ஊராட்சி அமைப்பு என்பது தமிழகத்துக்குப் புதிதல்ல. வரலாற்றுக் காலம் தொட்டு, ஊராட்சி அமைப்புகள் பல பகுதிகளிலும் இருந்து வந்துள்ளன. இன்று இருக்கின்ற மூன்றடுக்கு நிர்வாக முறைபோல அன்று இல்லை என்றாலும், ஒரு கிராமத்தை அக்கிராம மக்களே நிர்வகித்துக் கொள்ளும் அமைப்புகள் இருந்தன. ஊரில் நடைபெறுகின்ற நல்லதும் விரும்பத்தகாததுமான நிகழ்வுகள், ஒழுங்கு, நீர் பங்கீடு, காவல், கோயில் நிர்வாகம் போன்ற அத்தனையும் கிராம பஞ்சாயத்தின் வழியே மேற்கொள்ளப்பட்டன.

சோழர்கள் காலத்தில் குடவோலை முறையில் கிராம நிர்வாகிகளை தேர்ந்து எடுத்தனர். உத்திரமேரூர் கல்வெட்டு இம்முறையைப் பற்றி விளக்குகிறது. ஊர்களில் அவரவர் சாதிகளுக்கு என்று தனித்தனி பஞ்சாயத்துகள் உண்டு. சில இடங்களில் பொதுப்பஞ்சாயத்தும் இருக்கும். அவ்வகை பஞ்சாயத்துகளுக்கு தலித் மக்கள் கட்டுப்பட வேண்டும். உத்திரமேரூர் கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்ற கிராம நிர்வாக முறை, முற்றிலும் சாதி இந்துக்களுக்கு உரியது. படித்த, வரி செலுத்துகிற, நிலம் வைத்திருக்கிற மனிதர்களே தேர்தலில் நிற்கவேண்டும் என்பது அப்போது விதியாக இருந்திருக்கிறது. ஆட்சி அதிகாரம் என்று வருகிறபோது அங்கே தலித்துகளுக்கு இடமில்லை என்பது, இந்து சமூகத்தின் சாதிய விதி. உத்திரமேரூர் கல்வெட்டு தெரிவிப்பதும் அதைத்தான். வெள்ளையர்கள் ஆண்டபோதும் இந்த நிர்வாக முறை இருந்தது. மக்களாட்சியின் ஓர் அங்கமாக ஊராட்சி முறை, சென்ற நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

நாடு முழுவதிலும் ஊராட்சி அமைப்புகளை முறையாக ஏற்படுத்தி, தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களிடம் நிர்வாக அதிகாரத்தை தருவதற்கு வகை செய்யும் இரு சட்டத்திருத்தங்கள் 1993ஆம் ஆண்டில் செய்யப்பட்டன. 73 மற்றும் 74ஆம் சட்டத்திருத்தங்களான இவற்றின் மூலம் 1993 ஏப்ரல் 20 அன்று, ஊராட்சி நிர்வாகத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார். தலித் மக்கள், பெண்கள் உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்றிட இச்சட்டம் வகை செய்கிறது. தமிழகத்தில் இருக்கின்ற 1,04,167 உள்ளாட்சி உறுப்பினர்களில் 24,229 தலித்துகளும், 30,426 பெண்களும் பொறுப்பு வகிக்கின்றனர். இச்சட்டத்தை ஏற்று மாநில அரசுகள் ஓர் ஆண்டுக்குள் தமது உள்ளாட்சி அமைப்புச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று மய்ய அரசின் சட்டம் கூறுகிறது.

தமிழக அரசு 1994 ஆம் ஆண்டில் பஞ்சாயத்து சட்டத்தை இயற்றியதுடன் அதில் பல்வேறு திருத்தங்களையும், இணைப்புகளையும் மேற்கொண்டது. இந்தத் திருத்தம் மற்றும் இணைப்புகளின்படி ஊராட்சி அமைப்புகள் வலுவுள்ளதாகவும், தற்சார்பு கொண்டதாகவும் மாற்றப்பட்டுள்ளன. ஊராட்சி நிர்வாகம் தமது ஊராட்சிப் பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைப்பதற்கும், நிறுவனங்கள் அமைப்பதற்கும் அனுமதி வழங்கவோ, மறுக்கவோ அதிகாரம் கொண்டவையாகும். வரிவசூல் செய்யலாம்; சில காரணங்களுக்காக சில பகுதிகளை ஊராட்சி நிர்வாகப் பரப்புக்குள்ளிருந்து நீக்கவோ, சேர்க்கவோ செய்யலாம். தகவல்களைக் கோரலாம். இப்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முறையாகப் பயன்படுத்தினாலேயே சுற்றுச் சூழல் சிக்கல் முதல் குடிநீர் சிக்கல் வரை தீர்க்கலாம். ஆனால் அவ்விதம் செய்வதில்லை; செய்யவும் தெரிவதில்லை.

கட்டாயக் கடமைகள், விருப்பக் கடமைகள், ஒப்பளிப்பு பணிகள் என்று மூன்று வகையான பணிகளை ஊராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். 73 ஆவது சட்டத்திருத்தம், ஊராட்சிகளுக்கு 29 வகையான அதிகாரங்களை வழங்கியுள்ளன. அவைகளை ஊராட்சிகளுக்கான கடமைகள் என்பதே பொருத்தமானதாக இருக்கும். விவசாயம் மற்றும் விரிவாக்கம், நில அபிவிருத்தி, நில மேம்பாடு, மண்வளப்பாதுகாப்பு, சிறுபாசனம் என நீளும் இக்கடமைகளில், தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்கள் மேம்பாடும் ஒன்று. இந்த அதிகார வகைகளிலேயே, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் மேம்பாடுதான் 29 அம்சங்களைக் கொண்ட நீண்ட பிரிவு.

இப்பிரிவுகளில் உள்ள ஒவ்வொரு பணியையும் கவனம் கொடுத்து மேற்கொண்டால், ஊராட்சிகள் சாதியத்தன்மை இல்லாத அல்லது குறைந்தவைகளாக மாறும் என்பது உண்மை. ஆனால் அப்படியான ஒரு நிலை இதுவரை எங்கும் ஏற்படவில்லை. தீண்டாமை ஒழிக்கப்பட்ட ஊராட்சிகளுக்கு அரசு வெகுமதியாகத் தருகின்ற ஒரு லட்ச ரூபாய் தொகையினைப் பெற்ற ஊராட்சி நிர்வாகங்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல.

ஊராட்சித் தலைவர் பதவிகளை காலங்காலமாக அனுபவித்து வந்தவர்கள் சாதி இந்துக்கள். நிலவுடைமையாளர்களாகவும், பண்ணையார்களாகவும் இருக்கின்ற அவர்கள் திடீரென அதிகாரம் பறிபோனதை விரும்பவில்லை. அதிலும் தலித்துகளும், பெண்களும் இப்பதவிகளுக்கு வருவதில் அவர்களுக்கு அறவே விருப்பமில்லை. இதை எதிர்த்து தமது சாதிய அதிகாரத்தை காட்டுவதற்காகவே கொடுஞ்செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலவளவு முருகேசன், நக்கலமுத்தன் பட்டி சேர்வாரன் என அவர்களால் கொலையுண்ட தலித் ஊராட்சி மன்றத் தலைவர்களின் பட்டியல் நீள்கிறது. மதுரை நகராட்சி உறுப்பினர் லீலாவதியும் ஆண் ஆதிக்க அதிகார வெறியர்களால் இப்படி கொலையுண்டவர் தான்.

சீர்திருத்தங்களை மேற்கொள்ள நினைக்கிற எச்சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவருக்கும் சவால்களும், தடைகளும் காத்திருக்கின்றன என்பது உண்மையே. ஆனால், இப்படி மாற்றத்தை உருவாக்க விரும்புகிற தலைவர்கள் வெகு சொற்பம் தான். ஊராட்சி மன்ற தலைமைப் பதவி அதிகாரம் செய்வதற்கானது, பணம் ஈட்டுவதற்கானது, சமூக கவுரவத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கானது என்றுதான் பரவலாக நினைக்கப்படுகிறது. கட்சி, சாதி, மத உணர்வுகளைக் கடந்த பதவி தான் இப்பதவி. ஆனால், உண்மையில் அதில் இருப்பவர்கள் அவ்வகையான உணர்வுகளுடன் இல்லை. ஊராட்சி மன்ற நிர்வாகிகளும், தலைவர்களும் தமது பதவிக்கு உரிய அதிகாரங்களையும், கடமைகளையும் தெரிந்து கொள்ளõமல், பெரும் அறியாமையில் இருக்கின்றனர் என்பது அதிர்ச்சி தரும் உண்மையாகும். மக்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வு இல்லை. எனவே ‘சுமூக' சூழ்நிலை அப்படியே தொடர்கிறது.

சாதிய கண்ணோட்டத்துடனும், அதிகாரத் திமிருடனும் நடந்து கொள்கின்ற ஊராட்சி மன்றத் தலைவர்களைப் பதவியில் இருந்து தூக்கி எறிவதற்கான போராட்டம் மிக அரிதாகவே நடக்கிறது. குற்றச்செயல்களைப் புரிந்தாலோ, ஆரோக்கியமான மனநிலை உடையவராக இல்லாமல் இருந்தாலோ, தனது சொந்த நிறுவனங்கள் மூலம் ஒப்பந்தப் பணிகளை நிறைவேற்றினாலோ, ஊராட்சிமன்றத் தலைவர் ஒருவரை பதவி நீக்கம் செய்ய முடியும். இப்படி அப்பதவியில் இருப்பவரை தகுதியிழக்கச் செய்ய பன்னிரெண்டிற்கும் மேற்பட்ட காரணங்கள் இருக்கின்றன. இக்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மிகமிக அரிதாகவே தகுதியிழப்பு செய்யப்படுகின்றனர்.

‘சாதிய உணர்வு என்பது ஒரு மனநோய்தான்' என்றார் அம்பேத்கர். சாதிய உணர்வும், ஆதிக்க வெறியும் கொண்டவர் ஆரோக்கியமான மனநிலை அற்றவர்தான். இத்தகைய நபரால் தான் வன்கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் சாதிய நோக்கோடு ஊராட்சி மன்றத்தலைவர் ஒருவர் நடந்து கொள்கிறார் என்பதற்காக, யாரும் இதுவரை பதவி நீக்கம் செய்யப்பட்டதில்லை. எந்த கடமைகளை சிரமேற்கொண்டு செய்ய வேண்டுமோ, அவைகளுக்கு எதிராகவே ஊராட்சி மன்றத் தலைவர்கள் நடந்து கொள்கிற போக்கு தொடர்கிறது.

வேலூர் மாவட்டம் குடியேற்றம் தொகுதியில் இருக்கும் ராஜாகுப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் சாதிய நோக்கோடு நடந்து கொள்கிறார் என குற்றச்சாட்டுகள் அண்மையில் எழுந்துள்ளன. இதைப்பற்றிய செய்திகள் வேலூர் பதிப்பு நாளேடுகள் சிலவற்றிலும் வெளியாகியுள்ளன. ஊராட்சி மன்றத் தலைவர் டி.சி. ராஜேந்திரன், ஒரு சாதி இந்து. இவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட தலித் மக்கள் கையொப்பமிட்டு – முதலமைச்சருக்கும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் புகார்களை அனுப்பியுள்ளனர்.

இந்த ஊராட்சியில் கோவிந்தாபுரம், சின்ன ராஜாகுப்பம், பெரிய ராஜாகுப்பம் ஆகிய கிராமங்கள் இருக்கின்றன. இரண்டாயிரத்து அய்நூறுக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சி இது. மூன்று தலித் உறுப்பினர்களும், மூன்று தலித் அல்லாத உறுப்பினர்களும் இந்த ஊராட்சி மன்றத்தில் பொறுப்பு வகிக்கின்றனர். இவர்களில் இருவர் பெண்கள். நாயுடு (கம்மவார்) சமூகத்தினரே பெரும் நிலவுடைமையாளர்களாக இப்பகுதியில் இருக்கின்றனர். இந்த ஊராட்சி மன்ற தகவல் பலகையில் எழுதப்பட்டுள்ள வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்போர் பட்டியலில் 28 பிற்படுத்தப்பட்டோரும், 26 தலித் சமூகத்தவரும் இருக்கின்றனர். இவர்களில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள அனைவரும் இரண்டு ஏக்கரில் இருந்து அய்ந்து ஏக்கர் வரை, நிலவுடைமையாளர்களாக இருக்கின்றனர் என்று தலித் மக்கள் கூறுகின்றனர். நிறைவேற்றப்படாத பணிகளுக்காக செலவு செய்ததாக காரணம் காட்டி, ஊராட்சி நிதியை தலைவர் கையாடல் செய்துள்ளார் என்றும் கூறுகின்றனர்.

இந்த ஊராட்சியில் இயங்காமல் இருக்கிற பத்து ஆழ்துளை கிணறுகள் மற்றும் நல்ல நிலையில் இருக்கிற பிறிதொரு ஆழ்துளை கிணறு ஆகியவற்றுக்கு பராமரிப்பு செலவாக 17,448 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்துக்கு 12,000 ரூபாய், சுடுகாடு பராமரிப்புக்கு 1,950 ரூபாய், பிற செலவினங்கள் என 5,400 ரூபாய் என்று சுமார் ஒன்றரை ஆண்டுகளில் (நவம்பர் 2006 முதல் ஏப்ரல் 2008 வரை) 1,51,652 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவல்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டபோது, ஊராட்சி மன்றத் தலைவரே அளித்துள்ளார். ஆனால் கணக்கில் உள்ள தொகைக்கு ஏற்ப எந்தப் பணியும் நடைபெறவில்லை. நீரின்றி மகளிர் சுகாதார வளாகம் பூட்டிக்கிடக்கிறது. நல்ல தண்ணீர் இணைப்பு தருவதற்கு வழியிருந்தும், அந்த ஊராட்சியில் இருக்கும் நடுநிலைப்பள்ளிக்கு உப்பு தண்ணீரே இன்றளவும் வழங்கப்படுகிறது. அந்த நீரில் சமைக்கும் சத்துணவை சாப்பிட விரும்பாமல் பெரும்பாலான மாணவர்கள் உணவை கொட்டி விடுவதாக பெற்றோர்கள் புகார் சொல்கின்றனர்.

இந்த ஊராட்சியில் இருக்கின்ற பஞ்சமி நிலங்களை பினாமி பெயரில் வாங்கி, உரிமமின்றி அந்நிலத்தில் உள்ள பாறைகளை உடைத்து விற்று லட்சக்கணக்கில் பணம் சேர்ப்பதாகவும், 100 நாள் வேலை திட்டத்துக்கு தலித் நிலங்களையே தேர்வு செய்து குளங்களை வெட்டி விவசாயம் செய்யவிடாமல் தடுப்பதாகவும் தலித் மக்கள் சொல்கின்றனர். இவ்வாறு ஊராட்சிமன்றத் தலைவர் முறைகேடாகப் பயன்படுத்தும் பஞ்சமி நிலங்களை அளவு எண்.148/1ஏ இல் இருந்து 150/2பி வரை உள்ளவையாகும். இந்த நிலங்களின் மொத்த பரப்பு 2.25 ஏக்கர். ஏரி மண்ணை தூர் வாரி செங்கல் அறுக்க எடுத்ததற்காக இவர் அரசுக்கு சுமார் 90,000 ரூபாய் தண்டம் கட்டியுள்ளார். தலித் மக்கள் பகுதியிலேயே முறையாக இவர் எந்தப் பணிகளையும் செய்வதில்லை.

கேட்டால்,"தலித்துகள் யாரும் எனக்கு வாக்கு அளிக்கவில்லை. எனவே அவர்களுக்கு எதையும் செய்ய வேண்டுமென்ற அவசியம் இல்லை' என்று எகத்தாளம் பேசுகிறார் என்கிறார்கள் தலித் மக்கள். கிராம சபா மூலம் தொகுப்பு வீடுகள் கட்ட தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளில் மூன்று பேர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள். இதை எதிர்த்து தலித் மக்கள் அளித்த புகாரின் பேரில் (மனு எண்.15142/30.6.08 வே.மா) ஊரக வளர்ச்சித்துறையின் மாவட்ட அலுவலகம் வீடுகட்டும் பணிகளை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. (கடித எண்.அ6/936/08 நாள் 4.7.08).

இக்குற்றச்சாட்டுகளை மறுக்கின்ற டி.சி.ராஜேந்திரன், வீடு இல்லாத ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்குத்தான் வீடு கட்டித் தருகிறேன் என்கிறார். தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அவர் அளித்த விவரத்தில் தான் பதவி ஏற்ற ஒன்றரை ஆண்டுக்கான செலவு கணக்கு என விவரங்களை அளித்திருந்தாலும், அதை தற்போது மறுத்து அக்கணக்கு 3.4.2006 - 22.9.06 வரையுள்ளது என்கிறார். இக்காலகட்டத்தில் ஒரு தலித் பெண் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

இவ்வூராட்சியின் பகுதிகளை ஆய்வு செய்த ஊராட்சிமன்றத் தலைவர் குழு, இவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமிருப்பதாக கண்டறிந்து இவரை கண்டித்துவிட்டுச் சென்றிருக்கிறது. மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் அலுவலகமும் தொகுப்பு வீடு கட்டும் பணிகளை நிறுத்தும்படி உத்தரவிட்டுள்ளது. ஆனால், மாவட்ட நிர்வாகம் இவரை தகுதியிழப்பு செய்யவில்லை, கண்டிக்கவும் இல்லை என்பதால், இவரின் போக்கு மாறவில்லை. தொடர் போராட்டங்களின் மூலம் நிலையை மாற்றுவோம் என்கிறார்கள், இவ்வூராட்சியின் தலித் மக்கள். மக்கள் போராட்டங்களின் மூலமே மாற்றங்கள் உருவாகின்றன என்பதை வரலாறு நமக்கு சொல்கிறது.

ஊராட்சி மன்றங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரப் பொறுப்புகளில் 27ஆவது கடமை - தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்கள் மேம்பாடு

1. ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான திட்டங்களை அந்த துறையினரோடு சேர்ந்து நிறைவேற்றுதல்.
2. ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான சுடுகாடுகளை அமைத்தல்.
3. வீட்டு வசதியினை உருவாக்கித் தருதல்.
4. இவர்களுக்கு வீட்டுக்கொரு மின்விளக்கு கிடைக்க ஏற்பாடு செய்தல்.
5. கலப்புத் திருமணங்களை ஆதரித்து ஏற்பாடு செய்தல்.
6. இவர்களுக்கு சிறு வியாபாரங்களை ஏற்பாடு செய்தல்.
7. இம்மக்களுக்கு சமுதாயக் கூடங்கள் கட்டுதல்.
8. இம்மக்களுக்கான சமூகப் பாதுகாப்புச் சட்டங்களான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்களை தீவிரமாக நடைமுறைப்படுத்துதல்.
9. பிணைத் தொழிலாளர்களை விடுவித்து மறுவாழ்வு தருதல்.
10. இம்மக்களின் கல்வித்தரம் ஆராயப்பட்டு உயர்த்தப்படுதல்.
11. இம்மக்களின் குழந்தைகளில் பள்ளி இடைநிற்போர் எண்ணிக்கைகளைக் குறைத்தல்.
12. இச்சமூக சிறுவர்களின் கல்வித்தரம் உயர்வதற்கு திட்டங்கள் வகுத்து நிறைவேற்றுதல்.
13. இதற்கென சிறப்புப் பயிற்சி நிறுவனங்களை ஏற்படுத்துதல்
14. இச்சமூக மக்கள் படிக்கும் பள்ளிகளுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு ஒன்றிய நிர்வாகத்திற்கு உதவி செய்தல்.
15. இச்சமூக மக்களின் நல்வாழ்வுத் திட்டங்களுக்கு பயனாளிகளை தேர்வு செய்தல்.
16. புதிய பள்ளிகள், மாணவர் விடுதிகள் ஏற்பாடு செய்தல், விடுதிகளை ஆய்வு செய்தல்.
17. புதிய வீட்டு மனைகள் வழங்க ஏற்பாடு செய்து, இடம் ஒதுக்கித்தருதல்.
18. தெருவிளக்குகள் ஏற்பாடு செய்தல்.
19. இம்மக்களை தொழில் முனைவோராக்குவதற்குப் பயிற்சிகள் ஏற்பாடு செய்தல்.
20. இம்மக்களை வன்கொடுமைகளிலிருந்து பாதுகாக்க வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பயன்படுத்துதல். இம்மக்கள் எல்லா பொது இடங்களிலும் சமமாக நடத்தப்படுவதை உறுதி செய்தல்.
21. ஊர் மக்கள் அனைவருக்கும் இந்த சமத்துவ மனநிலை ஏற்பட பாடுபடுதல்.
22. பஞ்சமி நிலங்களை மீட்டுத் தருதல்.
23. பிணங்களை தூக்கிச் செல்லுதல், பறை அடித்தல், பிணக்குழி தோண்டுதல் போன்ற வேலைகளை இம்மக்களே செய்ய வேண்டும் என்ற சமூக வற்புறுத்தலை தவிர்த்தல்.
24. நில உச்சவரம்பு சட்டத்தினால் இம்மக்களுக்கு பயன் கிடைக்க வகை செய்தல்.
25. கிராம சமூக ஒத்துழைப்போடு தீண்டாமை ஒழிப்பை உறுதிப்படுத்துதல்.
26. தொண்டு நிறுவனங்களை இப்பணிக்கு ஈடுபடுத்துதல்.
27. மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் இழி செயலை தவிர்த்தல்.
28. தற்போதுள்ள பள்ளிகள், மாணவர் விடுதிகளை மேற்பார்வையிட்டு தரம் பராமரித்தல்.
29. முதலமைச்சரின் சிறப்பு விருதுகள் பெறுவதற்கான மாணவர்களை அடையாளம் கண்டு உதவுதல்.
Pin It