்துக்குரியதுதான். ஆனால் அந்த விமர்சனத்துக்கூடாகவே, அவனவனும் கோவணத்தில் சீலைப்பேன்களை உற்பத்தி செய்துகொண்டிருந்த போது இந்தக் கலைஞன் கோவணத்தை அவிழ்த்தெறிவதையும் தனக்கான ஊக்க மருந்தாக்கிக் கொண்டு, தன் வெற்றித் தலைப்பாகைக்கு வண்ண இறகுகளை உழைத்துச் சேகரித்துச் செறுகிக் கொண்டவன். எப்படி சேகரித்தான் என்பது யாராலும் நிகழ்த்திவிடக் கூடிய விமர்சனம். அந்த விமர்சனம் இறகுகளின் நிறத்தைக் குறைத்துக் காட்டலாம். ஆனால் அவற்றின் இருத்தலை மறுத்துவிடாது அல்லவா?"

''ஐயா, நீங்கள் மூச்சுத் திணறுகிற அளவுக்கு மூழ்கிப் பார்த்து விடுவது என்று தீர்மானித்துவிட்டீர்கள். நான் காய்ச்சல்காரன். கரையில் ஒதுங்கிக்கொள்கிறேன்."

''கருணாநிதியை முன்வைத்தா?"

''அறியப்பட்ட வரலாற்றுக் காலம் தொட்டு நனி நாகரிகம் பேணிப் பங்கப்பட்டுப்போன தமிழ் மொழி, தமிழினம், தமிழ் நிலம் சார்ந்த, பொற்கனவின் மீட்டுருவாக்க அரசியல் களத்தில் உதய சூரியனைக் கண்டெடுத்தவர்கள், காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் புகுந்தாற்போல வெறும் சில்லறை மோகங்களிலேயே கனவைத் தகர்த்துவிட்டார்கள். அதைக் கனகச்சிதமாகச் செய்து முடிப்பதற்கென்றே ஆயுள் நீட்டிப்புப் பெற்றவர்தான் கருணாநிதி. அவர் வென்றெடுத்த வரலாற்றைக் கண்டு களிப்பதற்கு நெஞ்சுரம் வேண்டும் ஐயா. அது இப்போது உங்களிடம்தான் இருக்கிறது. அனாதை பிணத்தை அடக்கம் செய்ய நடைபாதையில் பாவாடை விரித்துச் சில்லறை சேர்த்தே சீமான்களானவர்கள் எத்தனை பேர்? நகை செய்யக் கொடுத்தவனுக்குச் சேதாரங்களையே கணக்குக் காட்டித் தீர்த்துவிடும் திருட்டுக் கனவான்கள் எத்தனை பேர்?"

"கண்மண் தெரியாத கோபத்தில் தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொள்வதில்லையா? அதற்கு மேல் இதில் தேற்றுவதற்கு ஒன்றுமில்லை. இதை நம் எதிரிகள் செய்யட்டும். நாமும் ஏன் அந்த முட்டுச் சந்திலேயே சென்று முடங்கிக்கொள்ள வேண்டும்? எல்லாக் காலங்களிலும் அரசியல்வாதிகள் மக்களின் பலத்தையும் பணத்தையும் சார்ந்தே வாழ்ந்திருக்கிறார்கள்; வளர்ந்திருக்கிறார்கள். அரசியல் கேணையர்கள் தங்கள் அன்றாடத் தேவைகளை மட்டுமே தொண்டர்களின் பணத்தில் நிறைவு செய்து கொண்டு கட்சி வளர்த்திருக்கிறார்கள். காமராசர் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை தெரியுமா? "நமக்கென்று ஒரு தொழில் இல்லை. வருமானம் இல்லை. நாம் எப்படி இன்னொருத்திக்கும் செலவு செய்து குடும்பத்தைக் காப்பாற்றுவது?" என்று யோசித்தே மணவாழ்வை மறுத்தார். பெற்ற தாய்க்கும் கூடப்பிறந்த சகோதரிக்கும் பணம் கொடுப்பதில் அவர் காட்டிய கருமித்தனமும் இதன் காரணமாகத்தான். எவ்வளவு பெரிய தலைவர்! எவ்வளவு பெரிய கவலை! மக்கள் அவரைத் தலைவராகப் போற்றி ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் "நாடு, மக்கள், சுதந்திரம், சத்தியம்" என்று கிறுக்குத்தனமாகப் பிதற்றிக்கொண்டு ஊரைச் சுற்றிக்கொண்டிருந்த கேணையர்தானே அவர்? பணக்காரர்களுக்கு அவர் சலுகை காட்டாதபோது அவர்கள் அப்படித்தான்அவரைத் தூற்றினார்கள். அவரின் பெருமை அறிந்து, தங்களுக்கு வசதியும் வருமானமும் இருந்தும் தாங்களும் திருமணம் செய்துகொள்ளாமல் அவரின் நண்பர்களாகப் பயணித்தவர்கள்தாம் முருக தனுஷ்கோடியும் மகாதேவனும். முருக தனுஷ்கோடி தனது தாயாருக்கு உதவுவதைக்கூடக் கட்டுப்படுத்தியவர் காமராசர்.

அரசியலில் இப்படி ஒரு கிறுக்கு மகானும் இருந்திருக்கிறார். ஆனால் இன்றைய அரசியல் கில்லாடிகளோ தங்கள் வருங்கால தலைமுறைகளுக்கும் வசதி செய்துகொண்டு பொதுவாழ்வைத் தங்களின் வணிக முதலீடுகளாக்கி இயங்குகிறார்கள். பொதுவாழ்வில் அவர்களது பங்களிப்பு என்ன, வரலாற்றில் அவற்றின் இருப்பிடம் யாது என்பது பற்றியே நான் இந்தக் கவனத்தை முன்வைக்கிறேன். உணர்ச்சிகரமான உங்கள் குற்றச்சாட்டுகளைக் கனவு காண்பவர்களின் கையறு புலம்பல் என்பதாகவே யதார்த்தவாதிகள் வரையறை செய்யக்கூடும். ஆயினும் ஒரு சுகமான கனவு மிகக் குரூரமாகப் பொய்த்துப் போனதின் சோகத்தை இதை விடக் காத்திரமாகச் சொல்லிவிட முடியாது. நானே அந்தக் குரூரத்தின் சமகாலப் பார்வையாளனும் பட்டறிவாளனும் என்பதால் அதன் வலியை என்னால் ஆழங்காண முடிகிறது.

ஆனாலும் ஒன்று நிச்சயம்: அரசியல் தளத்தில் ஒரு கனவு - அதுவும் பொற்கனவு-ஒரு நாளும் முழுமையாக மெய்ப்பட்டதில்லை. யதார்த்தங்களின் இழுபறிகளை மீறி மக்கள் வெள்ளத்தைத் தன்னோடு இழுத்துச் செல்லும் நதியைப் போல் ஒரு தலைவன் கிடைத்தால் ஒருவேளை அந்தக் கனவின் தணலை மண்ணில் விதைப்பது சாத்தியமாகலாம். நமக்குக் கிடைத்த தலைவர்களோ மக்கள் திரண்டெழுந்தபோது தங்களை உள்ளீடற்றவர்களாய்க் காட்டிக்கொண்டவர்கள்.தங்கள் இயலாமைகளை வெற்று முழக்கங்களால் மூடி மறைத்தவர்கள். ஒரு விடியலின் பரவச எழுச்சிக்குத் துணை நிற்கும் தொலைநோக்கற்ற களிமகன்கள் அவர்கள். அரசதிகாரத்தை நெருங்கும் முன்னரே திராவிடக் கட்சியினர் நம்மை நிறைவின்மைகளின் ஊமைத் தொகுப்பாக்கி முட்டுச் சந்தில் நிற்கவைத்துவிட்டார்கள் என்பதே உண்மை.

இன உணர்வை ஊட்டியவர்கள் அதற்குரிய மான உணர்வு கொண்ட மதிப்பிடத்தை இந்திய வரைபடத்தில் வென்றெடுத்திருக்க வேண்டும். மாறாக, நம்மைப் படகுகளற்ற தீவுவாசிகளாக வரையறுத்து முடக்கிவிட்டார்கள். இந்திய ஒன்றியத்தால் "இவர்கள் அபாயகரமானவர்கள்" என்று அடையாளப்படுத்தும்படியாய், அதே நேரத்தில் தமிழகத்தில் தன்மதிப்பற்ற சோற்றுப் பிண்டங்களாய் நம்மை வாழப் பணித்து விட்டார்கள். தமிழன் என்றால் கூலி என்று ஒரு பொருள் உண்டு. பொதுப்பார்வையில் அது உண்மை என்பதாகவே அரசியல் தளம் கட்டமைக்கப்பட்டுவிட்டது. தலைவர்கள் என்பவர்கள் தங்களையே விற்றுக்கொள்ளும் தரகுக் கூலிகளாகவே தகவமைத்துக் கொண்டுவிட்டார்கள். இப்படிப்பட்டதொரு அசம்பாவிதச் சூழலில்தான் கருணாநிதியின் வரலாற்றிடம் தமிழ் மண்ணில் சாதிக்க முடிந்த இன்னொருவகை அடையாளச் சின்னமாய் முதன்மை பெறுகிறது."

'"ஐயா, என் பேசியின் மின் சேமிப்பு வற்றிவிட்டது."

'"ஆனால், எனக்குச் சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது."

முதல் தடவையாக எனக்கும் அவருக்குமான இடைவெளி உறைத்தது. இதில் என் போதாமையின் பங்கென்ன? எப்படி இது நேர்ந்தது?

மனம் மீண்டும் சில கணங்களுக்குத் தன்னிச்சையாய் உரையாடிச் சென்றது:

கண் முன்னே வடிவெடுத்துக்கொண்டிருக்கும் சமகால வரலாற்றை பொற்கனவுப் புனைவாளர்கள் பொருட்படுத்துவதில்லையோ. இதில் உறைந்திருப்பது மிகையறிவுக் கற்பிதங்களோ. நீரலைகளின் ஆடுகளமாய் விரிந்து தளும்பும் ஏரியின் வடிகால் (கலிங்கி) எல்லாக் காலங்களிலும் நீராடிச் சோர்வதில்லைதானே.

2
சில நாட்களுக்குப் பிறகு அவர் மீண்டும் தொடர்பு கொண்டபோது, "'இந்த இதழில் கருணாநிதியின் பிறந்த நாள் பற்றி உங்களோடு பகிர்ந்துகொண்டதுதான் முதல் கவனமாக இடம் பெறுகிறது," என்றேன். முன்போலவே அதில் அவருக்கொருபராக்குப் பார்வை இருந்ததோடு, '"அண்மையில் பழைய சஞ்சிகைகளைப் புரட்டிக்கொண்டிருந்தபோது, தானும் மஞ்சள் துண்டு போட்டுக்க யோசிக்கறதா ஞாநி சொல்லியிருந்ததை வாசிக்க நேர்ந்தது. வேற என்ன, ஐயா?" என்றார்.

எனக்குத் திகைப்பாய் இருந்தது.

'"ஊசியில் ஒட்டகம் நுழைஞ்சதை பார்த்திருக்கீங்களே. பரவாயில்லை. பிறகு பேசலாம்," என்றதோடு அந்த உரையாடல் முடிந்தது.

ஞாநியின் நக்கல் அவருக்குப் பிடித்திருந்தது என்றே தோன்றியது. அவரது 'ஓ" பக்கங்களை தீம்தரிகிட, ஆனந்த விகடன், குமுதம் வரை தோழர் வாசித்துக்கொண்டிருக்கலாம். எழுத்துச் சுதந்திரத்தைக் காக்கவே பிறவியெடுத்த ஞாநி, பதிப்புரிமை விஷயத்தில் வெகு ஆடம்பரமாகக் குமுதத்தை அசிங்கப்படுத்திக்கொண்டு வந்தவர், இப்போது அதே பத்திரிக்கையில் தன் கடந்த கால விமர்சனத்தை மறந்துவிட்டு எழுதிக்கொண்டிருப்பது என்ன நேர்மை என்று தோழர் கேட்கவில்லை. அது அவருக்குப் பிடிபடவில்லை. பட்டிருந்தால் "இவர் பத்தி எழுதி வயிறு வளர்க்கிற ஆசாமிதானே ஐயா?" என்று கேட்கக்கூடியவர்தான். ஞாநியோடு உடன்படுவதில் உள்ள கோளாற்றை - குறைந்தது மஞ்சள் துண்டு விஷயத்திலாவது-சரி செய்துகொள்வாரா என்று தெரியவில்லை.

இதுதான் கொடுமை. என்னுடைய மக்கள் இன்னமும் இரவல் புலன்களைத்தாம் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஓரளவு விழிப்புநிலை எய்திய அறிவு ஜீவிகள் கூட இரண்டொரு தருணங்களில் தங்கள் சொந்தப் புலன்களைப் பயன்படுத்தினாலும், அனிச்சையாக இரவல் புலன்களையே, அதாவது பார்ப்பனப் புலன்களையே பயன்படுத்துகிறவர்களாக - சொந்தப் புலன்களின் மதிப்பீடுகளில் நம்பிக்கையற்றவர்களாகத் தள்ளாடுகிறார்கள். கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறியும் தனக்கான ஐந்து புலன்களையும் அவமதித்துவிட்டு - எவன் நம்மை இன்னமும் இழிவுபடுத்துகிறானோ, அவனுடைய புலன்களைக்கொண்டே நம்மை மதிப்பிட்டுகொள்வது எவ்வளவு பெரிய அவலம் அல்லது அறிவீனம்!

கருணாநிதி மஞ்சள் துண்டு போட்டுக்கொள்கிறார் என்பதை பார்ப்பன மனம் ஒரு குற்றமாகவே கருதுகிறது. அதற்கு மதச்சாயம் பூசி, மடாதிபதிகளுக்குரியதாக்கி, புனிதச் சின்னத்தை ஒரு சூத்திரன் பயன்படுத்தித் தன்னைப் புனிதனாகக் காட்டிக் கொள்ள முயல்கிறானோ என்று வன்மம் கொண்டு நக்கல் செய்கிறது. கடவுள் நம்பிக்கையற்ற கருணாநிதியின் மூடநம்பிக்கை என்று தன் உமட்டலை, ஒரு புனைவின் மேல் ஏற்றி, பெரியாரியவாதிகளையே, "அட, ஆமாம்" என்று நம்பச் செய்து குதர்க்கம் செய்கிறது. அப்பாவிச் சூத்திரன்களும் அதை அப்படியே குமட்டியெடுத்துத் தங்கள் மேதைமையைப் பறை சாற்றிக்கொள்கின்றனர். ஒரு பேச்சுக்குத்தான் கேட்கிறேன், கடவுள் நம்பிக்கையற்றவர்கள் முட்டாள்களாகவோ மூடநம்பிக்கையாளர்களாகவோ இருக்கக் கூடாதா? அதாவது முட்டாள்தனமும் மூட நம்பிக்கையும் பக்திமான்களுக்கு மட்டுமே உரிய பவிசுகளா? ஒரு நம்பிக்கை வழிவழியாக வந்த கலாச்சார நம்பிக்கையா, மூட நம்பிக்கையா என்பது எதைக்கொண்டு அளக்கப்படுகிறது?

எனக்குக் கடந்த 18 ஆண்டுகளில் கடவுள் நம்பிக்கையே அற்றுப் போய்விட்டது. அதற்கு முன்பிருந்தே மூன்று நம்பிக்கைகள் எனக்குண்டு. ஒன்று, ஒற்றைப் பார்ப்பான் எதிரில் வந்தால் நல்ல அறிகுறி. இரண்டு, செவ்வாய்க்கிழமை தொடங்கும் செயல் வெற்றிகரமாக முடியும். மூன்று, நான் மழையில் நனைந்து சென்றால் செல்லும் நோக்கம் நிறைவேறும்.

சிறுவயதில் என் ஊரிலிருந்து கிழக்கே எட்டு கி.மீ. தொலைவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் படித்துவந்தேன். பள்ளியிலிருந்து தெற்கே எட்டு கி.மீ. தொலைவில் என் தாய் மாமன் வீடு. பள்ளிக்கு ஏதேனும் கட்டணம் (ஒற்றை இலக்க ரூபாய்கள்தாம்) கட்ட வேண்டுமானால், அம்மாவால் அதைச் சமாளிக்க முடியாமல் போகும்போது அதைப் பெற மாமா வீட்டுக்கு மாலையில் செல்வேன். பல சமயம் மழையில் நனைந்து கொண்டே செல்வேன். மழை வந்து நனைவது எனக்குப் பணம் கிடைத்துவிடும் என்பதற்கான நம்பிக்கையின் அறிகுறி. மறுநாள் பணத்தோடு பள்ளிக்கு வந்து விடுவேன். ஒருநாள் மழையில் நனைந்து சென்றும் மாமா பணம் இல்லை என்று சொல்லிவிட்டார். எனக்கு அவமானமாக இருந்தது. அன்றே என் நம்பிக்கை குலைந்திருக்க வேண்டும். ஆனால் மாமா வயலுக்குச் சென்றதும் வீட்டில் இருந்த துவரையைக் கொட்டி எடுத்துக்கொண்டு சென்று யாரிடமோ விற்றுப் பணம் பெற்று வந்து எனக்குக் கொடுத்துவிட்டார் எனது அன்பான மாமன் மனைவி. இப்போது அந்தக் கரிசனத்தை நினைத்தாலும் கண்கள் சுரக்கின்றன.

பணம் தேவைப்படாத நாட்களிலும் மழையில் நனைந்து சென்றதும், நனையாத நாட்களிலும் பணம் பெற்று வந்ததுமான சம்பவங்கள் அந்த நம்பிக்கையைக் கேள்விக்குட்படுத்தவில்லை. மற்ற இரு நம்பிக்கைகள் பற்றிப் பார்ப்பனக் கருத்தியல்வாதிகளுக்குக் குற்றம் சொல்ல ஏதும் இருக்காது என்று நினைக்கிறேன். இதுபோன்ற சிறுசிறு விஷயங்கள் கவனத்தில் உறைக்கும்படி தொடர்ந்து நடந்துவிட்டால் அவை சந்தோஷம் தரும் நம்பிக்கை அம்சங்களாக மனிதர்களை ஆசுவாசப்படுத்துவதுண்டு. சிறு வயதில் நான் படித்த ருஷ்ய நாவல்களில் கதைத்தலைவிகள் குருட்டாம் போக்கில் புத்தகத்தைத் திறந்து விரலால் தொட்டு, தொட்ட சொல்லின் பொருளுக்கேற்ப சகுனம் பார்ப்பார்கள். அப்போது நாமே நற்சொல்லாகி அவர்களுக்கு ஆறுதல் தரக்கூடாதா என்று மனம் கிடந்து மறுகும். அது போலொரு மனத்துக்குப் பிடித்த செயலாகத்தான் கருணாநிதியின் மஞ்சள் துண்டு விவகாரமும் வந்து ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும்.

இந்த நம்பிக்கைகள் எப்போது மூடத்தனமாக மாறும்? நான் உடனடியாகப் புறப்படவேண்டிய தருணத்தில் ஒற்றைப் பார்ப்பான் வருகைக்காகக் காத்திருந்து என் வாய்ப்பை நழுவவிட்டாலோ, "நான் மஞ்சள் துண்டு போட்டுக் கொள்ளாமல் ஒன்றுக்குப் போக மாட்டேன்" என்று அடம்பிடித்து நடுக்கூடத்தில் தன் துணியை நனைத்துக்கொண்டாலோ அது மூடநம்பிக்கை ஆகும். அது உதவாக்கரை மூடநம்பிக்கை என்பதை அதனால் ஏற்படும் நட்டமே மெய்ப்பித்துவிடுகிறது. இதிலுள்ள ஒரேஒரு நெருடலான அம்சம் என்னவெனில், "வெயிலுக்குக் கருப்புக் கண்ணாடி பிடிக்கிறாற்போல் மஞ்சள் துண்டு மனசுக்குப் பிடிச்சிருக்குப்பா" என்று தன் எளிய மனச் சாய்வை வெளிப் படையாகச் சொல்லிவிட்டுப் போகாமல் சந்தர்ப்பத்துக்கேற்றவாறு அதற்கு விளக்கம் சொல்லிச் சமாளிக்க முயன்ற கருணாநிதியின் அசட்டுத்தனந்தான். கருணாநிதி போன்ற பெரிய மனிதர்களுக்கு இந்த வகை அசட்டுத்தனங்களே அரசியல் விலாசங்களோ என்னவோ.

இங்கே நான் இன்னொன்றையும் தோழருக்கு நினைவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளேன். அண்மையில் நேபாளத்தில் வெற்றி பெற்ற மாவோயிஸ்டுகள் அவர்களின் தலைவர் பிரச்சன்டா உட்பட நம்மூர் ப.ஜ.க.காரர்களைப்போல் நெற்றி முழுக்க குங்குமத்தைத் தீற்றிக்கொண்டு காட்சியளித்தார்கள். நேபாளத்தோடு தோழருக்குப் பரிச்சயம் உண்டு என்பதால், "என்ன இவர்கள் இந்து மாவோயிஸ்டுகளா?" என்று கேட்டேன். "அதை அவர்கள் தங்கள் கலாச்சாரமாகப் பேணுகிறார்கள், ஐயா," என்றார். "இந்துக் கலாச்சாரத்தின் கடைசிப் புள்ளி சாதி ஏற்றத்தாழ்வுதானே?" என்றேன். "இதை ஆராய வேண்டும்," என்றார். இது மஞ்சள் துண்டைவிட மோசமான கலாச்சாரமாக எனக்குப் பட்டது.

குறைந்தபட்ச புத்திசாலித்தனத்தோடு வெகு இயல்பாகப் புரிந்து கொள்ளக்கூடிய சிறுசிறு நிகழ்வுகள்கூட கருணாநிதி சம்பந்தப்பட்டுவிட்டால் வெகு கோளாறாகவே பார்க்கப்படுவது அவரது வளர்ச்சியோடு கூடவே ஒட்டிக்கொண்டுவரும் வழக்கமாகிவிட்டது.

3
அண்மையில் புட்டபர்த்தி சாய்பாபா அவரது இல்லத்திற்குச் சென்றிருந்தார். (இராம கோபாலன் கூடச் சென்றார்தான். அப்போது எழாத பிரச்சினை இது.) கருணாநிதியின் வீட்டுப் பெண்கள் சாய்பாபாவை வணங்கி வாழ்த்து பெற்றனர். உடனே விமர்சனம் வெடித்தது. "தன் வீட்டுப் பெண்களைக் கூடத் திருத்த முடியாத இவர் என்ன நாத்திகர்" என்னும் சுயமரியாதைக் குறைவான விமர்சனம் அது.

"உலகத்தில் ஒரே ஒரு கிறிஸ்தவர்தான் உண்டு. அவர்தான் ஏசுகிறிஸ்து" என்று சொல்லப்படுவதுண்டு. பெரியாரைப் பற்றியும் அப்படியொரு சொல்லாடலை உருவாக்கலாம்.

பெரியார் தனது முதல் பத்திரிகையைத் தொடங்கும் வரை கடவுளைக் கேள்விக்குட்படுத்தாதவராகவே வாழ்ந்துள்ளார். அடிநிலையில் எல்லாரும்போல அவரும் ஒரு உடைமைச் சமூகத்தின் ஆணாதிக்கவாதியாகவே அடையாளப்பட்டிருந்தார். சமூகச் சிக்கல்களில் கவனம் குவியக்குவியத்தான் தீவிர பகுத்தறிவுக் கருத்தாக்கங்களால் ஈர்க்கப்பட்டு ஒரு தனித்துவமாக முற்றிக் கனிகிறார். (எனக்கு அவரிடத்தில் ஒரு வருத்தம் உண்டு. பின்னாளில் தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் பற்றியெல்லாம் யோசித்துச் செயல்பட்டவர் தமது புதிய கருத்தாக்கங்களுக்கு ஏற்ப புதிய சொல்லாக்கங்களை உருவாக்க முயலாமல் தவிர்த்துவிட்டார். மாறாக, பழைய கறைபடிந்த சொற்களையே தமது புதிய கருத்தியல் தளத்திலும் பயன்படுத்துகிறார். சான்றாக, விலைமாதர்களைக் குறிக்க விபச்சாரிகள், வேசிகள் போன்ற இழி சொற்களே பயன்படுத்தப்பட்டன. இன்றைக்கு அவர்கள் "பாலியல் தொழிலாளர்கள்" என்று ஓர் அடையாள நேர்மையோடு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பெரியார் தன் எழுத்திலும் பேச்சிலும் விபச்சாரிகள் என்னும் சொல்லையே அதிகம் பயன்படுத்துகிறார் - இழிவு செய்வதற்காக அல்ல, விழித்தெழச் செய்வதற்காக.)

பெரியார் ஒரு பகுத்தறிவுவாதி, சுயமரியாதைக்காரர், சாதி - மத - கடவுள் மறுப்பாளர். இவற்றின் மொத்த அடையாளமான பார்ப்பனர்களையும் பார்ப்பன தர்மங்களையும் கடுமையாகத் தோலுரித்துக் காட்டியவர். இச்செயல்பாடுகளோடு அவரது சமூக நீதிச் செயல்பாடுகளையும் ஒன்றுசேர்த்து தராசின் ஒரு தட்டில் வைத்து அதற்குச் சமமாக இன்னொரு தட்டில் வைப்பதற்குக் கனமான விஷயம் உண்டென்றால் அதுதான் பெரியாரின் பெண்விடுதலை கருத்தாக்கங்கள். உலகத்திலேயே அவருக்கு இணையாக, எல்லா மிகை எல்லைகளையும் தொட்டு பெண் விடுதலை பேசியவர் இந்தக் கணம்வரை அவரைத் தவிர ஒருவரும் இல்லை. அப்படிப்பட்ட மகத்தான களப்பணிதான் இன்று வெறும் வாய் உபச்சாரச் சுட்டலாகவே, செயல்தளத்தில் முதன்மை பெறாத பதுங்கு பொருளாகவே கைவிடப்பட்டிருக்கிறது. கைவிட்டவர்கள் வேறு யாரும் அல்லர். பெரியாரியவாதிகள் என்று சொல்லி மார்தட்டிக் கொள்கிறவர்கள்தாம். அவர்கள்தாம் கருணாநிதி வீட்டு பெண்களின் செயல்களுக்காக அவரை எகத்தாளமாக விமர்சிப்பவர்கள்.

பெரியாரால் கந்தல் கந்தலாகக் கசக்கி உலர்த்தப்பட்ட ஒரு விஷயம்தான் பெண்களின் மீது வல்லடியாகத் திணிக்கப்பட்டுப் புனிதப்படுத்தப்படும் கற்பு என்பதாகும். அந்தக் கற்பை மெழுகுப் பதமாய் உருக்கி வார்த்து, பெண்ணடிமைத் தனத்திற்குத் தங்க முலாம் பூசி "இதுதான் எங்கள் தமிழ்ப் பண்பாடு" என்று உயர்த்திப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள்தாம் இன்றைய பெரியாரியவாதிகள் அல்லது பெரியாரை மிதித்துக்கொண்டு மேலேறிச் சென்ற தமிழியவாதிகள். கண்ணகியை நீதிக்குப் போராடியவள் என்பதற்கும் மேலாக கற்புக் கடம் பூண்ட பொற்புடைத் தெய்வம் என்பதாகவே கொண்டாடுகிறவர்கள் இவர்கள். இதற்குக் கருணாநிதியும் விலக்கல்ல. ஆனால் அவரையும் மீறி அவரது புழங்குதளத்தில் பெண்கள் தங்கள் பொதுவாழ்வின் அடையாளங்களை மீட்டெழுதிக் கொண்டு விடுகிறார்கள் என்பதுதான் சிறப்பு. அது அவருக்கு உழைக்காமல் கிடைத்த ஊதியம் போல.

பெரியாரியவாதிகள் அல்லது திராவிடக் கட்சிக்காரர்கள் அல்லது தமிழ் பண்பாட்டாளர்கள் பெரியாரிடமிருந்து முற்றாக முரணிய இடம் இதுதான். பெரியார் பெண் விடுதலையை ஏதோ தன் இயக்கக் கடமையாக மட்டும் முன்னெடுக்க வில்லை. மாறாக பெண்களின் இருப்பை, அவர்களது சுயத்தை வெகு இயல்பாகவும் காத்திரமாகவும் அங்கீகரித்தவர். அவருக்கு இணையாகவே அவரது துணைவியாரும் சகோதரியும் பொது வாழ்வில் பங்கு பற்றியவர்கள். இன்றைக்குள்ள பெருந்தலைகளில் எத்தனை பேர் தங்கள் வீட்டுப் பெண்களைப் பொதுமக்களுக்கு அறியப்படுத்தியுள்ளார்கள்? தாங்கள் கலந்துகொள்ளும் கூட்டங்களில் நாற்காலி பொம்மைகளாகக்கூட அவர்களை அழைத்துவந்து அமர வைப்பது இல்லை. கற்புக்கடம் பூண்ட பொற்புடைப் பெண்டிற்கு இது அழகல்ல என்பது அவர்களது அடிமனப் பிடிவாதம்.

பெரியார் காலத்தில் அவரது இளம் தொண்டர்கள் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார்கள். மூத்த தொண்டர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு அவ்வாறே செய்துவைத்தார்கள். அத்திருமணங்களை அந்தக் காலத்தில் "கலப்புத் திருமணம்" என்றே அழைத்தார்கள் - ஏதோ குதிரையும் கழுதையும் கட்டிக்கொண்டு கோவேறு கழுதைகளைப் பெறப் போவது போன்ற ஓர் அர்த்தத்தில். தங்கள் பெண்கள் - பிள்ளைகளுக்குச் சாதி மறுப்புத் திருமணம் செய்துவைத்தவர்கள் தங்கள் இச்சைப்படி, தங்கள் புகழுக்காகத்தான் செய்தார்களே தவிர அந்தக் குழந்தைகளின் சம்மதத்தைக் கோர வேண்டும் என்றுகூட நினைக்கவில்லை. இதிலும் அவர்களின் ஆணாதிக்க மனோபாவம்தான் பின்னப்படாமல் தன்னைக் காப்பாற்றிக்கொண்டது. சாதி மறுப்புத் திருமணங்கள் பலவற்றிலும் அடிநிலை சாதியினர் பெரும்பாலும் அவமானம் சுமந்து அந்நியப்படுத்தப்படுகிறவர்களாகவும், பாரம் சுமந்து சிதைக்கப்படுகிறவர்களாகவுமே நோகடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கருணாநிதியும் ஒரு ஆணாதிக்கவாதிதான் என்பதில் சிறிதளவும் சந்தேகப்பட வேண்டியதில்லை. எனினும் புட்டபர்த்தி வருகை விஷயத்தில் தான் ஒரு கடவுள் மறுப்பாளர் என்றாலும் தன் வீட்டுப் பெண்களின் ஆசிபெறும் ஆசையை அங்கீகரித்தவராகவே கண்ணியம் காத்தார் என்றே இதைப் பார்க்கத் தோன்றுகிறது. இரண்டு பெண்கள் ஒருத்தரையே விரும்பிய போது தனக்கு விருப்பம் இல்லை என்றாலும் அவர்கள் விருப்பத்தை மறுக்கக்கூடாது என்பதற்காகவே திருமணத்தை நடத்திவைத்தவர் பெரியார். பெரியாரிடமிருந்த ஏதேனும் ஓர் அம்சம் தென்பட்டாலும் அந்த மனிதனைப் பெரியாரியவாதியாக ஏற்கலாம் என்றால், மற்றவர்களை விடத் தன்னை எப்படி தவிர்க்க முடியாத தலைவராக நிறுவிக் கொண்டாரோ அதுபோலவே கூடுதல் தகுதியுள்ள பெரியாரியவாதியாக நடந்துகாட்டத் தெரிந்தவர்தான் கலைஞர் கருணாநிதி.

இத்தனைக்கும் அவருக்குப் பெரியார் என்னும் ஆளுமையின் மேல் மரியாதை உண்டே தவிர, பெரியார் என்னும் நபர்மீது பற்றோ பாசமோ கொண்டவர் என்று சொல்லிவிட முடியாது. கருணாநிதியும் அவரது மனசாட்சி என்று அறியப்பட்ட முரசொலி மாறனும் தங்கள் முரசொலிப் பத்திரிகையில் பெரியாரைச் சிறுமைப்படுத்தி எழுதியவர்கள்தாம். அவர்கள் இருவரும் உறவினர்கள் என்பதோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம். அவர்களது அரசியல் கூட்டானது தர்க்கத்துக்குத் தகுதியில்லாதது. கருணாநிதி தமிழினத் தலைவராக அறியப்பட்ட அதே நேரத்தில் "தமிழ் படித்தால் டேபிள்தான் துடைக்கலாம்," என்று பகடி பண்ணிப் பழித்தவர்தான் முரசொலி மாறன். அதெல்லாம் பழங்கதை என்று ஒதுக்கிவிட்டு மேலே செல்ல வேண்டியதுதான்.

4
கருணாநிதி மீது துடைத்தெறிய முடியாத பழியாக மேலும் ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. 1971இல் மதுக்கடைகளைத் திறந்துவிட்டார் என்பதுதான் அந்த குற்றச்சாட்டு. அதுவரை மதுவிலக்கு நடை முறையிலிருந்த மாநிலம் தமிழ்நாடு. மதுக்கடை திறப்பு ஒரு சமூகப் பொறுப்பற்ற, ஒழுக்கமற்ற, தடித்தனமான குற்றச்செயலாக எப்படி மாறுகிறதெனில், மூதறிஞர் ராஜாஜி தன் தள்ளாத வயதிலும் கொட்டும் மழையைக் கூடப் பொருட்படுத்தாமல் கருணாநிதி வீடு தேடிச் சென்று மதுக்கடைகளைத் திறக்க வேண்டாம் என்று கை கூப்பிக் கெஞ்சிய பிறகும் அதை அவர் ஊதாசீனப்படுத்திவிட்டார் என்பதனால்தான். குல்லுகப் பட்டர் என்று அழைக்கப்பட்ட ராஜாஜிக்கு மூதறிஞர் பட்டம் கொடுத்துப் பதவி உயர்த்தியதே கருணாநிதிக் கும்பல்தான். மற்றபடி அவர் எப்போதும்போல இராஜநாகம் போலொரு இராஜகோபாலாச்சாரியாகத்தான் இருந்தார்.

மது அருந்துவது ஒன்றும் பாவச் செயலல்ல. ஆம் எனில் அது உலகளாவிய பாவச் செயல். தமிழனுக்கு அது தொல்புகழ்க் கலாச்சாரத் தொடர்ச்சி. அவன் கும்பிடுகிற தெய்வங்களும் போதை ஏற்றிக்கொண்டுதான் தன் மக்களுக்கு அருள்வாக்கு சொல்லும். ராஜாஜி அதைச் சமூகத் தீமையாகக்கூட அல்லாமல் ஒரு பாவச் செயலாகவே பட்டியலிடுகிறார். இன்று மது அருந்தாத பார்ப்பானை நீங்கள் கண்டுபிடித்துவிட முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. வேத காலத்திலும் அது சோமபானம் சூரியபானம் என்னும் பெயரில் பாபவிமோசன பானமாகவே பார்ப்பனக் கூட்டம் அருந்தி மகிழ்ந்தது. இடைப்பட்ட காலத்தில்தான் புதிய பார்ப்பனக் கலாச்சாரக் கூறாகத் தங்கள் பாவப் பட்டியலில் (தென்னாட்டு அசகாயச் சூத்திரனிலிருந்து தன்னைப் பேதப்படுத்திக் கொள்வதற்காக) மதுவையும் மாமிசத்தையும் சேர்த்துக்கொண்டார்கள். தமிழ்மானம் பேசும் கருணாநிதிக்கு அது ஒளவை காலத்து கலாச்சாரம். ஒளவை காலத்தில் சீமைச் சாராயம் ஏது? போதை ஊறிய புளித்த கள்ளைத்தான் குடித்திருப்பாள். தன் தோழன் அதியமானுடன் சேர்ந்து பகிர்ந்து கொண்ட போதை அது. ஆகவே, தமிழ்ச் சமூகத்திற்குக் குடிக்க வாய்ப்பளிப்பதில் கருணாநிதிக்கு எவ்வித உறுத்தலோ வருத்தமோ இருந்ததில்லை; இருக்கத் தேவையில்லை.

வேண்டுமானால் குடிப்பழக்கம் சமூகப் பிரச்சினையாக முற்றாமல் தடுக்க சமூக ஆர்வலர்கள் அரசுக்குச் சில பரிந்துரைகளை முன்வைத்திருக்கலாம். அரசுகள் மக்கள் நலன் காப்பவை என்றொரு மூடநம்பிக்கை நிலவி வருவதால் இந்தப் பரிந்துரைகள் இன்றியமையாதவைகளாகின்றன. மதுவின் பயன்பாட்டை அரண் செய்யும் நடவடிக்கைகளையும் அரசே முன்னெடுக்க வேண்டும் என்பது சரியான கோரிக்கையாகவே இருக்கும். இன்று அரசே மது தயாரிப்பிலும் விற்பனையிலும் ஈடுபட்டிருப்பதால் அரண் செய்யும் காரியங்களையும் அரசே செய்வது எளிதாயிருக்கும். கோரிக்கைகளை இவ்வாறு வரிசைப்படுத்தலாம்: 1. சாராயக் கடைகளைத் திறந்த கையோடு கள்ளுக் கடைகளையும் திறக்க வேண்டும். 2. மதுக் கடைகளை மாலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்க வேண்டும். 3. ஒவ்வொருவரும் அவரவர் வருமானத்திற்கேற்ப அதிகபட்சமாக எவ்வளவு குடிக்கலாம் என்பதற்கு அடையாள அட்டை வழங்கிப் பதிவு செய்ய வேண்டும். அந்த அட்டையில் அவனது ஊதியம், வீட்டு உறுப்பினர்கள் எண்ணிக்கை, குடும்ப வருமானம், குடியால் நேரும் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கு குடும்பத்திற்குள்ள வாய்ப்பு, அரசு மருத்துவர்களின் காலமுறை நோய்க்கூறு ஆய்வு முதலிய தகவல்களை இணைக்க வேண்டும்.

4. கள்ளச்சாராயச் சாவைத் தடுக்க காவல்துறையையே இழப்பீடு வழங்கச் செய்ய வேண்டும். 5. சினிமா அரங்குகளையும், மதுக் கடைகளையும், இன்னும் குறிப்பாக தொலைக்காட்சி ஒளிபரப்பையும் மாலை 6 மணிக்கு மேல்தான் செயல்பட அனுமதிக்க வேண்டும். இது வேலையற்றோரின் சோம்பேறிக் கனவுகளைக் கணிசமாகக் குறைக்கும் வழியாகும். 6. எவ்வழியிலும் வேலை கிடைக்காதவர்களுக்கு அரசே வேலை அளிக்கவேண்டும். சுற்றுச்சூழல் மாசு களைதல், ஏரி-குளங்களைத் தூர் வாருதல், பராமரித்தல், முதியோர்களுக்குக் கல்வியளித்தல், துப்புரவுப்பணி செய்தல் ஆகிய சமூக மேலாண்மைச் செயல்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். 7. கடும் உடல் உழைப்பாளிகளுக்குத் தேவைப்பட்டால் அரசே மலிவு விலையில் மது வழங்க வேண்டும். இக்கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப் படாவிட்டால் அரசு மதுக்கடைகளை உடனடியாக மூடுவதோடு 4ஆம் கோரிக்கையைக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

அரசை மண்டியிட வைக்க ஆயிரம் வழிகள் உண்டு. அவற்றுள் ஒன்று மக்கள் குடிப்பதைப் புறக்கணிப்பது.

கருணாநிதி மதுக்கடையைத் திறந்தது அரசு வருமானத்தைப் பெருக்குவதற்காகவே. கூடவே கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கான புதிய உத்தியாகவும் அது விளம்பரப்படுத்தப்பட்டது. ஆயினும் ராஜாஜியிடம் பொங்கி வழிந்த சமூக அக்கறையையும் லோக சேமத்தின்பால் அவருக்கிருந்த தீராத பற்றையும் முன்வைத்து கருணாநிதி தூற்றப்பட்டார். இங்கு ராஜாஜியின் சமூக அக்கறையைப் பற்றி நாம் கொஞ்சம் தெரிந்துகொண்டாக வேண்டும். அவர் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியபோது அதனால் ஏற்படும் வருமான இழப்பை ஈடுகட்ட என்ன செய்தார் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். அவர் செய்ததெல்லாம் 2400க்கு மேற்பட்ட அரசுப் பள்ளிகளை இழுத்து மூடியதுதான். இது எந்தவகை சமூக அக்கறை? எந்தச் சமூகத்துக்கான அக்கறை? அதே காலகட்டத்தில் இன்னொரு ஆணையும் கொண்டுவந்தார். அதாவது, பொற்கொல்லர்கள் தங்களை ஆச்சாரி என்று அழைத்துக் கொள்ளக்கூடாது, அவ்வாறு அழைத்து ஆச்சாரிப் பார்ப்பனர்களை (குறிப்பாக ராஜகோபாலாச்சாரியை) இழிபடுத்தக் கூடாது என்பதுதான் அந்த ஆணை. அவர்தான் ராஜாஜி. அதுதான் ராஜாஜியின் புகழ் மிக்க சமூக அக்கறை. இதற்கு எந்த வகையில் குறைந்துபோயிற்றாம் கருணாநிதியின் நிர்வாக அக்கறை?

5
உடைமைக் கலாச்சாரத்தில் ஊறிய இந்தியச்சமூகத்தின் பொதுப்புத்தியில் காலங்காலமாய்ப் படிந்துபோன அடிமைக் குறியீடாக ஒரு அளவீடு உண்டு. ஆட்சி செய்கிறவன் மாற்றுக்குறையாத சாதிமானாய் இருக்க வேண்டும்; பெண் எனில் குலமகளாய் இருக்க வேண்டும் என்பது அந்த அளவீடு. இங்கு குலமகள் என்பது சாதியோடு கற்பையும் சேர்த்துக் குறிக்கும் சொல். விடுதலையும் குடியரசும் (பெரியார் நடத்திய பத்திரிகைகளைக் குறிப்பதல்ல.) இந்த மனோபாவத்தில் எவ்வளவோ மாற்றங்களைக் கொண்டுவந்திருக்க வேண்டும். ஆனால் கொண்டு வரவில்லை. சாதி ஒழியவில்லை. குறைந்தபட்சம் அதன் கொலைவெறி மூர்க்கம் கூடக் கொஞ்சமும் தணியவில்லை. விடுதலைப் போராட்டமானது வெள்ளையனை வெளியேற்றத்தான் நடைபெற்றது. சாதியும் தீண்டாமையும் வெள்ளையன் கொண்டுவந்த சரக்கல்ல, அவனோடு வெளியேறுவதற்கு. இந்தப் புண்ணிய பூமியின் அரும்பெரும் செல்வங்கள் அவை! அவற்றைத் தக்கவைத்துக் கொள்ளவும் தழைத்திடச் செய்யவும்தானே விடுதலை வென்றெடுக்கப்பட்டது? இங்கே குடியாட்சியின் வெற்றி என்பது சாதிக்கு இளைத்தவர்கள் தங்கள் இழிமைகளை இழந்துவிடாமல் ஏதோ ஒருவகை இடைச் செருகலில் சமூகத்தால் உள்வாங்கப்பட்டுவிட்டனர் என்பதுதான். இந்த உள்வாங்கலானது சாதிக்கும் தீண்டாமைக்குமான எழுதப்படாத அங்கீகாரமாக இங்கே பேணப்பட்டு வருகிறது.

ஆகவே, சாதி இருக்கும் வரை இந்திய மனக்குகையில் ஆள்கிறவனைப் பற்றிய சாதி அளவீடு பாறையில் படர்ந்தோடும் உலோகக் கோடுபோல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். இந்தியச் சமூகத்தில் நடக்கும் அதியற்பமான விமர்சனங்கள் அல்லது வசவுகள் யாவும் சாதியைப் பற்றியதும் கற்பைப் பற்றியதும் தான். இந்தியக் கயமைக்கு இந்த இரண்டிலும் இழிந்தவர்களாக முத்திரைக் குத்தப்பட்டவர்களைக் கண்டால் பிடிக்காது.

திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தலைச் சந்திக்கும் நாள் வரை, பெரியாரின் கொள்கைகளுக்குப் புதுப் பாய்ச்சல் கொடுக்க வந்த இளைஞர் பட்டாளமாகவே செயல்பட்டது; கருதப்பட்டது. தேர்தல் அரசியலில் நுழைந்தபோது அணுகுமுறைகளில் சிறுசிறு மாற்றங்கள் ஏற்படினும் வெளி மனிதர்களின் மதிப்பீட்டில் பெரிய வேறுபாட்டைப் பெற்றுவிடவில்லை. மூன்றாவது தேர்தலிலேயே ஆளுங்கட்சியாகத் தூக்கி நிறுத்தப்பட்டபோது தி.மு.க.காரர்களுக்கே அது நம்ப முடியாத கனவாக, பொறுப்பற்றுப் பேசித்திரிந்தவர்களைப் பிடித்து வந்து அரசுக்கட்டிலில் அமரவைத்து உடனடியாகத் தண்டித்ததைப்போல ஒரு மலைப்பு ஏற்பட்டது. இதில் ஆட்சி என்றால் சூழ்ச்சி என்பதில் தொடக்கம் முதலே மிகத் தெளிவாகப் பொருட்படுத்திச் செயல்பட்டவர் கருணாநிதி மட்டுமே. அரசியல் களத்தில் கருணாநிதியின் முதல் கண்டுபிடிப்பே "தமிழகம் எனது தகுதிக்கு மேலானதல்ல" என்பதாய் இருந்திருக்க வேண்டும். "உனக்கு மிஞ்சி இந்த உலகத்தில் ஒன்றுமில்லை" என்னும் உபதேசமே ஒரு குழந்தையின் முதல் மூச்சாய் இருக்கக்கூடும் எனில் கருணாநிதிக்கு அதுவே வரமும் சாபமும் ஆகும்.

காலங்காலமாக ஆட்சியதிகாரத்தைச் சுவைத்துக்கொண்டிருந்த ஒரு பத்து சதவீத பெரியதனக்கார சாதியாள்களும் அவர்களது மனோபாவங்களை உள்வாங்கிக் கொண்டிருந்த ஓடும் பிள்ளைகளும் அண்ணாவையே முதல்வராக ஏற்றுக்கொள்ளும் மனத்தயாரிப்பில் அப்போது இல்லை. "கூத்தாடிப் பசங்க ஆட்சிக்கு வந்துட்டாங்களே" என்பது அவர்களது ஆற்றாமையும் ஆச்சரியமுமான ஆதங்கமாய் இருந்தது. (இத்தனைக்கும் சினிமா- நாடகங்களின் நேரடிப் பங்களிப்பார்கள் அண்ணாவும் கலைஞரும் மட்டுமே. மற்ற பெரும்பாலான இளைஞர்கள் "கௌரவமான" குடும்பத்திலிருந்து வந்து குழுமிய படித்த "தான்தோன்றிகளே." ஆனால் அடுத்தடுத்து முதலமைச்சரானவர்கள் அந்த இரண்டு கூத்தாடிகள்தாம் என்பதும் கவனம் கொள்ளத் தக்கது.) இந்த ஆற்றாமையின் அரசியல் வசனம்தான் பக்தவச்சலத்தின் "தமிழ்நாட்டில் விஷக் கிருமிகள் பரவிவிட்டன" என்னும் புகழ்பெற்ற வாசகம். விஷக்கிருமி என்பதற்கு குலப் பெருமையற்ற பதடிகள் என்பது உள்ளுறை விளக்கமாயிருந்தது.

அண்ணாவுக்குப் பின் கருணாநிதி முதலமைச்சரான போது தமிழ்நாட்டில் யாரை வேண்டுமானாலும் தலைமைப் பொறுப்பில் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்துவிட்டது. இது ஒருவகையில் சாதிச் சமூகத்தின் கையாலாகாத்தனம் சார்ந்த பக்குவமே. ஒரு சந்தர்ப்பத்தில் பிரணாப் முகர்ஜியின் கீழ் வேலை பார்த்தவர் மன்மோகன்சிங். இப்போது அவர் பிரதமர். அவரின் கீழ் பிரணாப் வேலை செய்யும்படியான நிலைமை. இதே தலைகீழ் மாற்றத்தைச் சட்டத்தால் அரண் செய்யப்படாத சாதி மதிப்பீட்டுக் குலைவில் போட்டுப்பாருங்கள். கருணாநிதி முதலமைச்சாராக வரும் முன்பே, அதாவது தன் அயராத உழைப்பாலும் சூழ்ச்சித் திறத்தாலும் தனக்கான அசைக்க முடியாத இடத்தைக் கட்சிக்குள்ளும் பொது வாழ்விலும் நிறுவிக் கொண்ட காலம் முதலே குலத்தாழ்ச்சி பேசுவோரின் மனவெளியில் தான் மரியாதைக் குறைவாகக் கவனப்படுவதை அவர்அறிந்திருக்க வேண்டும். பொதுத் தளத்தில் வெளிப்படையற்றுப் பதுங்கும் உடைமைச் சாதிய மனவெளி அது.

ஒவ்வாமையின் வெளிப்பாடாகச் சில உணர்வலைகளையும் சுழிப்புகளையும் குதர்க்கமாகப் படரவிட்டுக் கொண்டிருக்கும் மன விகாரம். ஆனால் தலைமறைவாகத் தனியறையில், திமிர்சாதி ஒருங்கிணைப்பில், மிகவும் தணிவாகவும், அதே நேரத்தில் சகித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியற்றுப் போன கையறு நிலையிலும் வெளிப்பட்ட மனக்கோணலின் சொல்லுதிர்ப்பைப் பல இடங்களிலும் சந்தர்ப்பங்களிலும் நான் செவி மடுத்ததுண்டு. கருணாநிதிக்கெதிரான இந்தச் சாதித் தூற்றலை தெருவோரத்தில் விழுந்து கிடந்த ஒரு குடிகாரனின் வாயிலிருந்துதான் நான் முதன்முதலில் கேட்க நேர்ந்தது. அவன் ஊரறியக் கூவியபோது, அவனது அறைகூவலை அவ்வழியே நடமாடிய தமிழ்ச் சமூகம் வெகு இயல்பாகவும் கொஞ்சம் விஷமச் சிரிப்போடும் கேட்டு நடந்தபோது, "ஆகா! இது எவ்வளவு அப்பட்டமான கபடச் சமூகம்!" என்று திகைத்துப்போனேன். இது 1971இல் கருணாநிதி மதுக்கடைகளைத் திறந்தபோது புதுவெள்ளம்போல் பெருக்கெடுத்த குடிகாரர்களிடையே கருணாநிதியைத் தலைவராக ஏற்றுக்கொண்டவனே போட்ட கூச்சல். அதன் பிறகு அதுபோன்ற நகையாடல்களைக் கேட்க நேர்ந்தபோது, அரசியல் களத்தில் கருணாநிதி தன் போட்டியாளர்களை அல்லது எதிராளிகளைத் தலைதூக்க முடியாமல் அடித்து நொறுக்கி ஒன்றுமில்லாமல் ஆக்கித் தன்னைத் தற்காத்துக் கொள்வதையே வெற்றிப் படிகளாக்கிக் காட்டுகிறார் என்று எனக்குத் தோன்றுவதுண்டு.

ஒருமுறை புரசைவாக்கத்தில் இருந்த, ஒரு காலத்தில் "கேரளத் தென்றல்" என்று சிலாகிக்கப்பட்ட கி.மனோகரன் வீட்டுக்குச் சில நண்பர்களுடன் சென்றிருந்தபோது, "கலைஞர் தன்னை தலித் வீட்டு சம்பந்தி என்று சொல்லிப் பெருமிதப்பட்டுக் கொள்கிறாரே" என்று ஒருவர் வினவ, "அவர் பிறவிக்கு அதைவிட வேறென்ன பெருமை கிடைத்துவிடப் போகிறது?" என்று மற்றவர்களின் ஏளனச் சிரிப்புக்கிடையே சொன்ன மனோகரன் தன் சந்தனத் தடியை உருட்டிக்கொண்டே அடுத்த 10 நிமிடங்களுக்கு கருணாநிதியை சாதிரீதியாக இழிவு படுத்திப் பேசிக்கொண்டிருந்தார். நான் அப்போதோ அல்லது வெளியே வந்தோ என் சட்டைப் பையில் மடித்து வைத்திருந்த தாளில் எழுதிய வாசகம் இன்னும் என் நினைவில் இருக்கிறது: "சாதிப்பெயர் சொல்லி ஏளனம் செய்கிறவன் தான் எந்தச்சாதி அப்பனுக்குப் பிறந்தவன் என்று தன் அம்மாவிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது".

நான் ஒருமுறை பெரியாரியவாதி ஒருவரைப் பார்த்து, ''திராவிட இயக்கமும் திராவிடக் கட்சியும் சாதிக்கு அப்பாற்பட்டவைதானே?" என்று கேட்டேன்.

''ஆனால், சாதி நமக்கு அப்பாற்பட்டதாய் இல்லை. அதனால்தான் இயக்கத்தை சாதிக்கப்பாற்பட்டதாக கற்பித்துக் கொண்டிருக்கிறோம்," என்றார். பெரியாரியவாதிகள் இப்படியெல்லாம் தத்துவம் உதிர்ப்பார்கள் என்று நான் எதிர்பார்த்ததே இல்லை. இந்தச் சமூகத்தில் சாதி மட்டும்தான் உண்மை. பஞ்சுக்குள் மறைந்திருக்கும் அழுத்தமான பருத்திக் கொட்டை போன்றது அது. மற்றவை அனைத்தும் அதை ஒளித்து வைத்துக்கொண்டிருக்கும் மெல்லிய பஞ்சிழைகள் போன்றவைதான். அந்த இழைகளை இழுத்துப் பார்த்தால்தான் தெரியும் கொட்டையோடு அவை எவ்வளவு கெட்டியாய்ப் பிணைக்கப்பட்டிருக்கின்றன என்று.

ஜெயலலிதா முதல்வர் ஆனபோதும் இதேபோன்றதொரு பேச்சலை மிதந்தது. "சினிமாக்காரிதானே. அதுவும் சினிமாக்காரனின் ஆசை நாயகிதானே" என்றொரு இழிதகை பிம்பம் அவர்மேல் ஏற்றப்பட்டு நகையாடப்பட்டது. ஆனால் அந்த இழிவிலிருந்து மீள அவருக்குச் சாதி கை கொடுத்தது. அவரொரு பாப்பாத்தி என்னும் தீயில் அவர் மேல் படிந்த தூசுகள் யாவும் எரிந்துபோக, சமூக மனம் தனக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அவரை வணக்கத்திற்குரிய உயர்குலப் பெண்மணியாகவே தலையில் தூக்கிவைத்துக் கொண்டது. கருணாநிதிக்கு அப்படியொரு வாய்ப்போ தப்பித்தலுக்கான வழியோ சமூகம் வழங்கவில்லை. தனித்த பேச்சுகளில், அசந்த சந்தர்ப்பங்களில், மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை சாதிச்சீழ் ஒழுகும் எகத்தாளமான இந்தவகை துக்கிரிப் பேச்சு தொடர்ந்துகொண்டேதான் இருந்தது. இப்படி வெட்டவெளிச்சமான சாதியைப் பற்றி மீண்டும் மீண்டும் பேச முடியாமல் போனபோது அதையே அந்த மனிதனின் பின்புலத் திரைச்சீலையாக்கிக் கொண்டு அதன் வண்ணத்திலேயே அவனை இடைவிடாமல் இம்சிப்பது போன்றதே கருணாநிதி யைப் பற்றி இன்றுவரை தொடரும் கண்மூடித் தனமான எதிர்விமர்சனங்கள் என்றால் மிகை யில்லை. வேண்டாத வீட்டுக்காரன் கை பட்டால் எரிச்சல் கால் பட்டால் குடைச்சல் என்பது போலத்தான் இதுவும்.

சாதிகளிலேயே கீழ்ச் சாதியாகப் "பறைச்சாதியை" எட்ட நிறுத்தி, இந்து சமூகம் இழிவைப் பொழிவ\துண்டு. ஆனால் மற்றவர்களோடு சேர்ந்து பறையர்களாலும் இழிவாகப் பேசப்படும் ஒரு சாதி உண்டு. எல்லாச் சாதிகளுக்கும் பொதுவான வசைச்சொல் ஒன்றுண்டு. அதுதான் "தேவ்டியா முண்டை". திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதிய கால்டுவெல் பறையர்கள் பற்றிக் கூறும்போது, "அப்படியெல்லாம் ஆதாரமில்லால் பறையர் சாதியை இழிவாகச் சுட்டிவிட முடியாது. எல்லாச் சாதிகளையும் போல பறைச்சாதியும் தனக்கென்று ஒரு வரையறையும் பெருமிதமும் தனித்துவமும் தொல்புகழும் கொண்டதே. அது ஒன்றும் விலக்கப்பட்டவர்களாலோ உதிரிகளாலோ சாதிவிலக்கம் பெற்றவர்களாலோ குற்றவாளிகளாலோ கலப்படம் செய்யப்பட்டு உருவான சாதியல்ல. தென்னிந்தியாவில் கலப்படச் சாதி என்று ஒன்றைச் சுட்டலாம் எனில் அது தேவதாசி சாதியை மட்டுமே. மனு சொல்வதைப் போன்ற சாதிக் கலப்படங்கள் தென்னிந்தியாவில் வேறு எந்த சாதியிலும் நிகழவில்லை" என்று அடித்துச் சொல்கின்றார். ஆகவே சமூகத்தில் சாதிப் பெருமிதங்களற்ற சாதியாக எல்லோராலும் சுட்டப்பட தேவதாசி சாதியே இருந்தது.

தேவதாசிகள் "சாதி காப்பாற்றாமை" என்னும் ஒரு அம்சத்தை தவிர வேறு எந்த விதத்திலும் எந்த நிலையிலும் இரண்டாம் பட்சமானவர்கள் அல்ல. மனித வாழ்வின் உயர்ந்தபட்ச நாகரிகத்தைக் கலையம்சத்தோடு சேமித்து வாழ்ந்தவர்கள் அவர்கள். மாவீரன் என்று அறியப்பட்டவன்கூட அவர்கள் முன்னே ஒருகணமேனும் தன்னைக் காட்டுமிராண்டியாக அறியத்தக்கவனாவான். அவர்கள் தேவதாசிகள் - அதாவது தேவர்களின் தேவைகளை நிறைவு செய்கிறவர்கள். ஆகவே தேவர்கள் மட்டுமே அவர்களுக்கு நிகரானவர்கள். தேவர்கள் என்று எந்தச் சிறப்புப் பிறவிகளும் உலகத்தில் இல்லாமையால் அவர்களின் பூலோகப் பிரதிநிதிகளாகப் - பூசுரர்களாகத் தங்களை முன்னிருத்திக்கொண்ட பிராமணர்களே அவர்களுக்குத் தந்தையும் தலைவனுமாய் இருக்கத் தக்கவர்கள். தேவதாசிகளுடைய ஆண் பிள்ளைகளின் இருப்பையும் அவர்களது பார்ப்பனச் சகோதரத்துவத்தையும் பற்றி ஒரு பேச்சும் இல்லை. பொது வெளியில் தேவதாசிகள் சூத்திரர்களைத் தொடுவதைக்கூட அருவருப்பாக்கித் தங்களை மேன்மக்களாகக் காட்டிக் கொண்டவர்கள். அவர்களது வாழ்வே கற்பிதமும் கற்பனையும் மிக்கதொரு அழகிய புனைவு. இந்தக் கற்பிதமும் கற்பனையும் வழித்தெறியப்படும் போதுதான் ஒருவன் அவர்களை "தேவ்டியா" என்று அசூயைப்படுவது நடக்கிறது.

இப்போது இந்த வாழ்வும் வழமையும் சமூக அங்கீகாரத்தில் முற்றாகத் தீர்ந்து தூர்ந்துவிட்டதென்றே சொல்லலாம். இன்றைய காலகட்டத்தில் அவர்களும் வரையறுக்கப்பட்ட பிற சாதிகளைப் போல் இசைவேளாளர் என்னும் பெயரைத் தாங்கித் தங்களை இல்லறப்படுத்திக்கொண்டு புதிய தலைமுறையை வளர்தெடுத்தாயிற்று. ஆயினும் தன் கோணல் பார்வையை மட்டும் இந்தச் சமூகம் முற்றாக விலக்கிக்கொள்ள மறுக்கிறது. நாடார் சாதி, வன்னிய சாதி போன்றே இசைவேளாளர் சாதியும் பட்டியல் சாதியாக வேத சாஸ்திரங்களின்படியோ பிராமண வழிகாட்டலின்படியோ ஒருபோதும் சேர்க்கப் பட்டதில்லை என்பதால், கால மாற்றத்தில் அவர்கள்மேல் படிந்த இழிவெச்ச விழுமியங்கள் யாவும் ஒருநாள் காணாமல் போய்விடக்கூடும். அவர்கள் போற்றி வளர்த்த இசையும் பரதமும் இன்று புதுப் பெயர்களில் பார்ப்பனச் சொத்தாகத் தத்தெடுக்கப்பட்டுவிட்டதைப் போல் அவர்களில் பலரும்கூட புதிய பார்ப்பனர்களாய் மாறிக்கொள்ளும் வாய்ப்பும் வசதியும் பற்றிக்கொள்ளப்படலாம்.

இந்தியாவில் சாதியை மாற்றிக்கொள்ள முடியாது என்பதுதான் பொதுவான விதி - நம்பிக்கை - சாஸ்திர உண்மை. ஆனால் பார்ப்பனர்களாய் மாற முடியும் என்பதற்கு இராமானுஜர் முன்னுதாரணங்களைக் காட்டிச் சென்றிருக்கிறார். இது சாதி மாற்றம் என்பதல்லாமல் இன மாற்றம் என்னும் வகையைச் சார்ந்தது. "திருக்குலத்தார்" பலரை பூணூல் அணிவித்து இராமானுஜர் பிராமணர்களாக மாற்றியது ஒன்றும் கதையல்ல. அந்தப் புதிய பிராமணர்கள் வெறும் சடங்கால் மட்டுமன்றி மரபணுக்களாலும் அசல் பிராமணர்களாக வரையறுக்கப்பட்டுவிட்டார்கள் என்பதே உண்மை. அண்மையில் காலமான எழுத்தாளர் சுஜாதாகூட அப்படி அசலுக்கு மாறிய நவ பிராமணராகத்தான் இருக்க வேண்டும். எவன் தன் பிராமண மேன்மையை திரும்பத் திரும்ப முன்மொழிந்து பிறரை இழிவுபடுத்தத் துடிக்கிறானோ அவன் இப்படியாகப் பிறவியெடுத்துப் புதுப்பார்ப்பனக் கொடி வழியில் வந்தவனாகத்தான் இருக்க வேண்டும். புதிய மதம் மாறிகள் பழைய மதக்காரர்களைவிட அதிகத் தீவிரமும் மதச் சுத்தமும் பார்ப்பதில்லையா? அது போன்றதுதான் இதுவும்.

மரபணு ரீதியான மாற்றம் சாத்தியமா என்றால் அதில் ஒன்றும் சந்தேகம் வேண்டியதில்லை. உலகம் பூராவும் இனக் கலப்புகள் இப்படியாகத்தான் நேர்ந்து வருகின்றன. அதற்கொரு கால அளவையும் பிறவிக் கெடுவையும்கூட நிர்ணயிக்க முடியும். இந்திய அனுசரிப்பின்படி அது ஏழு தொடர் பிறப்புகளில் நிகழ்ந்தேறக் கூடியதாகக் கருதப்படுகிறது. இதைத்தான் ஏழு பிறவிகள் - ஏழு ஜென்மங்கள் என்று சுட்டுகிறார்கள். இது ஒருவனே ஏழுமுறை பிறப்பதாகப் பிழைபட அர்த்தம் கொள்ளப்படுகிறது. பார்ப்பன ஓட்டைஉடைசல் சாஸ்திரப்படியேகூட ஒரு மனிதன் ஏழு முறை மனிதனாகவே பிறப்பதென்பது அவன் மாற்றமோ வளர்ச்சியோ பெறாததைத்தான் குறிக்குமே தவிர இனமாற்றத்துக்கான வழிமுறை அதுவல்ல. இன்றைக்குத் தூய பார்ப்பான், தூய சூத்திரன் என்று ஒருவனும் இல்லை. எல்லாரும் கலப்படப் பிறவிகள்தாம். மனோபாவங்கள்தாம் பழைய கட்டுக் கோப்பிலேயே காப்பாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அதனால்தான் இன்று பார்ப்பானாய் அறியப்படுகிறவனைவிடப் பார்ப்பன எதிர்ப்பாளன் பார்ப்பன மனோபாவத்தை வரையறை செய்ய வேண்டியவனாகிறான்.

இந்தக் கலப்படத்தில் பார்ப்பன மரபணுக்கள் அதிகமுள்ளவனைப் பார்ப்பனனாகவும் சூத்திர மரபணுக்கள் அதிகமுள்ளவனைச் சூத்திரனாகவும் பெயரிட்டு நாமே கற்பித்துக் கொள்கிறோம். இந்த மரபணு மிகை என்பது 50 விழுக்காட்டுக்கு மேற்பட்ட அளவைக் குறிப்பது. ஒரு பழைய சான்றாக, இராமானுஜரால் பார்ப்பனராக்கப்பட்ட திருக்குலத்தார்- அதாவது பறையர் ஒரு பார்ப்பனப் பெண்ணை மணந்துகொண்டு ஒரு குழந்தையைப் பெறுகிறார் எனில் அது ஒரு பிறவி - அல்லது ஜன்மம் என்று கொள்க. அந்தக் குழந்தை வளர்ந்து பார்ப்பன சம்பந்தம் கொண்டு ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தால் அது இரண்டாவது பிறவியாகிறது. இப்படியே ஏழு முறை தொடர்ந்து பார்ப்பன சம்பந்தம் மூலமாகவே ஏழாவது பிறவியாகப் பிறக்கும் குழந்தை மரபணு ரீதியாகவே அறிவியல் அங்கீகாரம் பெற்ற பார்ப்பனக் குழந்தையாகிவிடுகிறது. இந்த இன மாற்றம் முழுமையடைவதற்கு சென்ற நூற்றாண்டு வரையான கணக்கில் நூற்றைம்பது முதல் நூற்றென்பது ஆண்டுகளே போதுமானது. இனத்தூய்மையை இன்னும் துல்லியப்படுத்திக் கொள்ள ஈரேழு ஜன்மங்கள் எடுப்பதெனில் காலத்தை அப்படியே இரட்டிப்பாக்கிக் கொள்ள வேண்டியதுதான். இது ஒரு வகையில் அசுரர்கள் தங்களைச் சுரர்களாக்கிக் கொள்ள நடத்தும் இல்லறத் தவம் என்று சொல்லலாம். புற நிலைத் தரவுகளால் எனக்குச் சரி என்று படும் இக்கருத்துக்காக இதன் மூலப்படியின்மேல் சொந்தம் கொண்டாடுபவர்களுக்கு எனது நன்றி. இவ்விவகாரத்தில் நவீன உதாரணம் ஒன்று சொல்வதெனில் சன் குழுமத்தைச் சேர்ந்த மாறன் சகோதரர்கள் பார்ப்பன இனமாற்றச் செயல்பாட்டில் ஏற்கனவே இரண்டு பிறவிகள் முடித்துவிட்டார்கள். (பின்புலத்தில் கருணாநிதிக்கும் அவர்களுக்குமான உறவென்பது கண்ணுக்குத் தெரியாமலே வெள்ளரிப்பழம் தன் காம்பிலிருந்து கழன்று கொள்வதைப் போன்றதுதான்.) முதல் பிறவியிலேயே பார்ப்பனராகவே உணர்ந்து, நடை பழகி, பார்ப்பன ஆதரவில் சுகம் வளர்த்து, பார்ப்பனச் சாய்மானத்திலேயே பலம் பெற்றுத் திகழ்வதென்பது ஒருவரது பேராசைக்கும் சரணாகதிக்கும் கிடைக்கும் வெற்றி. அதற்கு மேலும் அவரவர் கொடுப்பினையையும் விற்பனையையும் பொறுத்த விஷயம். நாம் சொல்வது அறிவியல் ஏற்புக்குரிய இனமாற்றச் செயல்பாட்டைத்தான். அதற்கு அவர்கள் இன்னும் ஐந்து பிறவிகள் காத்திருக்க வேண்டும்.

இங்குதான் கருணாநிதி தன் பெருமிதம் மிக்க சுயமரியாதையோடும் சுய ஆளுமையோடும் தனித்துயர்ந்து தலைநிமிர்த்துகிறார். முழுக்கமுழுக்கத் தன்னை ஒரு பிறவிப் பெரியாரியவாதியாக, பெரியாரியத்தின் நடைமுறைச் சின்னமாக, நிலமதிர உதைத்தெழுந்து தன்னை நிலை நிறத்திக்கொள்கிறார். இந்தியச் சாதிச் சமூகத்தின் மேல்நிலையாக்கக் கருத்தாக்கத்தைப் பொருட்படுத்தத் தகாததொரு தெருப்புழுதியாகப் புறந்தள்ளித் தன் இல்லம் முழுதையும் சாதி மறுப்புத் திருமணங்களால் நிறைத்து, சாதியற்ற சமூகத்தின் முன்னுதாரணக் கட்டமைப்பாளராகத் தன்னை முன்னிருத்துகிறார்!

இந்த மகத்தான பங்களிப்பின் விளைவைப் "பலபட்டறைக் குடும்பம்" என்று கள்ளக் குரலில் பகடி செய்யும் தமிழ்த்தேசியர்கள் இருக்கவே செய்கிறார்கள். நீங்கள் முகஞ்சுளித்து, "'இதை உங்கள் பலபட்டறைப் பண்பாடாகக் கொள்ளலாமா?" என்றால், வெடுக்கென முகம் திருப்பிக்கொண்டு உங்களோடு பிறவிப்பகை பாராட்டுவார்கள். இன்னும் சிலர், ''சும்மா தமாசுக்குச் சொன்னால் என்னையே பலபட்டறையாக்கிட்டீங்களே. தலைவன் எவ்வழி, தொண்டனும் அவ்வழி. தமிழ் வாழ்க!" என்று தங்கள் பொய்யொழுக்கத்தை மெய்போல் பறை சாற்றுவார்கள். ஒரு வெள்ளாளன், "சாதி பார்ப்பதில்லை" என்று சொன்னால் புல்லத்துப் போகிறவன், அதையே ஒரு பறையன் சொல்லும் போது காரித்துப்புகிறான் என்றால் அவனை நீங்கள் எப்படி அடையாளப்படுத்துவீர்கள்? கழிசடைத் தமிழ்ச் சாதியானாகவா, அல்லது கலாச்சார மீட்பனாகவா?

பார்ப்பன மதம், வேதம், கடவுள், சாதி, மொழி என அனைத்தையும் தோலுரித்துக் காட்டுவதில் பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைக்கு அரண் செய்தவர் கருணாநிதி என்பதுதான் பார்ப்பான் ஒருபோதும் அவரை மன்னிக்க மாட்டாமைக்குக் காரணம். "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பது தன் கட்சியின் கொள்கையாயினும், தன் கொள்கை அப்படியொருத்தன் இல்லவே இல்லை என்பதை ஆரவாரத்தோடு சொல்லக்கூடிய ஒருவர் தமிழ்நாட்டு முதல்வராய் வர முடியும் எனில் அவர்தான் கருணாநிதி என்பதுதான் அவரடைந்த உச்சம்.

இந்தியாவின் ஆட்சியதிகார வரலாற்றில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆள்கிறவன் இந்தியனாயினும் அந்நியனாயினும், வெற்றிகரமான அரசாள்கை என்பது பார்ப்பனர்களை அரவணைத்தும் அனுசரித்தும் போவதுதான் என்பது எழுதப்படாத நடைமுறைச் சட்டம். தமிழ்நாட்டிலும் களப்பிரர் காலத்திற்கு முன்பிருந்தே அதுதான் நிலவரம். இதுநாள் வரையிலும் குருவி சேர்ப்பதைப் போலத் தான் சேமித்து நிறைத்த செல்வமும் செல்வாக்கும் சிறிதும் சேதாரமில்லாமல் காக்கப்பட வேண்டும் என்பதற்காக அவ்வப்போது மேலெழும் பார்ப்பன நிர்பந்தங்களை சில நேரங்களில் கொஞ்சம் கூடுதலான விட்டுக்கொடுப்புகளோடுகூட கருணாநிதி எதிர்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. ஆட்சியதிகாரம் தன் கைவசமுள்ள காலங்களில்கூட அவர் நினைத்ததையெல்லாம் சாதித்துவிட முடிவதில்லை என்பது இதில் அடக்கம்.

உதாரணமாக, விவேகானந்தர் இல்லத்தைச் செம்மொழி அலுவலகமாக்க அவரால் முடியவில்லையே. அப்படியொரு ஆசையை ஒரு சின்னத் துணுக்காகக் கொளுத்திப் போட்டதுதான் தாமதம். பார்ப்பனக் கும்பலும் பார்ப்பன அடிமைக் கும்பலும் அவர் ஆசைக்கெதிராகப் பிலுபிலுவென்று பிறாண்டத் தொடங்கியதும் வெகுநல்ல பிள்ளையாய், "அரசுக்கு அப்படியொரு யோசனையே இல்லை. இது தேவையற்ற பேச்சு" என்று சொல்லி ஏறக்கட்டிவிட்டு அதே சாலையில் வேறோர் இடத்தில் அதற்கான அலுவலகம் தொடங்கப்பட்டுவிட்டதே. "இந்த அரசு ராஜீவ் கொலை வழக்குக் குற்றவாளி நளினியை விடுதலை செய்ய உத்தேசித்திருக்கிறது. அது நீதியை அவமதிக்கும் செயல். ஆகவே எதிர்த்து வழக்காட என்னையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்" என்று சுப்பிரமணியன் சாமி தாக்கல் செய்த மனுவை, "அரசு, நளினியின் விடுதலையை எதிர்த்து மனு தாக்கல் செய்ய இருக்கிறது. இதில் சுப்பிரமணியன் சாமியின் குறுக்கீடு தேவையற்றது" என்று சொல்லித்தானே தள்ளுபடி செய்ய வைக்க முடிந்தது. தன்னால் தூற்றப்பட்ட தாளிலும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் தன் வயிற்றுப் பாட்டுக்குப் பத்தி எழுதிப் பிழைக்கும் ஞாநியின் சீண்டலைக்கூட இவரால் சமாளிக்க முடியவில்லையே. தன் இனமான எழுத்துலகப் பிரம்மாக்களையெல்லாம் ஒன்று திரட்டியல்லவா புலம்பி அழவேண்டி இருக்கிறது. அப்படி அழுவதிலும்கூட கருணாநிதியின் கலைத் திறன் ஒன்று உண்டு. தன்னை அசைக்க வரும் அசட்டுப் பார்ப்பானுக்குக்கூட அதீத மரியாதை கொடுப்பதைப் போலப் பாசாங்கு காட்டி அவனுக்குப் பின்னே உள்ள பட்டாளத்தை வலுவிலக்கச் செய்யும் வல்லமைதான் அது.

குமுதம் ரிப்போர்ட்டர் (17.7.2008) கருணாநிதியின் ஒரு கதைவசனத்தை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் பதவி ஏற்றவுடன் ஆலோசனை வழங்கும்படி கேட்டுச் சென்ற தங்கபாலுவிடம் "'ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமாக தேசியமாகி வருகிறேன். முழுவதும் மாறிவிட வேண்டுமா?" என்று சிரித்துக் கொண்டே குறிப்பிட்டாராம் கலைஞர். ஆக, தேசியமாவதைக் கருணாநிதி அறிந்தே, அளந்தே செய்கிறார். அதொன்றும் அவரது ஆனந்தலஹரியில் நேரும் அற்புத நிகழ்வல்ல. அதற்கான பலாபலனை அவர் கணிக்காமல் மெனக்கிடுகிறவரல்லர். தமிழனாய்த் தன்னை அறுதியிட்டுக்கொண்டும் தேசியமாகலாம். அதைத் தள்ளிவைத்துவிட்டும் ஆகலாம். இதில் எது தப்பிக்கும் வழியோ அது கருணாநிதியின் தேர்வாயிருக்கும். "பதவி என் தோளில் கிடக்கும் துண்டுக்குச் சமம்" என்னும் வசனம் இன்றைக்கும் பொருளுடைய அறைகூவல் தான். தூக்கிக் கடாசி விடலாம்தான். ஆனால் கூடவே அவருடைய இயலாமைக்கெதிராக அவரது சக தமிழ்ச் சகோதரர்கள் அதிகபட்ச சுதந்திரத்தோடு எழுப்பும் கண்டனக் கூக்குரல்களுமல்லவா தங்கள் குரல்வளையை இழந்துவிடும்? நல்லவேளை, "இம் மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்" எனும் அதிகபட்ச அராஜகம் இவர் ஆட்சியில் அரங்கேற வில்லை என்பதற்காக ஆறுதல் கொள்ளலாம். அவரது இயலாமையினூடாக நம்மை வேறெப்படித் தேற்றிக்கொள்வது? தமிழ் வாழ்வின் தகுநிலைக்கு அப்பாற்பட்ட அல்லது மேம்பட்ட அவரது தேசியத்தால் ஈழத் தமிழ் அகதிகள் குற்றவாளிப் பிச்சைக்காரர்கள் போல் சீரழிவதும், ஈழ விடுதலைப் போர் கண்மூடித்தனமான புறக்கணிப்பால் அந்நியப் படுவதும், விடுதலைப் புலிகளின் உளவாளிகள் என்றோ கடத்தல்காரர்கள் என்றோ குறிப்பிட்டுக் குற்றம் சாட்டப்பட முடியாத ஆத்திரத்தின் வெளிப்பாடாகவே தமிழக மீனவர்கள் கொத்துக் கொத்தாய் சுட்டுக் கொல்லப்படுவதும், அதை இந்தியக் கடலோரக் காவல்படையும் தமிழகக் காவல்துறையும் குரூரமாக ரசித்துக்கொண்டிருப்பதும் பல்முனைச் செயல்பாடாக நடந்தேறிக்கொண்டுதான் இருக்கின்றன.

பார்ப்பனர்களைச் சரிகட்டவும் சாந்தி பண்ணவும் என்ன கெஜ குட்டிக்கரணம் போட்டாலும் கருணாநிதியை அவர்கள் ஒருபோதும் நம்பப்போவதில்லை, நட்பு சக்தியாக ஏற்கப்போவதில்லை. பார்ப்பனர்களுக்குக் கருணாநிதி எப்போதும் கடும் பகையாளிதான். மன்னிப்பே கிடையாத பகையாளி. அவர்கள் ஸ்டாலினோடுகூட ஒரு நாள் உறவாடிக்கொள்வார்கள். ஆனால் கருணாநிதியோடு மட்டும் ஒருபோதும் மாட்டார்கள். இந்த ஒரு அம்சம்தான் நமக்கும் கருணாநிதிக்கும் நடுவில் உள்ள வெட்டிப் பிரிக்க முடியாத உறவு. விதுரன் அரச நீதிகளை அடுக்கடுக்காய் அள்ளி வீசலாம். அது கொஞ்சம் கொஞ்சமாய் தேசியமாகிறவனின் திட்டமிட்ட வியூக வெளிப்பாடு. அதனாலெல்லாம் விதுரன் வேலைக்காரியின் மகன் என்பது மறக்கப்பட்டுவிடாது. விதுரனின் புத்திசாலித்தனத்தை விட்டுத்தள்ளுங்கள். எஞ்சி நிற்பது அவன் இன அடையாளம் மட்டுமே. பாண்டுவுக்கும் திருதிராஷ்டிரனுக்கும் எவன் தந்தையோ அவன்தான் விதுரனின் தந்தையும். இருக்கட்டுமே. பெற்றவள் பணிப்பெண்தானே. இதற்குப் பெயர்தான் சாதி நீதி. நமக்கும் கருணாநிதிக்கும் அதுவே உடன்பிறப்பு நீதி. ஆகவேதான் நம்மால் அவரை விட்டொழிக்க முடிவதில்லை. அது நீதியும் இல்லை.

இதில் ஒரு சின்னஞ்சிறு வேறுபாடு உண்டு. அன்று விதுரன் வேலைக்காரியின் மகனாக வெளியேற்றப்பட்டான். அரசவை அவனது அறிவைப் புறக்கணித்து மௌனமாய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. இன்று விதுரனை அரியணை ஏந்திக் கொண்டிருக்கிறது. தமிழகச் சாதிச் சமூகம் "அப்பனைப் புணரக் கனாக் கண்டவள் ஆரிடம் சொல்வாள்?" என்பதாக உள்ளுக்குள் புழுங்கிக் குமைந்து தனக்குத்தானே அந்நியப்பட்டு நிற்கிறது. தமிழ்க் குடிபடையின் அடிப்படை அலகு இன்னும் சாதியாகத்தானே எஞ்சி நிற்கிறது?

நமக்குக் கருணாநிதியின் மேல் முடிவில்லாத விமர்சனங்கள் உண்டு. ஆயினும் அவரை நம்மோடு அடையாளம் காணும் கடப்பாடும் உண்டு.

மொழிவழி மாநிலங்களாய்ப் பிளவுபடாத சென்னை மாநிலத்தின் முதன்மை அமைச்சராக 1947 முதல் 49 வரை இருந்தவர் ஓ.பி. இராமசாமி ரெட்டியார். நம்பமுடியாத அளவு நேர்மையாளர்; பக்திமானும் கூட. கம்யூனிஸ்டுகளை ஒழித்துக்கட்டுவதில் மூர்க்கமாகச் செயல்பட்டவர். திராவிட இயக்கத்தினரை சிறையடைப்பு, தடியடி, தண்டம் என்னும் பல்வகை தொல்லைகளைக் கொடுத்து அலைக் கழித்தவர். யாவும் நேர்மையின் பேராலும் தேசியத்தின் பெருமிதத்தாலும் நிகழ்த்தப்பட்ட கொடூரங்கள். ஆனால் கடைசியில் பார்ப்பனர்கள் கொடுத்த தொல்லையாலும், கூட இருந்தே குழிபறித்தவர்களாலும் மனம் வெறுத்து அவர் வெளியேறிய போது, அவரால் பெரும் கொடுமைகளை அனுபவித்த திராவிட இயக்கத்தினர்தான் அவருக்கு கண்ணீர் மல்க ஆறுதல் கூறினர். காரணம் அவர் நம் இனத்தவர் என்பதை மறக்காமல் செயல்பட்டதால்தான். நீறு பூசிய பெரியார் இராமசாமியாய் நேரிய வழியில் நம் இன நலன்களை நிலைநிறுத்தியவர் என்பதால்தான். எனது நுண்ணோக்கு விமர்சன அரசியலுக்கு முன்னோடியாய்த் திகழ்வது அன்றைய காலகட்ட திராவிட இயக்கத்தினரின் இன நலப் பார்வைதான் என்றால் மிகையில்லை.

6
தமிழ்நாட்டு அரசியலில் கடந்த ஐந்தாண்டு காலத்தையும் தொடர்ச்சியையும் அவ்வளவு எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாது. இக்காலகட்டத்தில்தான் ஜெயலலிதா தன் வன்மத்தின் எல்லையைத் தொட்டுக் காட்டினார். கேட்க ஒரு நாதியும் இல்லை. காஞ்சி சங்சர மடத்தையும் ஊதித் தள்ளினார் என்பது வன்மத்தினூடான நியாயத்தின் இன்னொரு பக்கம். இந்தக் காலத்தில்தான் கருணாநிதி தன் தொகுக்கப்பட்ட வரலாற்றிலிருந்து குருதியொழுகும் பக்கங்களைப் பிரித்தெடுத்து தேசிய நாரால் துளை போட்டுக் கட்டிக் கடலில் தூக்கிக் கடாசினார். இந்தக் காலத்தில்தான் தமிழகம் தன் புனிதப்படுத்தப்பட்ட பண்பாட்டு மீட்டுருவாக்கத்தின் பெயரால் உடைமைச் சமூகத்தின் ஆதிக்கச் சாதி மனோபாவûத்தை மெருகூட்டிப் பளபளப்பாக்கிக் கொண்டது. இந்த கால கட்டத்தில்தான்... சொல்லிக்கொண்டே போகலாம். என்ன பயன்? அதிர்ச்சியும் ஆச்சரியமும் அருவருப்பும் மிக்க காலகட்டம் இது.

வைகோ என்னும் வஞ்சகம் பயிலாத இனிய தமிழீழ நண்பன் 517 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தான். தமிழகம் இரண்டும் கெட்டானாய் நடமாடிக்கொண்டு வாழ்ந்தது. அதிரவும் இல்லை. அசையவும் இல்லை. அக்கறையோடு நினைக்கவும் இல்லை. நெக்குருகவும் இல்லை. அதே நேரத்தில் முழுதாக மறக்கவும் இல்லை, மட்கடிக்கபபடவும் இல்லை என்பதும் உண்மை. தமிழகத்தை இப்படி மரமாக்கியவர்கள் யார் என்று யாரும் கேள்வி எழுப்ப முற்படவில்லை. பழ. நெடுமாறன் என்னும் மதுரை நகர மாவீரன் பைபாஸ் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டு இன்னும் முற்றாகக் குணம் பெறாத நிலையில் சிறையில் அடைக்கப்பட்டது மட்டுமின்றி வழக்குகள் என்று சொல்லி தமிழகத்தின் குறு நகரங்களுக்கெல்லாம் காவல்துறை வாகனத்தில் பயணம் என்னும் பெயரில் பந்தாடப்பட்டார். தமிழகம் கண்டுகொள்ளவில்லை. ஏதோ தமிழ் உணர்வாளர்கள் என்னும் வட்டத்துள் வாழ்கின்ற முதிய இளைஞர்கள் அவ்வப்போது வருத்தம் மேற்கொண்டார்கள் என்னும் பெருமூச்சைத் தவிர வேறொன்றும் செவிகேட்கவில்லை.

இப்போது வைகோ எங்கே நிற்கிறார்? ஜெயலலிதாவுக்காகக் காத்து நிற்கிறார். ஜெயலலிதாவின் தேவைகளுக்காகச் சேவையாற்றுகிறார். இந்த மாற்றம் கொள்கைக் காகவா, அல்லது கோட்பாட்டு ரீதியாகவா? ஒரு புடலங்காயும் இல்லை. ஒருவகையில் தமிழகம் பிழைத்துக்கிடப்பதே அதன் மரத்தனத்தால்தானோ என்னவோ. மேலும் எப்போது கூட்டணி அரசுகள் தலையெடுத்தனவோ அப்போதே கொள்கை கோட்பாடு எனும் பேச்செல்லாம் குப்பைக்கூளமாக அடிபட்டுவிட்டன. கூட்டணி அரசுகள் உலகமயத்தின் அரசியல் உற்சவங்கள். பணப் புழக்கத்தை சாக்கடையாக்கும் கழிசடைக் கூவங்கள்.

பழ. நெடுமாறன் எங்கே நிற்கிறார்? ஒரு இயக்கவாதியாய் இருந்தும் கட்சி அரசியல்வாதியை விடவும் கருணாநிதியைக் கடுமையாக விமர்சனம் செய்வதில் வைரம் பாய்ந்திருக்கிறார். அவரது விமர்சனங்கள் உண்மைகளைப் பேசுவதோடுகூட வெறுப்பின் விளிம்பையும் தொட்டுக் கொட்டுகின்றன. நெடுமாறன் நேர்மையின் சட்டகத்துக்குள் இந்தக் காலத்திலும் அடங்குகிறவர்தான். அடங்கினால் மட்டும் போதாது. அடங்கி இருப்பதைக் காட்சிப்படுத்துவதும் அதை விட முக்கியமாகிறது. நேர்மையின் இன்னொரு முகம் நடுநிலைமை.

இன்றைய தினமணி அலுவலகத்தின் உயர்மட்டத்தில் பெரியாரிலிருந்து அண்ணா, கருணாநிதி, ராமதாஸ், வைகோ, பழ.நெடுமாறன் ஈராக எல்லாச் சூத்திரர்களும் "அவன்கள், இவன்கள்" ஆகத்தான் நாற்ற வாய்களின் எச்சிலில் குளிக்கிறார்கள். மீசைக்கார வைத்தியநாதன் தினமணி ஆசிரியரான பிறகு, அது ப.ஜ.க. பத்திரிகை என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி வெளிப்படுத்திக்கொண்ட பிறகு அரங்கேறி ஆடும் கூத்து இது.

அவர்கள்தாம் நெடுமறனுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கிறார்கள். உற்றுப் பார்த்தால் தெரிகிறது அதன்மேல் விலங்கு பிடிக்கும் வலையும் விரிக்கப்பட்டிருப்பது. அதன்மேல்தான் இரத்தம் துளிர்க்கும் தன் வேல்கம்போடு நெடுமாறன் நடை பழக்கப்படுகிறார். நேர்மையானது "வெளி"யில் சிறகுகளை விரிக்கும் பறவையாய் அர்த்தப்படுவதில்லை. அது கால்களை ஊன்றிக் கடக்கும் மனிதனாக்கும்.

நெடுமாறனிடம் வைக்க நமக்கு இன்னொரு கேள்வியும் உண்டு. நம் தர்க்க சட்டகத்திற்குள் அவருக்கான அடையாளத்தை வழங்கிப் பேசுவதே சரியாய் இருக்கும். பழ. நெடுமாறன் விடுதலைப் புலிகளின் நல்லெண்ணத் தூதுவர் என்பதுதான் அந்த அடையாளம். தமிழகமெங்கும் பரந்துகிடக்கும் ஈழத் தமிழர்களின் நல்லெண்ணத் தூதுவர்களை இனம் காணவும் அணி சேர்க்கவும் அவர் பயன்படலாம். ஆனால் அம்சா என்பவர் எப்படி இலங்கை அரசின் அங்கீகாரம் பெற்ற துணைத் தூதரோ, அதுபோல விடுதலைப் புலிகளின் அறிவிக்கப்படாத நல்லெண்ணத் தூதுவரே நம் நெடுமாறன். விடுதலைப் புலிகள் இராஜீவ் காந்தியின் மரணத்திற்குக்கூட ஏதோ ஒரு வகையில் வருத்தம் தெரிவித்தாயிற்று. 24 மணி நேரத்தில் 10,000 ஈழத்தமிழ் முஸ்லீம்களை இடம் பெயரச் செய்ததற்கும் மன்னிப்பு கேட்டாயிற்று. ஆனால் இந்த மண்ணில் - இந்திய மண்ணில் நின்றுகொண்டு, கருணாநிதியின் அரசியல் எதிரியான எம்ஜிஆரின் அரவணைப்பையும் பண முடிப்பையும் வெகு கொண்டாட்டத்துடன் ஏற்றுக்கொண்டு, அதற்கு ஈடாக கருணாநிதியை அவமதித்தார்களே. அவர் நீட்டிய கையை அருவருப்பாய்த் தட்டிவிட்டார்களே, அதற்கு இன்னும் வருத்தம் தெரிவிக்கவில்லை. தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லையோ. (கருணாநிதி நெடுமாறனைக் காகிதப் புலி என்று நையாண்டி செய்வது அதன் பொருட்டுத்தானோ.) தெரிவிக்க வேண்டாமெனில் விட்டுவிடவேண்டியது தானே அந்த மனிதரை, தேசியக் கூவத்தில் தோணிகள் ஓட்டி மகிழ? இந்தியத் தேசியம் சுப்பிரமணியன்சாமிகளின் அத்திம்பேர்களாலும் அம்மாஞ்சிகளாலும் நெருக்கிக் கட்டமைக்கப்பட்டது. ஈழத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் தர்ப்பைப் புல்லால் நோண்டி எடுத்துவிடக் கங்கணம் கட்டிக்கொண்டிருப்பது அந்தத் தேசியம். அது இந்தியத் தமிழனையும்கூட மனிதனாக மதித்ததில்லை. ஆயிரங்காலத்து இனப் பகையின் தீராத வன்மத்தின் வெளிப்பாடு அது.

கருணாநிதிக்கு அந்த வருத்தம் ஊவா முள்ளாக இருக்கத்தான் செய்யும். அவர் ஒரு நல்ல பாம்பு போல, காத்திரமான யானையைப் போல. தமக்கு இழைக்கப்பட்ட அநீதியை மறந்துவிடாவாம் அவைகள். அவர் தன்னுடைய உயர்வுக்கும் உயரத்திற்கும் பொருத்தமற்றதெனக் கருதப்படும் அற்ப விஷயங்கள் எதையும் தள்ளிவிடுகிறவராகத் தெரியவில்லை. தன்னை நிறுவிக்கொள்ள பற்பல பின்புலக் கைகளைப் பெற்றவனுக்கு அது பெருமை சேர்க்கலாம். தன்னைத் தானே நிறுவிக் கொள்கிறவன் அற்ப விஷயங்களில் கவனங்கொள்ளாமல் விட்டால் ஒரு நாளைக்கு அவனையே அவை தள்ளிக்கொண்டு போய்விடும் என்னும் அரசியல் புலப்பாடு கருணாநிதிக்கு நிறையவே உண்டு. ஜெயலலிதாவுக்கு, 'ஆமான்டா, நான் பாப்பாத்தி தான்டா" என்று எதிரொலித்து அறைகூவிக்கொள்வது பெருமைக்குரிய தற்காப்புக் கவசமாக இருக்கலாம். ஆனால் கருணாநிதிக்கு அவரைப் பார்த்து உள்ளூர நகைக்கிற சாதிமானைத் தலைதூக்க முடியாமல் நசுக்கி அழிப்பதொன்றே அடுத்த கட்ட நகர்வுக்கான முதற்பணியாய் இருக்கும்.

அந்தக் காலத்தில் ஈழப் போராளிக் குழுக்கள் எம்ஜிஆரைப் பற்றிக் கொண்டது இரண்டு விதங்களில் எனக்கு இயல்பாகப் பட்டது. முதலாவது, 'அன்பே சிவம்" என்பதைப் பல்லாயிரம் கழுவேற்றங்களைக் கொண்டு நிலைநாட்டிய சைவம் மட்டும் இந்தியத் தமிழர்களோடு இணைப்புக் கண்ணியாய் இல்லாமல் போயிருந்தால் ஈழத் தமிழர்கள் தங்கள் மொழித் துய்ப்பாலும் பகிர்தலற்ற மனமூட்டத்தாலும் மலையாளிகளின் இணை பங்காளிகளாகவே ஒன்றியிருப்பார்கள். ஈழத்துப் பனைக்கும் கேரளத்துத் தென்னைக்கும் உள்ள நில வேற்றுமை ஒரு பொருட்டாகவே வகிடெடுத்திருக்காது. இரண்டாவது, ஈழத்தமிழர்கள் சாதிசார் வாழ்வியல் நடைமுறையில் ஆறுமுக நாவலரைப் பின்பற்றுகிறவர்கள். அவர்களுக்குக் கருணாநிதி பொருட்படுத்தத் தேவையற்றவராய்ப் தோன்றியதொன்றும் வியப்பில்லை. 'இது அபத்தம். வேலுப்பிள்ளை பிரபாகரனே வெள்ளாளர் இல்லை" என்பார்கள். அதனாலென்ன? ஹிட்லர்கூட ஜெர்மானியன் இல்லைதான். பேசாப் பொருளை பெயரிட்டழைப்பதும், கழுத்தறுப்பு விஷயங்களின் முக்காட்டை விலக்குவதும் கற்களின் ஊடாகவும் கோடிழுத்துச் செல்லும் தர்க்கங்களுக்கு இயல்பானதுதான். ஓசையும் உருவமுமற்று, எல்லா அள்ளைகளையும் கிள்ளிக் கிலுகிலுப்பூட்டும் சாதிப் பூனையின் புளுத்திய நகங்களைத் தர்க்கப் பாறையில் அழுத்திப் பிறாண்ட விட்டால் தெறித்தெழும் நியாயப் பொறிகள் சுரீரிடத்தான் செய்யும்.

7
தமிழக அரசியல் களத்தின் அதிசயிக்கத்தக்க அண்மைக்கால வரவுகள் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் மக்கள் தொலைக்காட்சி அலை வரிசையும் தமிழ்ஓசை நாளேடும். ஒன்று தமிழ்க் கலாச்சாரத்தை மீட்டெடுக்கவும், மற்றொன்று தமிழ்மொழியை மறுவார்ப்புச் செய்யவும் முன்கை எடுக்கின்றன. வெகு அண்மைக் காலமாகத் தமிழக அரசை குற்றக்கூண்டில் ஏற்றுவதில் சன் குழுமமும் மக்கள் தொலைக்காட்சியைப் பின்பற்றத் தன் பாணியில் முயல்கிறது. மக்கள் தொலைக்காட்சியும் தமிழோசையும் தமிழ்நாட்டு ஆட்சிக்கெதிராக தோலுரித்துக்காட்டும் அத்தனை காட்சிப் படிமங்களும் நூற்றுக்கு நூறு நம்பகமானவை என்பதை எந்தப் பைத்தியக்காரனும் முதல் நுகர்விலேயே ஒத்துக்கொள்வான். ஆட்சி அதிகாரத்தைக் கொள்ளையர்களும் கல்நெஞ்சுக்காரர்களும் கைப்பற்றிக் கொண்டதால் நாடே கொந்தளித்துக் குமுறிக்கொண்டிருப்பதைப் போலவும், தெருவுக்கு வந்துவிட்ட மக்கள் மத்தியில் எந்த நேரத்திலும் புரட்சி வெடிக்கலாம் போலவும், காண்பவர்களின் கற்பனையில் திகில் வளர்க்கும் சித்திரங்கள் அவை. இன்னும் 10 அலைவரிசைகள் தொடங்கி, ஒவ்வொன்றும் தனித்தனித் தொகுப்புகளோடு 24 மணி நேரமும் ஒலிபரப்பினாலும் தமிழ்நாட்டு அவலத்தைக் கொட்டித் தீர்த்துவிட முடியுமா என்பது பொதுவாழ்வுச் சுரணையுள்ள எவருக்கும் இயல்பாய் எழும் கேள்வி. இதனூடாகத் "தமிழைத் தமிழாக்கு"ம் அவர்களது பணி தமிழ்த் தெருக்களிலேயே தொலைந்து போன தமிழை மீட்டெடுத்து நட்டுத் தமிழ்நாட்டைச் செழிக்க வைக்கும் அதியற்புதமான முயற்சி. தமிழின் மீது பற்றும் பாசமும் வைத்திருப்பவர்கள்கூடத் தமிழைவிட்டு எவ்வளவு அந்நியப்பட்டிருக்கிறார்கள் என்பதை முகத்தில் அறைகிறாற்போல் தொகுத்துச் சொல்லி விழிப்புறச் செய்யும் நன்றிக்குரிய பணி.

கைகள் இரண்டிலும் சொந்தபந்தங்களைப் பைகளாகத் தொங்கவிட்டுக்கொண்டு, முந்தைய முன்னுதாரணங்களைப் பின்பற்றி அரசியலுக்கு வந்த எவனும் புதிய முன்னுதாரணமாய் விளைவான் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. மாறாக, மொழியை மீட்கவும் வளர்க்கவும் முன் வருகிறவன் தன்னையே முன்னுதாரணமாக்கிக் கொள்ளும் அர்ப்பணிப்பாளனாவான். சொந்தச் சந்ததியின் துணையோடோ அல்லது தூற்றுதலோடோ, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் தன்னைத் தத்தம் செய்து கொள்கிறவனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பணி அது. ராமதாஸ் அந்த வகையில் தன்னை வரலாறாக்கிக்கொள்ளும் தகுதி படைத்தவர்.

அரசியலிலும்கூட அவர் ஒரு புதிய வரலாறெழுதும் முனைப்புள்ளவராகத்தான் முதல்தோற்றத்திலேயே தன்னை முன்னிறுத்திக் கொண்டார். அந்தக் கூறு இன்றைக்கும் அவரிடம் தொழிற்படுவதைக் காணும் போது அவரே வருங்காலத் தமிழகத்தின் நம்பிக்கையும் வல்லமையும் என்பதாகத்தான் மகிழத் தோன்றுகிறது. தலித்துகளை அரசியல் பங்காளிகளாக ஏற்க முன்வந்த, வெளிப்படையாக அறிவித்த ஒரேயொரு இடைநிலைச் சாதித் தலைவராக கண்ணுக்கெட்டிய தூரம் வரை மருத்துவர் ராமதாஸ் மட்டுமே தெரிகிறார். இது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. தலித்துகளைக் கொல்வதற்கே பிறந்தவர்கள் நாம் என்று உள்ளூர வக்கிரம் பிடித்தலையும் இடைநிலைச் சாதியிலிருந்து தலித் பிணத்துக்குத் தோள் கொடுக்கும் தலைவன் ஒருவன் தோன்ற முடியும் எனில் அவரே ராமதாஸ். எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் முதலமைச்சர் ஒரு தலித்துதான் என்று அறிவித்தவர் அவர். அண்மைக்காலமாக கருணாநிதி எப்படி தன்னைச் சாமானியன் என்று சொல்லிக் கொள்வதில்லையோ, அதுபோலவே மருத்துவரும் அதை மறு பிரகடனம் செய்யவில்லை என்பதற்காகக் காலம் கனியும் முன்பே நாம் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. தலித் எழில்மலை, பேராசிரியர் பொன்னுசாமி ஆகியோர் அமைச்சர்களாய் அமர்த்தப்பட்டது அந்த முறைமையில்தான் என்று நம்பலாம். அரசியல் கருத்தாளராக ஏ.பி.வள்ளிநாயகம் பங்காற்றியதும் இன்று வடிவேல் இராவணன் இணைந்து செயல்படுவதும் அதன் தொடர்ச்சியாகவே இருக்க வேண்டும். ஆனால் தலித் சொந்தங்கள் எதிர்பாராமல் வந்து, உடன் பயணித்து, இறங்கிச் செல்லும் இரயில் பயணிகளைப்போல வந்து போகிறார்கள் என்பதையும் நாம் மறப்பதற்கில்லை.

அரசியல் செயல்பாட்டில் மருத்துவர் எப்போதோ வெள்ளிவிழா கண்டு முடித்தவர். அரசியல் களத்தில் ஆழமாகத் தொடர்ந்து படர்ந்து நிற்பவர். கூட்டணி அரசு என்று வந்துவிட்டபின் எப்போது வேண்டுமானாலும் யாரோடும் சேர்ந்து கட்சியை வளப்படுத்தலாம், அரசியலை பலப்படுத்தலாம் என்னும் தெளிவுள்ள அரசியல்வாதி. மற்ற அரசியல்வாதிகளிடமிருந்து அவர் வேறுபடும் புள்ளி என்னவெனில் அரசியலை மருத்துவர் ஆகக் குரூரமாக நேசிக்கிறார்- ஒரு விவசாயி நிலத்தை நேசிப்பது போல, ஒரு முதலாளி பணத்தை நேசிப்பதுபோல. பா.ம.க. மட்டுமின்றி பல அமைப்புகளையும் நிறுவியவர் என்னும் வகையில் அரசியலின் மேய்ப்பராகவே தன்னை நிறுவிக்கொள்ள முனைகிறார். அப்படிப்பட்டவர் ஒரு பிறவிப் பகைவனைப் போல் அரசை விளாசுவதில் காட்டும் திடீர் பாய்ச்சலின் உள்ளடக்கம் அப்படியொன்றும் நேர்த்தன்மை கொண்டதாகவோ தமிழ் வாழ்வைப் புதிய விடியலுக்கு இட்டுச்செல்லும் புரட்சித்தன்மை மிக்கதாகவோ இல்லை என்பதை சராசரி மனிதனும் அறியக் கூடியவனாய் இருக்கிறான். அவரது மூர்க்கமும் பாய்ச்சலும் கருணாநிதியையும் கருணாநிதியின் ஆடுகளத்தையும் கலைத்துப் போட்டுக் கவிழ்த்துக் காட்டுவதற்கே என்பதன்றி வேறெந்த நியாயத்தன்மையும் அதில் முற்படுவதாகத் தெரியவில்லை. விமர்சிப்பதில் அவர் காட்டும் கட்டுப்பாடற்ற வேகமும் கருணையற்ற போக்கும் சில அடிப்படை முறைமைகளைக் கூட நிறைவு செய்வதைத் தவிர்த்து விட்டன.

உதாரணமாக, அரசின் குறைகளை அல்லது செயலின்மைகளை ஒரு கூட்டணிக்கட்சித் தலைவர் என்னும் முறையில் முதலமைச்சரின் நேரடிக் கவனத்திற்குக் கொண்டு செல்லலாம். மக்கள் நலனை முதன்மைப்படுத்தும் எவரும் அதைத்தான் முதலில் செய்வர். முதல்வர் அகப்படாமல் போனாலோ, முகங்கொடுக்காமல் தவிர்த்தாலோ, குறைகளைக்களைய முனையவில்லை என்றாலோ, நட்பு காட்ட மறுத்தாலோ, இறுதிக்கட்ட எச்சரிக்கையாக மக்கள் மன்றத்தில் குப்பைகளாகக் கொட்டலாம். அப்படியோர் முறைமையைத் தவிர்த்துவிட்டால் அது வெறும் வல்லடி அரசியல்தானே தவிர மக்கள் நலன் சார்ந்த முயற்சியல்ல. மருத்துவரின் வல்லடி அரசியல் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் கிடைத்த வரம் என்றால் நலந்தான். அப்படி இல்லையாயின் குறைந்தபட்சம் 'தாழ்வுற்று வறுமை மிஞ்சி" அல்லல்படும் அடிநிலை வன்னிய சமூக மக்களுக்கேனும் விடிவைத் தருவதாய் இருந்தால் அதுவும் பெரும் வரவுதான். ஆனால் அதற்கான முகாந்திரம் ஒன்றையும் காண முடியவில்லை. "சந்தனக்காடு" தொலைக்காட்சித் தொடர் எடுத்துப் புகழ் சேர்த்துக்கொண்டவர்கள், இன்னும் சிக்கல்களோடு உறங்கி எழும் வீரப்பன் குடும்பத்தைத் தத்தெடுத்துக் கொள்வதையல்லவா முன்னுரிமைப் படுத்தியிருக்க வேண்டும்? அதற்கான நினைவே இல்லை என்னும்போது, கொஞ்சம் சில்லறைகளோடு கணக்குத் தீர்த்துவிடலாம் என்னும்போது, என்ன விதமான சமூக அக்கறை அல்லது சாதி அக்கறை கொண்டவர்கள் இவர்கள் என்று திகைக்கத்தான் வைக்கிறது.

கடந்த 15 ஆண்டுகளாக கருணாநிதியை மதிப்பிடுவதில் எனக்கு எந்த மனத்தடையும் இருந்ததில்லை. காற்றைப் போலொரு வியாபகத்தைக் கருணாநிதி சாத்தியப்படுத்தியிருப்பதும் அதற்கொரு காரணம். இனிவரும் காலம் மருத்துவர் ராமதாசுடையதாய் இருந்தால் நிழலினூடே பனிக்காற்றடித்தாற்போலக் கொஞ்சம் சில்லென்று வாழலாம். ஆனால் அதற்கு அவர் இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டும். பக்குவப்பட வேண்டும். தன்னில் ஒட்டிக் கொண்டுள்ள சில மிகைத் தசைகளைத் தயவு தாட்சண்யமின்றி தரித்தெறிய வேண்டும். சொல்லப்போனால் பொது நன்மைக்கென்று கச்சிதமாகச் செதுக்கப்பட்ட இன்னொரு கருணாநிதியாய் வியாபிக்க வேண்டும். அரசியலில் கருணாநிதியின் இடம் அப்படி. வெற்றிகரமான அரசியல்வாதி எவனும் கருணாநிதியின் ஊடாகவும் அவரை கடந்தும்தான் வளரவேண்டியுள்ளது. குறைந்தபட்சம் அவரது சமூகப்படுத்தப்பட்ட பெரியாரியமும், சாதி மறுப்பியமும் ஒரு மறுமலர்ச்சித் தமிழகத்திற்கு வலிய கால்களாய் இருக்கும்.

8

மனிதன் எப்போதும் கனவு கண்டுகொண்டே இருக்கிறான்; தனக்குப் பிடித்த மாதிரியான நல்லதுக்கான கனவு. இரவுகளுக்கும் பஞ்சமில்லை. ஆனால் வயிறு நிரம்பியிருக்க வேண்டுமே - அரைப் பங்கு சோறும் அரைப் பங்கு நீரும் என்னும் சம விகிதத்திலாவது. நல்ல கனவுகள் நம்மை தாலாட்டுவதென்பதுகூட அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை.

நாங்கள் கரடிச்சித்தூருக்கு மூடுந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, மறைந்த சகோதரர் ஏ.பி.வள்ளிநாயகம் மருத்துவரைப் பற்றிச் சொல்லிக்கொண்டு வந்தார். அது ஒரு கனவுக் காலம் என்பதாகத்தான் அவரின் காட்சிப்படுத்தலும் இருந்தது. "நான் இன்றைய மருத்துவர் ஐயாவைப் பற்றிச் சொல்லவில்லை. தடைகள் ஏதுமின்றி எல்லோராலும் எப்போதும் வெகு எளிதாக அணுகக் கூடிய, பிறருக்கிணையாகத் தன்னை இருத்திக் கொள்கிற துடிப்புமிக்க தோழரைப் பற்றிச் சொல்லுகிறேன். இரவு 12 மணிக்குக் கூட அவர் வீட்டுக் கதவைத் தட்டி எழுப்பி அவருடன் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள முடிந்த காலம் அது. திறமைகளைத் தேடி ஒன்றிணைக்கவும், தலித்துகளைச் சம பங்காளிகளாக ஏற்கவும் அவர் செயலூக்கம் கொண்டு விளங்கிய காலம் அது."


அப்போது ஏ.பி. வள்ளிநாயகம், பாட்டாளிமக்கள் கட்சித் தோழர்களுக்கு அரசியல் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த சமயம். அவ்வகுப்புகளுக்கு ராமதாசும் தவறாமல் வந்துவிடுவாராம். ஒருநாள் அவர் வருவதற்கு முன்பே வகுப்பு தொடங்கிவிட்டது. கருத்துகளைத் தொடக்கம் முதல் கேட்க முடியாமல் போனதை ஓர் இழப்பாக அவர் கருதினார். "இனிமேல் நான் வருவதற்கு முன் வகுப்பைத் தொடங்காதீர்கள்" என்று கேட்டுக்கொண்டதாக வள்ளிநாயகம் சொன்னார். அதைச் சொல்லும்போது வள்ளிநாயகத்தின் குரல் புளகாங்கித உணர்வால் தழுதழுத்தது. இதில் நாம் கவனிப்பதற்கு இரண்டு புள்ளிகள் உள்ளன. ஒன்று, வள்ளிநாயகத்தின் திறமையை மருத்துவர் அங்கீகரித்த விதம். மற்றொன்று, மருத்துவர் தனது அதிகாரத்திற்குள் எதனையும் வரையறை செய்துகொள்ளும் உரம். தன் வரவுக்காக ஆசானையும் பிற மாணவர்களையும் காத்திருக்கக் கோருகிறோம் என்னும் நுண்ணுணர்வுக்கு அவர் ஆட்படவே இல்லை என்பதுதான் அந்த அதிகாரத்தின் வரம்பு. இன்று ராமதாஸ் அவர்களை "மருத்துவர் ஐயா" என்று அழைப்பது வெகு பாந்தமான தமிழ்க் கலாச்சார விளிப்பாக நிலைத்துவிட்டது. மதிப்புக்குரியோரையும் வயதில் மூத்தோரையும் "ஐயா" என்று விளிப்பது தமிழ் மரபு. தமிழ் மரபுக்குப் பொது மரபை மீறிச் சில கூடுதல் பொருள் உண்டு. அனிச்சையாக எழும் ஒரு மரியாதைச் சொல் தொடர்ந்து வலியுறுத்தப்படும்போது, அதுவே மேட்டிமை அடையாளமாகி விடுகிறது. இங்கு "ஐயா"வும் அப்படியொரு மேட்டிமை அடையளமாகவே பயன்படுத்தப்படுகிறது. இல்லையெனில் மருத்துவர் ஐயாவை அழைக்கும் அதே மரபில் "மருத்துவர் சின்ன ஐயா"வையும் அழைக்க நேர்வது எப்படி? கோ.க.மணி போன்றவர்கள் அன்புமணியை குழந்தையாகத் தூக்கிக் கொஞ்சியிருப்பார்கள். இன்று அந்தக் குழந்தையைச் "சின்ன ஐயா" என்றுதான் அழைக்க முடிகிறது எனில் அவர்கள் இழக்கும் சந்தோஷங்கள் எத்தனை! தளைக்கும் முடிச்சுகள் எத்தனை!

மருத்துவர் பல அமைப்புகளைத் தோற்றுவிக்கிறார். அவற்றுக்கு நிறுவனர் என்னும் பொறுப்பில் மட்டுமே தன்னை நிறுவிக்கொள்கிறார். பா.ம.க.வுக்கு அவர் நிறுவனர் என்னும்போது கட்சி அவருடைய சொத்தாகிவிடுகிறது. அவருக்குப் பிறகு அவரது வாரிசுக்கு உரிமையாகக் கூடிய நிறுவனம். அதற்கேற்றபடிதான் நிறுவனர்கள் விளிக்கப்படுவார்கள் என்பது இங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாகத்தான் பொருள்படுகிறது. இதனை ஒப்பிடும்போது தி.மு.க. உண்மையாகவே அனைத்துத் தமிழ்நாட்டு மக்களுக்குமான அமைப்பாகிறது. அதைக் கருணாநிதியும் அவரது குடும்பத்தினரும் கையகப்படுத்தியிருக்கிறார்கள் என்று குற்றம்தான் சாட்டலாமே தவிர நாளைக்கே இன்னொரு தலைவன் அதைத் தன்வசம் கொண்டுவரலாம். ஆனால் பா.ம.க. அப்படியல்ல. வேண்டுமானால் இன்னொரு கட்சியை தொடங்கலாமே தவிர பா.ம.க.வை சட்ட ரீதியாக யாரும் கைப்பற்ற முடியாது. இதுதான் நடைமுறை உண்மையெனில் மருத்துவருக்கும் அவரது மக்களுக்குமான உறவு பண்ணையாருக்கும் பண்ணையாட்களுக்குமான உறவாக வறலாற்றைப் பின்னுக்கிழுத்துவிடக் கூடியதல்லவா.

நான் தமிழன் என்று சொல்லிக்கொள்வதில் எனக்குப் பெருமிதம் உண்டு. காரணம், என்னால் பத்தாம் நூற்றாண்டு அல்லது எட்டாம் நூற்றாண்டுத் தமிழனாய்ச் சிறப்பாக வாழ்ந்து காட்ட முடியும் என்பதற்காக அல்ல. பெரியாரின் தோளில் நின்றுகொண்டு என்னால் எளிதாக முன்னோக்கித் தாவிச் சென்றுவிட முடியும் என்பதால்தான். இவ்வகையில் தலித்துகளுக்கு அவர் கொடுக்கும் இடம் என்பதும்கூட அவர்களை உள்ளிழுத்துச் செரித்துக்கொள்ளும் முயற்சியாகத்தான் மதிப்பிடப்பட வேண்டிவரும் அல்லவா?

"பெரியார்" என்னும் பெயரும் "திராவிடர்" என்னும் அடையாளமும் மருத்துவர் இராமதாஸ் என்னும் தமிழ்க் கலாச்சாரக் காவலருக்கு உகந்த சாரமாய் இருக்குமோ இருக்காதோ, எனக்குத் தெரியவில்லை. "விண்"ணென்று ஓங்கி நின்ற தமிழனும் தமிழ் வாழ்வும் பெரியார் முன்னெடுத்த திராவிடத்தால்தான் வீழ்ந்துவிட்டதாக தமிழியங்கள் ஆய்ந்து சொல்லும் காலம் இது. ஏதோ இவர்கள் நேற்றுவரை நிமிர்ந்து நின்றாற்போலும் பெரியார் வந்துதான் இவர்கள் முதுகுத்தண்டை ஒடித்துவிட்டாற்போலும் அப்படியொரு பசப்பு. என்னளவில் அவ்விரு பெயர்களும் எனக்குகந்த பொருளில் சிறப்பாகவே படுகின்றன. பெரியார் கன்னடரா தமிழரா என்பதற்கெல்லாம் மேலாக தமிழனின் கடைசிக்கணு அறிவுச்சமாகவே நான் மதிக்கிறேன். "திராவிட பாஷா", "திராவிட சிசு", "திராவிட வேதம்" போன்ற பரந்த சொல்லாடல்களில் எல்லாம் 'திராவிடம்" என்பது "தமிழ்" என்பதின் சர்வதேசச் செலாவணிக் குறியீடாகத்தான் பயன்பட்டுள்ளது என்பதால் நான் அந்தப் பொருளிலேயே உறுதி கொள்கிறேன்.

9

இந்திய வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் அசோகன் காலத்திலிருந்து ஒளரங்கசீப் காலத்திற்கு அப்பாலும் தமிழ்நாடு தனித் தீவாகத்தான் சுதந்திரமாய் விடுபட்டுக் கிடந்திருக்கிறது. அதே நேரத்தில் அது புத்தர் காலம் முதலே பார்ப்பனக் கலாச்சாரத்தாலும் அதன் மௌடிக உச்சாடனங்களாலும் மெல்ல மெல்லத் தின்னப்பட்டு, முடிவில் பார்ப்பன மேலாதிக்கத்தின் மிதியடியாயும் கிடந்திருக்கிறது. பார்ப்பனர்கள் நேரடியாக ஆட்சி செய்யவில்லைதான். ஆனால் ஆட்சிக் கட்டிலை ஆட்டுவிப்பவர்களாகவும், அதில் யார் அமர்வது என்பதை நிர்ணயம் செய்கிறவர்களாகவும் அவர்களே இருந்திருக்கிறார்கள்.

என்றைக்கு இந்த வீழ்ச்சி உணரப்பட்டதோ அன்றைக்கே அதன் முரண்உயிர்ப்பாக அடையாளப்பட்டதுதான் பார்ப்பன எதிர்ப்பு என்னும் மான உணர்ச்சி - மனம் தூண்டப்படும்போதெல்லாம் கிளர்ந்தெழுவதான மான உணர்ச்சி. மீனுக்கு எதிர்நீச்சல் எப்படியோ, தமிழ் வாழ்வுக்கு பார்ப்பன எதிர்ப்பும் அப்படியே. பார்வையானது அரசியல்படும்போதெல்லாம் தமிழ் வாழ்வின் அடிநாதமாக உயிர்த்தெழுவது இது ஒன்றே. வரலாறு நெடுகிலும் முணுமுணுப்பாகவோ, முழக்கமாகவோ, தனிமனித எதிர்ப்பாகவோ, வெகுமக்கள் இயக்கமாகவோ, மதமாற்ற நடவடிக்கையாகவோ பார்ப்பனருக்கெதிரான தமிழரின் தன்னுணர்ச்சி தொடர்ந்து வெளிப்பட்டிருக்கிறது. அவ்வெளிப்பாட்டின் சென்ற நூற்றாண்டுத் தொடர்ச்சிதான் நீதிக்கட்சியின் எழுச்சியும் திராவிட இயக்கச் செயல்பாடுகளும். இதன் நடுவே இன்னொரு முக்கியமான வீழ்ச்சி நிலையையும் தெளிவுபடுத்தியாக வேண்டும். இடைவிடாத பார்ப்பனத் தாக்குதலில் பிடி நழுவிப் போன தென்னக மக்கள் தங்கள் இன அடையாளம் சார்ந்த பௌதிக இருப்பை நிலைப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் பார்ப்பனர்களோடு அதிகாரப் பகிர்வைக் கோருகிறவர்களாக மாறிப் போனார்கள். இப்படியாகத்தான் அதிகாரத்தில் விகிதாச்சாரப் பங்குரிமை, அழுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு என்னும் கோரிக்கைகளை முன்வைத்து முதன்முதலில் தென்னகத்தில் மட்டுமே அரசியல் இயக்கங்கள் தோன்றின. இதைத்தான் நான் "ஆதிக்கத் தமிழ்ச் சாதிகளின் அதிகாரக் கொள்முதலும் தன்மான விற்றொழிப்பும்" என்று அடைமொழியிடுகிறேன். பார்ப்பன எதிர்ப்புணர்ச்சி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அணையா நெருப்பாய் உயிர்த்திருக்கிறது. அதற்குக் காரணம் அடிமன உணர்வாக இன - மொழி ஆளுமைக் கூறுகள் இங்கு மட்டுமே அழிவில்லாததாய்க் கூர்மை பெற்றிருக்கின்றன. இது கட்சி வேறுபாடற்றது. காங்கிரஸ் கட்சியிலும் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் வெளியேறியதற்கும் பின்னாளில் காமராசர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதற்கும் பின்னணியாய்ச் செயல்பட்டது இந்த உணர்வுதான்.

தில்லியில் பார்ப்பன அறைகூவலை AIMS தலைவர் வேணுகோபால் வடிவத்தில் அன்புமணி சந்தித்திருந்தாலும் பா.ம.க.வின் அரசியல் செயல்பாட்டில் பார்ப்பனர்க்கெதிரான தன்னுணர்ச்சி தகவமைக்கப்பட்டுள்ள விதம் பற்றி நமக்குத் தெளிவான சித்திரமில்லை. மாறாக, பல்பொருள் அங்காடிப் பங்கீட்டுத்தனமான சகோதர யுத்தங்கள் வெகு மூர்க்கமாக வடிவம் பெற்றுள்ளன. அந்த அரசியல் யுத்தத்தை வெகு தீவிரமாக்கி மலினப்படுத்தியது பா.ம.க.தான். அரசியலில் குறுகிய காலப் பலன்களுக்கும் நீண்ட காலப் பலன்களுக்கும் இடையே ஓடும் எல்லைக்கோட்டை நிர்ணயிக்கிறவனே எதிர்கால அரசியலைக் கணிக்கத் தெரிந்தவன்.

இருப்பையும் நடப்பையும் வைத்து இங்கு நாம் ஓர் எளிய சமன்பாட்டை எழுதிப் பார்க்கலாம். இக் கட்டுரையில் நாம் முதன்மைப்படுத்திய பழ. நெடுமாறன், ராமதாஸ், வைகோ, ஆகிய மூன்று தலைவர்களும் இந்த ஐந்து ஆண்டுகளில் ஜெயலலிதாவுக்கு எதிராகப் பதிவு செய்த விமர்சனங்களைத் தொகுத்துப்பாருங்கள் - ஒரு 10 பக்கம் தேறுமா? - 100 பக்கங்கள் என்றே வைத்துக் கொள்ளுங்கள். அதே சமயம் கருணாநிதிக்கு எதிரான அவர்களது விமர்சனங்களைத் தொகுங்கள். கருணாநிதி முதல்வரான பின் பொழுது விடிவது எத்தனை உறுதியானதோ அத்தனை உறுதியானது அவர்கள் விமர்சிக்காமல் இருக்கமாட்டார்கள் என்பதும் அல்லவா? ஆகவே, குறைந்தபட்சம் 100 மடங்காவது - 100 பக்கங்கள் அல்ல, 100 மடங்கு - தேறாது? விளக்கங்கள், வியாக்கியானங்கள் யாவும் பூதாகாரமாகத் தெரியும் உண்மையை எளிமைப்படுத்துவதற்குத்தான் பயன்படுமே தவிர உண்மையையே மறுத்துவிடுவதற்கல்ல. கருணாநிதி மூத்தவர், முதல்வர் என்னும் வகையிலும், இனவழிப் பட்ட சகோதரன் என்பதாலும் இந்தச் சகோதரர்கள் எத்தனை முறை அவரை நேரில் சந்தித்துப் பேசவும், கோரவும், குற்றம் சாட்டவும் முயன்றிருப்பார்கள்? நெடுமாறனும் வைகோவும் பட்ட கொடுமைகள் நல்லவேளை கருணாநிதி ஆட்சியில் நிகழவில்லை. அதனால் கருணாநிதி அப்படியெல்லாம் நிகழ்த்தத் தெரியாத யோக்கியர் என்பதல்ல நம் வாதம். உளவியல் ரீதியாக ஜெயலலிதாவின் மேல் அவர்களுக்கு அனிச்சையாய் தோன்றும் மதிப்புணர்வு அல்லது அச்ச உணர்வு கருணாநிதியின் மேல் இல்லை என்பதுதான் உண்மை. சட்டம் தான்தோன்றித்தனமாகப் பயன்படுத்தப்படும்போது அச்சம் ஏற்படுகிறது. தன்னுணர்வில் தவிர்க்கப்படும்போது அலட்சியம் வருகிறது; அதற்கெதிராக அறைகூவத் தோன்றுகிறது. கறுப்புவெள்ளையில் சொன்னால் இதுதான் உண்மை. இராமதாஸ், வை.கோ. ஆகியோர் ஜெயலலிதாவிற்காகக் காத்திருப்பதிலும் அவரை அதீத வினயத்தோடு சந்திப்பதிலும் உறுத்தல் தராத தன்மான உணர்வு, கருணாநிதியை நினைக்கும் போதே காயப்படும் எனில், தமிழ்நாட்டு மலக்குழிகளைச் சாதித் தூய்மையால் மட்டுமே கழுவ முடியும் என்பதற்காக விம்மிதம் கொள்ள வேண்டியதுதான்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில்தான் கருணாநிதியின் வரலாற்றுயரம் நம்மைத் திரும்பிப்பார்க்க வைக்கிறது. தமிழ்த் தலைவர்கள் அவரின் எந்தப் பிரச்சனைக்கும் கைகொடுக்க மாட்டார்கள், எந்தக் கமுக்க உடன்பாட்டுக்கும் செயல்பாட்டுக்கும் முகங்கொடுக்க மாட்டார்கள் என்னும்போது பார்ப்பனர்களைச் சமாளிப்பதன் மூலம் தன்னையும் தானே முனைந்து பெற்ற தகுதிகளையும் தக்கவைத்துக்கொள்வதைத் தவிர அவரால் வேறென்ன செய்துவிட முடியும்? அப்படியும் கொழுத்துப்போய் (நண்டு கொழுத்தால் வளையில் தங்காது என்பார்கள். அந்த வகை கொழுப்பு இது.) சுப.தமிழ்ச்செல்வனுக்கு இரங்கற் கவிதை எழுதுவதும் இராமன் எந்தப் பொறியியற் கல்லூரியில் படித்தான் என்று அலம்பல் பண்ணுவதுமாக வகைதொகை இல்லாமல் மாட்டிக் கொள்ளவும் நேர்கிறது. இதுவும் கூட ஒருவேளை வாலைக் காட்ட வேண்டிய இடத்தில் தலையையும் தலையைக் காட்ட வேண்டிய இடத்தில் வாலையும் காட்டிச் சமாளிக்கும் ராஜதந்திரமாகக் கருதப்படவும் கூடும். கருணாநிதி எந்தத் தந்திரத்திற்கும் இரண்டாம் பட்சமானவரல்லர் என்பதுதான் அவரது பிறவிச் சிறப்பு.

10

தமிழகத்தைப் பாதித்துக்கொண்டிருக்கிற ஆற்றுநீர்ச் சிக்கலில் கருணாநிதியின் செயலின்மைதான் தோல்விக்குக் காரணம் என்பது அழுத்தமான குற்றச்சாட்டு. குறிப்பாக காவிரி சிக்கலில் கருணாநிதியின் ஆட்சிக்காலங்களில்தான் சிறிது சிறிதாகத் தமிழகத்தின் உரிமை பறிகொடுக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. அது உண்மைதான். மைய அரசு இவரை நத்திவந்த சந்தர்ப்பங்களில் காவிரி மீட்பை முன் நிபந்தனையாக வைத்து இவர் காய் நகர்த்தவில்லை என்பது குற்றச்சாட்டு. அதுவும் உண்மைதான். சரி, அப்படியே அவர் நிபந்தனை விதித்து, மைய அரசு தமிழ்நாட்டுக்குச் சாதகமாய் நின்றாலும் என்ன நடந்துவிட்டிருக்கும்? எந்த நியாயங்களுக்கும் கட்டுப்படாத கர்நாடகத்திடம் என்னதான் செய்துவிட முடியும்? மைய அரசின் ஆணையாகட்டும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பாகட்டும், நடுவர்மன்ற வழிகாட்டலாகட்டும், எதற்கும் செவி சாய்க்க மறுக்கிறது கர்நாடகம். உலகத்திலேயே நதிநீர்ச் சிக்கலில் கர்நாடகத்தைப் போல் நடந்து கொள்ளும் நாடோ மக்களோ இருக்க மாட்டார்கள் என்று நிச்சயமாகச் சொல்லலாம். நீர்ப் பகிர்வைப் பற்றிப் பேச்சு வரும்போதே தமிழ் மக்களைக் கொல்வது என்பதை கண்மூடித்தனமாகப் பின்பற்றுகிறவர்களிடம் கருணாநிதி அதிகபட்சம் கெடு வைக்கலாம், பின்னர் பதவியைத் துறக்கலாம். அப்படியே துறந்தாலும் கையாலாகாமல் சிக்கலிலிருந்து தப்பியோடிவிட்டார் என்று அவப்பெயர் வாங்கிக் கட்டிக்கொள்ளத்தான் அது பயன்படும். இப்படிப் பயனில்லாத ஒரு முயற்சிக்குத் தன்னைப் பலி கொடுப்பதன் மூலம் அவர் அடையும் தியாகிப் பட்டம் காடு வரைகூட வராது என்பது யாருக்குத் தெரியாது?

சரி, இதற்குத் தீர்வே கிடையாதா என்றால் தீர்வில்லாத விஷயம் உலகத்தில் உண்டா என்ன? கட்டாயம் தீர்வுண்டு. கர்நாடகத்தில் 10 தமிழர்கள் செத்தால் தமிழகத்தில் 100 கன்னடர்கள் சாக வேண்டும். அவர்கள் எட்டடி பாய்ந்தால் தமிழர்கள் பதினாறடி பாய வேண்டும். கட்டாயம் தீர்வு எட்டப்பட்டுவிடும். கர்நாடகத்திற்கு எதிராக மட்டுமல்ல மற்ற இரண்டு அண்டை மாநலங்களுக்குப் பதிலாகவும் இதுதான் இருக்க முடியும். மற்றவர்களை விடத் தமிழர்கள் மூர்க்கமான விலங்குகள் என்பதை நிரூபிக்க வேண்டும். அடித்துக் கொல்லவும் அடிபட்டுச் சாகவும் ஆயத்தமாய் இருக்கவேண்டும். நியாயம் கிடைக்கும் வரை எவனுடைய பேச்சையும் செவிமடுப்பதில்லை என்னும் வைராக்கியம் பூண வேண்டும். இதை யார் செய்வது? வன்முறையை எந்த அரசும், எந்தத் தலைவனும், எந்த மனிதனும் போதிக்கமாட்டான். போதிக்கவும் கூடாது. அது தன்னெழுச்சியாக எழுந்தால் நாமென்ன செய்வது என்று கூட எந்த அறிவுள்ள, மனிதப் பண்புள்ள மனிதனும் சொல்ல மாட்டான். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்ச் சிக்கலில் தமிழகம் தன் குரலையும் கலவரத்தையும் கொஞ்சம் கூட்டியதன் எதிரொளி பகை நடுவில் பளீரெனத் தெரியவே செய்தது. கருணாநிதிக்கு எதிராகக் கொலைவெறிக் கூச்சல் போடுகிறவர்கள், "நாம் திசையறியாமல் செயல்படுகிறோம்" என்பதை ஒரு கணம் உணர்ந்தாலே அவர்களால் தீர்வை எட்ட முடியும். ஆனால் மனித உயிர்கள் எத்தனை அரியவை! குடிக்க நீரின்றி அவை கொத்துக்கொத்தாய் மரிக்கும்போது இன்னும் அரியவையாய் மண்ணில் இறங்கும்.

11

கட்சி நடத்துவதிலும் அதை கட்டிக் காப்பதிலும்கூட கருணாநிதி பலருக்கும் முன்னுதாரணமாய்த் திகழ்ந்து வருபவர் என்றால் மிகையில்லை. இன்று தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் சாதி முத்திரையோடுதான் வலம் வருகின்றன. அனைத்து மக்களுக்குமானவையாய் இயங்கும் வெகு சில, அல்லது இரண்டொரு கட்சிகளுள் தி.மு.க.வுக்கு நீண்ட பாரம்பரியமும் நெடிய வரலாறும் தனித்த கட்டமைப்பும் உயர்ந்த ஜனநாயக மரபும் உண்டு. (இந்த வினை விளக்கக் குறிப்புகள் யாவும் நடைமுறையில் என்ன வடிவம் கொண்டன என்பது தனிப்பட்ட விஷயம்.) விதிப்படி நடப்பதில் தி.மு.க.வின் முதன்மை இடத்தை வேறெந்தக் கட்சியாலும் தட்டிப்பறிக்க முடியாது. அந்த வகையில் எல்லாப் புகழும் கருணாநிதிக்கே சொந்தமாகிறது. கட்சிக்கு முறையாகத் தேர்தல் நடத்துவதும், கட்சியின் அடிநிலை இடைநிலை பொறுப்புகளில் சாதிகளுக்கேற்ற விகிதாச்சாரத்தை அல்லது சாதிப் பரிமாணங்களைக் கணக்கிலெடுத்துக்கொள்வதும் தீவிரமாக வழக்கப்படுத்தப்பட்டுள்ளன. இதில் இரண்டு சாதிகள் பற்றிக் குறிப்பிட வேண்டும். ஒன்று, பார்ப்பனச் சாதி (!) அதற்கான இட ஒதுக்கீடு திராவிடக் கட்சியில் இல்லாதது ஒரு குறையாக மதிப்பிடப்படுவதில்லை. காரணம் பார்ப்பனர்கள் திராவிடர்கள் அல்லர். (இது அ.தி.மு.க.வுக்குப் பொருந்தாது. இந்தப் பொருந்தாமைக்கு வழி வகுத்தவரே கருணாநிதிதான்.) மற்றொன்று, தலித் சாதிகள். கருணாநிதி தன்னை தலித்து வீட்டு சம்மந்தி என்று சொல்லிக் கொள்வதும் மகிழ்வதும் அரசியல் காரணங்களுக்காகவன்றி தலித் உணர்வாலோ தலித்துகளோடு தன்னை ஐக்கியப் படுத்திக்கொள்வதாலோ அல்ல. அந்தப் பெருந்தன்மையும் பரந்த மனமும் உயர்ந்த நாகரிகமும் அவருக்கு ஒருபோதும் இருந்ததில்லை. கட்சி உள்ளரங்க விவாதங்களில் தலித் உறுப்பினர்கள் எவ்வளவு கீழ்த்தரமாகவும் மரியாதைக்குறைவாகவும் விளிக்கப்பட்டிருக்கிறார்கள், நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் சொல்லித் தீராத பட்டறிவுகள். கட்சிப் பதவிகளாகட்டும், அமைச்சுத் துறையாகட்டும், தலித்துகளைக் கருவேப்பிலை மாதிரி பயன்படுத்திக்கொள்ளத் தெரிந்தவர்தான் கருணாநிதி. (ஆ. ராசாவை பயன்படுத்திக் கொண்டதை மத்திய அரசுக் கலாச்சாரத்தோடு இணைத்தே பார்க்க வேண்டும்.) எடுபிடிகளாகவும் எடுபிடிகளின் கங்காணிகளாகவும் பயன்படுத்திக் கொள்வதற்கென்றே தலித் சாதிகளை இவர்கள் தாங்கிப் பிடிப்பவர்கள். தமிழ்ச் சமூகத்திலாகட்டும் அரசியலிலாகட்டும் தலித்துகள் இன்னும் சேவைச் சாதிகளாகவேதான் நீட்டிக்கப்பட்டிருக்கிறார்கள். தலித்துகளைப் பொறுத்த வரை எல்லா "மாமனிதர்களும்" தூய்மைப்படுத்தப்பட்ட கழிசடைகள்தாம். இதற்கு கருணாநிதி மட்டும் விதிவிலக்கல்ல. இந்த வரையறையைத் தாண்டிச்சென்றுதான் நாம் விமர்சனங்களைப் பொதுமைப்படுத்த வேண்டியுள்ளது. சாதி அம்சம் இந்திய சமூகத்தில் தீர்க்கப்பட முடியாத நோயாகத்தான் நீடிக்கிறது. எல்லாரும் தங்களுக்கு 'மேலே" உள்ளவர்களோடுதான் சமத்துவம் கோருகிறார்களே தவிர "கீழே" உள்ளவர்களைக் கை கொடுத்துத் தூக்கி நிறுத்தவோ அரவணைத்துக்கொள்ளவோ அறிவு ரீதியாகக்கூட முன்வருவதில்லை. உண்மையில் அறிவு ரீதியாக எதிர்பார்ப்பது அதனினும் அபத்தம்தான். காரணம் அறிவுச்சாதிகள்தாமே இந்த அட்டூழியத்தை ஆல்போல் வளர்த்தெடுத்தவை!

இப்படி ஒவ்வொன்றிலும் உள்ளடி வேலைகள் ஊடும் பாவுமாய்ப் பின்னப்பட்டிருப்பது உலகளாவிய விஷயமாகிவிட்டபடியால் நாம் வெளிப்படையான சட்டதிட்ட நடவடிக்கைகளைக் கணக்கிலெடுத்துக்கொண்ட மனிதர்களையும் அமைப்புகளையும் விமர்சிக்க வேண்டியுள்ளது; பேச வேண்டியுள்ளது.

12

தி.மு.க. தோன்றிய காலத்தில் தேர்தல் களத்தில் "உதயசூரியன் சின்னத்தில் ஒரு கழுதையை நிறுத்தினாலும் ஜெயிக்கும்" என்றெல்லாம் மிகையாகச் சொல்லித் திரிந்ததுண்டு என்றாலும், கட்சி கருணாநிதியின் கைக்குள் வந்ததும் எல்லா அங்கங்களிலும் சாதிப் பரிமாணம் புகுத்தப்பட்டது. தனக்கென வலிமை மிக்க சாதிப் பின்புலமோ ஆள் பலமோ ஆதரவோ அமையப்பெறாத கருணாநிதி, எல்லாச் சாதிகளின் ஏற்போடும் ஆதரவோடும் கட்சியை மிகச் சரியாகவே வழிநடத்துகிறார் என்றுதான் சொல்லவேண்டும். கருணாநிதிக்கு எதிராகக் கச்சை கட்டும் சாதி அமைப்பினர் வெகு தீவிரமான குற்றச்சாட்டுகளை அவ்வப்போது அவர்மீது அடுக்குவதுண்டு. சாதி ரீதியாக, சரியான சந்தர்ப்பங்களில் சரியான நபர்களைப் பயன்படுத்துவதில்லை அல்லது பழி வாங்கப்படுகிறார்கள் என்பது முக்கியமான குற்றச்சாட்டு. உண்மையும் அதுவாகத்தானே இருக்க முடியும்? தனக்குத் தோதாகவும் துணையாகவும் இருக்கக்கூடியவனைத்தானே எந்தத் தலைவனும் பொறுப்பில் அமர்த்துவான்? அமர்த்தப்படடவன் தூய்மையானவனா அல்லது திறமை உள்ளவனா என்பதைவிட தலைவனுக்குத் தலைவணங்குகிறவனா என்பதுதானே எல்லா அமைப்புகளிலும் பின்பற்றப்படும் வெற்றிச் சமன்பாடு? கருணாநிதியிடம் மட்டும் நீங்கள் வேறு சமன்பாட்டை எதிர்பார்க்கிறீர்கள் எனில் அவரைக் கவிழ்க்கப் பார்க்கிறீர்கள் என்பதைத் தவிர வேறென்ன பொருள்? பொதுப் புத்தியில் எவையெல்லாம் குற்றமாகவும் குறைகளாகவும் பட்டியலிடப்படுகின்றனவோ, பகை நடுவினில் தனித்துவிடப்பட்ட மனிதனுக்கு அவையெல்லாம் பற்றுக்கோடுகளாகவும் தப்பிக்கும் வழிகளாகவும் பயன்படக்கூடாது என்பது என்ன ஒழுக்கம்? கருணாநிதி மட்டும் அவற்றைப் புறந்தள்ளும் புனிதராக உங்கள் முன் ஏன் வேடங்கட்டி ஆட வேண்டும்? ஒரு அருவருப்பு வெட்டவெளிச்சமான பிறகு அதையே வாயில் போட்டு அதக்கிக்கொண்டிருந்தால் உங்கள் நாகரிகம் கேள்விக் குறியாகிவிடும் அல்லவா? மாறாக அந்த அருவருப்பைப் பின்புலமாக்கி, அதன் முன்னே நடக்கும் நாடகத்தையே அருவருப்பாகத் தரப்படுத்திவிட்டால் உங்களுக்குத் தரவல்லுநர் பட்டம்கூட கிடைக்க வாய்ப்புண்டுதானே. கருணாநிதி விஷயத்தில் இக்கட்டான சந்தர்ப்பங்களிலெல்லாம் அவருக்கெதிராக இப்படித்தான் வல்லுநர்கள் முளைத்தெழுகிறார்கள்.

13

இக்கட்டுரையை முடிக்குமுன் ஒன்றை நினைவுகூர்வது பொருத்தமாயிருக்கும். வீடு முழுவதும் புகுந்தளைந்து வெளிக்கிளம்பும்போது கூடத்தில் தொங்கும் சாவிக் கொத்தைக் கவனப்படுத்தினாற்போல எனது நினைவுகூரல் உங்களுக்கு உதிரித்தனமாகத் தெரியலாம். ஆயினும் நிதானிப்பவர்களுக்கு அதன் நுண்பொருள் விளங்கும். வீட்டையே விழுங்கி ஏப்பம் விட்ட உங்கள் பெரும்போக்கான பார்வைக்குத் திறவுகோல் தென்படவில்லை என்பது மட்டுமின்றி, நீங்கள் சுற்றிப்பார்த்தது திறந்து கிடக்கும் விட்டைத்தானே தவிர கதவுகளற்ற சுவர்களை அல்ல என்பதும் பொருளற்ற உதிரித்தனமாகிவிடாது.

தொடர்ந்து செலாவணியாகிக்கொண்டிருக்கிற தலைமைகளுக்கு முன்முடிவுகளுடன் கூடிய விமர்சனங்களே நடுகல் வாசகங்களாகி விடுகின்றன. அந்த முறைமையைச் சிதைத்துச் சில தவிர்க்கப்பட்ட தர்க்கங்களை மௌனம் உடைத்து நிரல்படுத்தத் தோன்றியது. தர்க்கங்கள் எப்போதும் அவற்றுக்கான நியாயங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கானவை.

இக்கட்டுரையிலிருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில தொடர்களையோ வாக்கியங்கயோ உருவியெடுத்து, அவற்றின் நிறம், குணம், மணம் பற்றிப் பகுப்பாய்வு செய்யத்தொடங்கினால் நீங்கள் ஏமாந்துபோக வாய்ப்புண்டு. முழுதும் படித்து ஏமாறுகிறவர்களையும் ஏமாற ஆசைப்படுகிறவர்களையும் பற்றி இங்குப் பேச்சில்லை.

எல்லாச் சொற்களும் பொருள் குறித்தன என்பதோடு எல்லா மொழிதலும் தொனி குறித்தனவும்கூட. எனது மொழியில் இவ்விரண்டும் எப்படி கண்ணாமூச்சி ஆடுகின்றன என்பதில் எனக்கே வியப்பும் கவலையும் உண்டு. புரிதல்கள் பெரும்பாலும் கவலைப்பட வைப்பதாகத்தான் உள்ளன. அதனை ஈடுகட்ட மொழிதலின் புனைவழகில் கொஞ்சம் மயங்கி இளைப்பாற்றிக் கொள்வதை வாசகர்களே தங்களின் வழக்கமாக்கிக் கொண்டுவிட்டார்கள்.

தர்க்கங்கள் தங்கள் வலிமைக்கேற்ப நியாயங்களை ஈனுகின்றன. ஆனால் நியாயங்கள் யாவும் உண்மைகள் ஆகிவிடுவதில்லை. நியாயங்கள் வென்றெடுக்கப்படுவதைப் போல உண்மைகள் வென்றெடுக்கப்படுவதில்லை. அவை இருத்தலின் நிகழ்த்தல் சட்டகங்கள். உண்மைகளுக்கு உரைகல் அவரவர் மனமும் அறமும்தான்.

கருணாநிதியின் செய்திறம் மிக்க வரலாற்றுப்பீடத்தில் ஒழுகி உறைந்து நிற்கும் தவிர்க்க முடியாத சில அடிக்குறிப்புகளும் உண்டு. அவை உண்மை என்னும் வகைப்பாட்டில் பொருந்தும். பீடம் உயரஉயர, அடிக்குறிப்புகளுக்கான பரப்பும் அதை நிரப்பும் முயற்சியும் கூடும்தானே? அனைத்தையும் பதிவு செய்தால் அதுவே ஒரு கட்டுரை போலாகிவிடும். ஆகவே, தவிர்க்க முடியாத சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடலாம்.

1. இவரது ஆட்சிக் காலத்தில்தான் குடிப்பழக்கம் ஒரு லாபகரமான தொழிலாக வளர்த்தெடுக்கப்பட்டது. அதன் வருவாயைக்கொண்டே அரசின் ஆண்டு வரவுசெலவுக் கணக்கு சரிக்கட்டப்பட்டது.

2. இவர் ஆட்சிக் காலத்தில்தான் மருதம் திரிந்து பாலையானது. மணலை இழந்து ஆறுகள் கழிவுநீர்க் கால்வாய்களாகி நாறின. நிலத்தடி நீர் கடலடியில் பதுங்கிக்கொண்டதால் கடல் நீரே குடிநீராகப் பயன்பட்டது.

3. இவர் ஆட்சிக் காலத்தில்தான் இந்திய அரசின் தீவிரப் பகையையும் தமிழக அரசின் அதிதீவிரப் புறக்கணிப்பையும் பொருட்படுத்தாமல், அண்டை நாடு என்பதற்காக ஒரு குண்டூசி உதவிகூடக் கோராமல் உலகின் முதல் தமிழ் அரசாம் தமிழீழத்தை விடுதலைப் புலிகள் வென்றெடுத்தார்கள்.

4. இவர் காலத்தில்தான் "தமிழ் வாழ்க" என்னும் கூச்சல் காற்றுவெளியெங்கும் ஒலிக் குப்பையாய் நிறைக்கப்பட்டது. அதேசமயம் மின்துடைப்பானால் தெருப்புழுதி உறிஞ்சி அகற்றப்படுவதுபோல் தமிழானது அரசதிகாரப் பொதுவாழ்விலிருந்தும் பொதுப்பயன்பாட்டிலிருந்தும் துடைத்து அகற்றப்பட்டது.

5. இவர் ஆட்சிக் காலத்தில்தான் காமராசர் திறந்து வைத்த பல்லாயிரக்கணக்கான அரசுத் தொடக்கப் பள்ளிகள் ஆசிரியர் இல்லாமலும் ஆங்கில வழிக் கல்விக்குக் குழந்தைகள் அடித்துத் துரத்தப்பட்டதாலும் கொத்துக்கொத்தாய் மூடப்பட்டன.

6. இவர் ஆட்சியில்தான் காஞ்சி சங்கரமடப் பார்ப்பனர் ஜெயேந்திரர் ஜெயலலிதா அரசு தொடுத்த வலுவான கொலை வழக்கிலிருந்து காப்பாற்றப்பட்டார். பார்ப்பனர்கள் சர்வ சுதந்திரத்தோடு இவர் ஆட்சிக்கெதிராக யாகம் வளர்த்தார்கள். தமிழ்த் தேசியர்களும் அதற்கு நெய் வார்த்தார்கள்.

7. இவர் ஆட்சியில்தான் தலித்துகள் வகைதொகையில்லாமல் வன்கொடுமைக்காளானார்கள். வன்கொடுமை வழக்கில் தவிர்க்க வழியின்றி ஒரு அமைச்சரே கைதானார் என்பது தலித்துகள் எதிர்கொண்ட காட்டுமிராண்டித்தனங்களுக்கு வெளிப்படையான சான்றாதாரம்.

14

அரசியலில் நிகழ்வுறும் உண்மைகள் பலவும் இன்று உலகளாவிய தளத்தில் பொதுமைப்பட்டுள்ளன என்பதும் கூடுதலான உண்மை.

கனிந்த பழத்தைக் கைக்குள் வைத்துப் பிழிந்தால் விரலிடுக்கில் கிடைக்கும் ஓட்டை வழியே விதை பிதுங்கி வெளிவந்துவிடுதல்போல் கருணாநிதி தன் முளைப்புத் திறன் கெடாமல் எந்தக் கிடுக்கிப் பிடியிலிருந்தும் பிதுங்கி வந்துவிடும் விதையாகத் தான் வளர்ந்தெழுந்து வந்திருக்கிறார்.

அதிகார அரசியலில் தன் சொந்தக்காரியங்களை முன்னுரிமை கொடுத்துத்தானே முனைந்து முடித்துக்கொள்வதும், அரசுக்காரியங்களை கோப்புக் குறிப்புகள் வழியே அதிகாரபூர்வமாக நகர்த்திச் சென்று முடிக்க முனைவதும் உலகளாவிய நடைமுறையாகியிருக்கிறது. அரசுக்குத் தன் சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ள எத்தனையோ வாய்ப்புகளும் வழிகளும் மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருக்கும். ஆனால் தனிநபருக்கு அவை ஒருமுறைதான் வரும். உடனுக்குடன் பயன்படுத்திக் கொண்டால்தான் உண்டு.

ஒரு காலத்தில் கருணாநிதியின் முன்னுரிமைச் செயல்பாடுகளைக் குற்றத்தொகுப்பாகத் தரம் பிரித்து மகிழ்ந்தவர்கள் இன்று அதுவே உலகளாவிய புழங்கு விதிகளாகியிருப்பதைக் கண்டு என்ன சொல் வார்கள்? கருணாநிதி உலக அரசியலையே சாக்கடையாக்கி விட்டார் என்றா? கருணாநிதிக்கு மாற்றாக ஜெயலலிதா அந்த இடத்தில் பொருந்தும் போது? புரட்சித் தலைவி உலகத்துக்கே ஞானத் தாயாகிவிட்டார் என்றா?

ஒரு பழமொழி உண்டுதானே? கன்றோடு சேர்ந்த பன்றியும் பீ தின்ன... மன்னிக்கவும். ஆனால் இன்று கன்றுகளாகப் போற்றப்படுகிறவர்கள் பன்றிகளாகத் தானே செயல்படுகிறார்கள்?பாவம் பன்றிகள். தங்கள் பெயரை உதறத் தெரியாமல் பெரும் பீழைகளுக்கு ஆளாகி நிற்கின்றன.

ஆகவே, மீண்டும் பதிவு செய்கிறேன்:

ஒற்றை வாக்கியத்தில் சொல்வதென்றால் மனித மாண்புகளைப் பேணத் தெரியாத இந்த அழிசாதிக் கழிசடை சமூகத்தில் சொல்லிக்கொள்ளும்படியான அடையாளமோ, முகவரியோ, பின்புலமோ, குலப் பெருமையோ, புலமைத்தளமோ இல்லாத ஒரு சாமானியன் - அதிலும் ஆகப் பிற்படுத்தப்பட்ட ஒரு அதிசூத்திரன்- தான் வாழும் சகாப்தத்தின் புறக்கணித்துவிட முடியாத வரலாறாகத் தன்னை எடுத்து நிறுத்திக்கொள்ள முடியும் எனில், அந்த நம்ப முடியாத வரலாற்று விந்தையைக் கருணாநிதி நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்தானே?