தீண்டாமை கிறித்துவ மதத்திற்கு அந்நியமானது என்று 1734 மற்றும் 1744 ஆகிய ஆண்டுகளில் போப் அறிவித்த பிறகும், இது போன்று உள்ளூர் சூழலை உள்வாங்கி ஏற்றுக் கொள்ளும் தன்மைக்காக பல பாதிரியார்கள் விமர்சிக்கப்பட்டனர். இருப்பினும் கத்தோலிக்கர்கள் இடையே சாதி ஏற்றுக் கொள்ளப்பட்ட சமூக அமைப்பாகவும், கிறித்துவ மதத்திற்குப் பிறரை இழுக்க பயன்படக் கூடியதாகவும், ஒரு சில சிறிய மாற்றங்களுடன் தேவாலயங்களுக்குள்ளேயும் நடைமுறைப்படுத்தக் கூடியதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. இதனுடைய மிகப் பெரிய விளைவுதான் இன்று தலித் கிறித்துவர்களின் சமூக வாழ்வியல் நிலை. தேவாலயங்களுக்குள் நிலவும் சாதி அடிப்படையிலான பிரிவினைகள், மதப் பணியாளர்கள் மற்றும் அம்மதத்தைச் சார்ந்த சாதாரண மக்கள் இரு தரப்பிலும் நிலவும் சாதியப் பாகுபாடுகள் ஆகியவையாகும்.

Eraiyur church
உண்மையில் உச்ச நீதிமன்றம், பிற மதத்திலிருக்கும் தலித்துகள் குறித்து சில கேள்விகளை எழுப்பியிருந்தது. கிறித்துவர்கள் தாங்கள் சாதி முறையைப் பின்பற்றுவதாக ஒப்புக் கொள்வார்களா? முஸ்லிம்கள் எப்போதிருந்து சாதி முறையைப் பின்பற்றத் தொடங்கினார்கள்? இது போன்ற கேள்விகள், மத நூல்களின் அடிப்படையில் நிலவும் சமூகப் பாகுபாடுகளை குறித்த உச்ச நீதிமன்றத்தின் பார்வையையும், மத நூல்களுக்கும் நடைமுறைக்கும் உள்ள வேறுபாட்டை அறியாத குழப்ப நிலையையுமே எடுத்துக் காட்டுகின்றன. இது தொடர்பான விவாதத்தில் ஆறு பிரச்சினைகள் முக்கியமானதாக இருக்கின்றன.

முதலாவதாக, இந்து மதத்தில் தலித்துகள் என்று ஒரு பிரிவு ஏற்படுவதற்கும், அவர்கள் தான் இந்து மதத்ததிலேயே மிகவும் கீழானவர்கள் என்று சொல்லப்படுவதற்கும் அடிப்படைக் காரணமாக மநு உருவாக்கிய சட்டங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. தற்போது கிறித்துவர்களும் முஸ்லிம்களும் வைத்திருக்கும் கோரிக்கைகள், இது போன்ற பிரிவுகள் அவர்கள் மதங்களிலும் உள்ளவனவா என்ற கேள்வியை எழுப்பி இருக்கின்றன. குறைந்தது மூன்று காரணங்களுக்காக இந்த கேள்விக்கு ‘ஆம்’ என கூறலாம்.

(1) மதம் ஒரு தத்துவமாக இருப்பதற்கும் நடைமுறை வழக்கத்தில் அது செயல்படும் விதத்திற்கும் பெரும் வேறுபாடுகள் உள்ளன. மதம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் சமூக எதார்த்தங்களை மத மாற்றங்கள் மாற்றி விடுவதில்லை. வேறு மாதிரியாக சொல்ல வேண்டுமெனில், பலநூற்றாண்டுகளாக நிலவி வரும் சமூக இழிவுகள், மத மாற்றத்தினால் மட்டும் நொடியில் மறைந்துவிடுவதில்லை. அதிலும் மதம் மாறியவர்கள் தங்கள் மத சமூகத்தில் வாழாமல், எந்த மதத்திலிருந்து வெளியேறினார்களோ, அந்தப் பெரும்பான்மை மதச் சமூகத்தில் வாழும் போது சூழல் மேலும் இறுக்கமடைகிறது.

இந்த காரணத்தினாலேயே மதம் மாறியவர்களின் மதத்தில் பழைய மதத்தின் பாதிப்புகள் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள கிறித்துவ மற்றும் முஸ்லிம் சமூகத்தின் வாழ்நிலை மற்ற நாடுகளில் உள்ளதைப் போல இல்லை. அதனால், அந்த மத நூல்கள் அறிவுறுத்தும் சகோதரத்துவம் போன்றவற்றை இங்கு பொருத்திப் பார்ப்பது அர்த்தமற்றது. இந்த நிலையில் டாக்டர் அம்பேத்கர் அவர்கள், தமது ‘சாதி ஒழிப்பு’ நூலில் கூறியதை நினைவு கூற வேண்டும்: “இந்துக்களுக்கு சாதி என்பது மூச்சுக்காற்று போன்றது. அவர்கள் சுற்றியுள்ள காற்றை முழுவதும் மாசுபடுத்திவிட்டனர். இதனால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்... சீக்கியர்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறித்துவர்கள்.''

(2) தங்களது சமூக மற்றும் பண்பாட்டு அடையாளங்களிலிருந்து முழுமையாகத் தங்களை விலக்கிக் கொள்ளும் தனி மனித மத மாற்றங்களாக அல்லாமல், இந்தியாவில் நடைபெறும் மத மாற்றங்கள், ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு இடம் மாறுவதாகவே இருக்கிறது. அதாவது தங்களது சமூக அடையாளங்களிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளாமல், தனிநபர்களாகவோ, குழுவாகவோ மதம் மாறுகின்றனர்.

(3) சூழலை உள்வாங்கி ஏற்றுக் கொள்வது கத்தோலிக்க வழக்கம். 1606 ஆம் ஆண்டு மதுரையில் தனது மதப்பணியைத் தொடங்கிய ராபர்ட் நொபிலி, "கீழ் சாதி' கிறித்துவர்களுடன் குறைந்த அளவிலேயே தொடர்புகள் வைத்துக் கொள்வது; உணவு, உடை ஆகியவற்றில் ‘உயர் சாதி' பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவது என ஒரு கிறித்துவ ‘சன்யாசி’யாகவே தன் வமழ்க்கையை அமைத்துக் கொண்டார். தொடக்கக் காலத்தில் அவர் பார்ப்பனர்கள் உட்பட, ‘உயர்சாதி’யினரையே மதமாற்றம் செய்தார். அப்படி மதம் மாறியவர்கள் தங்கள் பழக்க வழக்கங்களை அப்படியே தொடர அனுமதித்தார்.

தங்கள் சாதியை உடைத்துக் கொண்டு ‘பறவர்’ கிறித்துவர்களுடனோ வெளிநாட்டு கிறித்துவர்களுடனோ பழக வேண்டிய தேவையோ, கட்டாயமோ அவர்களுக்கு ஏற்படவில்லை. அவர், “கிறித்துவராக ஆவது என்பது, ஒருவன் தனது சாதி, உயர்வு தன்மை, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை உதறுவது ஆகாது. கிறித்தவ மதம் இவற்றில் தலையிடுகிறது என்ற செய்தி சாத்தானால் மக்களிடையே பரப்பப்படுகிறது. இதுவே கிறித்துவத்திற்கு இருக்கும் பெரும் இடையூறாகும்'' என்று எழுதுகிறார்.

ஆக, டி.நொபிலியால் மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் தங்கள் குடுமி, பூணூல், தங்களது தனிப்பட்ட குளியல் மற்றும் உணவுப் பழக்கங்கள் போன்ற சமூகத் தொடர்புகளை முடிவு செய்யும் அனைத்தையும் தொடர அனுமதிக்கப்பட்டனர். இதனால் இந்து சமூகத்திற்குள்ளேயே கிறித்துவர்களாக வாழ அவர்களுக்கு சாத்தியப்பட்டது.

இரண்டாவதாக, நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகள் புதிதல்ல. காலனிய ஆட்சிக் காலத்திலேயே இந்து மதத்திலிருந்து கிறித்துவத்திற்கு மாறியவர்கள் குறித்தான விவாதம் எழுப்பப்பட்டது. அந்த விவாதத்தின் பகுதியாக, 1924ஆம் ஆண்டு பொது வழிமுறைகள் துறைக்கான இயக்குநர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சலுகைகளில் இந்திய கிறித்துவ மாணவர்களுக்கு அனுமதிக்கப்பட்டவை குறித்து சென்னை கல்வி சட்ட விதிகளின் கீழ் சென்னை அரசிடம் அளித்த குறிப்பில் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டுள்ளது:

“கிறித்துவம் என்பது ஒரு மதம். பஞ்சமர்கள் இந்துக்களின் சாதிய அமைப்பின் ஒரு நிச்சய சமூக அங்கத்தினர். எந்த ஒரு தனி நபரும் கிறித்துவம் மற்றும் இந்து மதம் என இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க இயலாது. மேலும் கிறித்துவம் எந்த சாதியையும் ஏற்றுக் கொள்வதில்லை. தர்க்க ரீதியாக ஒருவர் கிறித்துவராக இருந்தால், எந்த சாதியையும் ஏற்றுக் கொள்ளாதவராக இருக்க வேண்டும். அதனால் அவர் எந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பையும் சார்ந்தவராகவும் இருக்க இயலாது; அல்லது அவர் ஓர் இந்து பஞ்சமராகவோ, ஆதிதிராவிடராகவோ இருக்கலாம். அப்போது அவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் ஆகிறார். ஆனால் ஒரே சமயத்தில் அவர் ஒரு கிறித்துவராகவும் இந்துவாகவும் அதாவது, பிற்படுத்தப்பட்டவராகவும் பிற்படுத்தபட்டவர் அல்லாதவராகவும் இருக்க இயலாது.''

பொது வழிமுறைகள் துறைக்கான இயக்குநரின் வாதத்திற்கு, கல்வித் துறை செயலாளர் அளித்த பதிலில், மதமாற்றம் என்பது தன்னளவில் பொருளாதார நிலையையோ, கல்வியில் பிற்படுத்தப்பட்ட தன்மையையோ தானாக மாற்றிவிடாது என்று கூறுகிறார்.

மூன்றாவதாக, ஒடுக்கப்பட்ட பிரிவினரின் தொடர்ந்த வற்புறுத்தல் காரணமாகவும், அவர்களின் தலைவர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் இடையறாத பிரச்சாரத்தின் காரணமாகவும் 1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின் ஒரு பகுதியாக முதன் முதலில் வெளியிடப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதி பட்டியலில் இணைக்கப்பட்ட சாதிகள் இந்து தீண்டத்தகாதவர்கள் மட்டுமே என்றால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதியாக ஏன் ஒடுக்கப்பட்ட சாதி பட்டியல் உருவாக்கப்பட வேண்டும்? நிச்சயம் அது தீண்டாமையை ஒழிக்க, அதிலும் இந்துக்கள் இடையிலிருந்து மட்டும் ஒழிக்க அல்ல. அதற்கான சட்டம், சட்டப்பிரிவு 17இல் உள்ள அடிப்படை உரிமைகளின் கீழ் வருகிறது.

அது எந்த மதத்தோடும் அடையாளப்படுத்தப்படாமல் ஒட்டுமொத்தமாக தீண்டாமையை குறித்தே பேசுகிறது. மாறாக, ஒடுக்கப்பட்ட சாதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டது, அவர்கள் மீதான சமூக இழிவுகளைப் போக்க என்றால், கிறித்துவர்களும் முஸ்லிம்களும், இந்து பட்டியல் சாதியினரைப் போலவே - தங்கள் மதத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரையும் அந்தப் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று கோருவது நியாயமானதே. அப்படி அதை செய்யாமல் விட்டால், மதச்சார்ப்பற்ற அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கிய பிரிவு மதசார்பின்மைக்கு எதிராக இருப்பதாக ஆகிவிடும்.

நான்காவதாக, ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் இயங்கும் மதம் மற்றும் மொழி சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தை கிறித்துவர்கள் மற்றும் முஸ்லிம்களின் கோரிக்கைகளைப் பரிசீலிக்குமாறு இந்திய அரசு கேட்டுக் கொண்டது. இருப்பினும், அரசியலமைப்புச் சட்டத்தின் ஒடுக்கப்பட்ட சாதிகள் பட்டியல் சட்டம் 1950 இல் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலம் ஒடுக்கப்பட்ட சாதி பட்டியலோடு பிணைக்கப்பட்டுள்ள மதத்தை அதிலிருந்து விலக்கி, கிறித்துவர்கள் மற்றும் முஸ்லிம்களில் உள்ள தலித்துகளை அப்பட்டியலில் இணைக்க வேண்டும் என்று மிஸ்ரா ஆணையம் பரிந்துரைத்துள்ளது. ஆனால், அந்த அறிக்கையை அரசு வெளியிடாமல் இருப்பது, அரசின் நேர்மையை சந்தேகத்திற்குள்ளாக்குகிறது.

அய்ந்தாவதாக, பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையம், மிஸ்ரா ஆணையத்தின் பிரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட போதும் தலித் கிறித்துவர்கள் மற்றும் முஸ்லிம்களை பட்டியலில் இணைப்பது, இடஒதுக்கீட்டின் பலனை அனுபவிப்பவர்களின் நிலையை கேள்விக்குள்ளாக்குவதாக மாற்றிவிடும் என்பது தேவையற்றது. தலித் கிறித்துவர்களும், முஸ்லிம்களும் பட்டியலில் இணைக்கப்பட்ட போதே, அப்பட்டியலில் ஏற்கனவே உள்ள மற்றவர்களோடு அரசியல் பிரதிநிதித்துவம் உட்பட, அனைத்து இடஒதுக்கீட்டு உரிமைகளும், அவர்களுக்கும் வழங்கப்பட ச்வேண்டும்.

ஆறாவதாக, கிறித்துவர்களும் முஸ்லிம்களும் அவர்களுக்கிடையே இருக்கும் தலித்துகளை அங்கீகரிக்காமல், அண்மைக் காலம் வரை இந்து தலித்துகள் நடத்தப்பட்டதைப் போல இவர்களையும் நடத்துவார்களானால், அதற்காக அரசையே குற்றம் சாட்ட வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த உடனேயே அரசு பட்டியல் சாதியினர் மீது போதுமான கவனம் செலுத்தி, திட்டமிட்டு அதை ஒரு பத்தாண்டு காலத்திற்கு தொடர்ந்திருந்தால், அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்ட விதத்திலான இட ஒதுக்கீடு பல காலத்திற்கு முன்பே முடிவுக்கு வந்திருக்கும்.

ஆனால் தனது அரசியல் சூழ்ச்சிகள் மற்றும் எவ்விதப் பொறுப்புணர்ச்சியுமின்றி ஆர்.எச்.தானே தனது "சமத்துவம்' என்ற நூலில் மிகச் சரியாக கூறியிருப்பது போல, “ஒரே ஒரு காரட்டை காட்டி ஓராயிரம் கழுதைகளை உழைக்க வைக்கும்'' செயலில் அரசு ஈடுபட்டுள்ளது. இத்தகைய செயல்கள் சரி செய்ய இயலாத அளவிற்கானது என்பதை உறுதிப்படுத்தியிருப்பதோடு, நலன் சார்ந்த என்ற கருத்தியலுக்கே முற்றிலும் எதிர்மறையான விளக்கத்தை அளிப்பதாகவும் இருக்கிறது.

நன்றி: "இந்தியன் எக்ஸ்பிரஸ்'
தமிழில்: பூங்குழலி
Pin It