வசிக்கத் தகுதியற்ற வெற்று நிலங்களாகிக் கிடக்கின்றன கிராமங்கள். வறட்சி, தனிமை, புறக்கணிப்பு இவற்றைத் தாங்கிக் கொள்ளக் கூடியவர்கள் –நகரத்தின் பகட்டையும் போலித்தனத்தையும் வெறுக் கின்றனர். எனவே, வெந்ததைத் தின்று வாழ்க்கையை நடத்துகின்றனர் கிராமங்களில். நகரத்தை மட்டுமே குறிவைக்கும் நவீனமும் நலத்திட்டங்களும் -விவசாயத்தையும் அதை நம்பிப் பிழைத்தவர்களையும் நம்பிக்கை இழக்கச் செய்துவிட்டன. தொலைக்காட்சியும், செல்போன்களும் கிராமங்களை அடைந்துவிட்டனதான்... அதனாலேயே கிராமங்கள் வளர்ந்துவிட்டதாகவும் தன்னிறைவு பெற்று விட்டதாகவும் நாம் கூற முடியுமா? ஜாதியால் தவிக்கும் மக்கள், சும்மா கிடக்கும் நிலங்கள், இல்லாத மின்சாரம், வராத குடிநீர், செப்பனிடப்படாத சாலைகள், அவசரத்துக்கு உதவாத மருத்துவ மனைகள், தரமற்ற கல்விக் கூடங்கள் என கிராமங்கள் தேய்ந்து சோர்வுற்று அழிந்து கொண்டிருக்கின்றன.

விவசாயத்தை செழிக்கச் செய்து நாட்டின் பொருளாதாரத்துக்கு துணை நின்ற விவசாயிகள், வீட்டில் உட்கார்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் வேலையற்று! நெல்லும், கரும்பும், கடலையும், தென்னையும் செழித்த பூமி இன்று பன்னாட்டு நிறுவனங்களின் நில வேட்டையில் குறி பார்க்கப்படுகின்றன. இந்தியாவின் முதுகெலும்பு ஒடிந்து நாட்களாயிற்று! சேற்றில் துவண்டு சோறு போடுகின்றவர்களை அரசு புறக்கணித்துவிட்டது. நகர மோகத்தில், விரைகிற வேகத்தில் நாமும் மறந்துவிட்டோம்...

Medical
அநீதிகளின் தொடர்ச்சியாகவே, மருத்துவ மாணவர்களும் "கிராமங்களுக்குப் போக மாட்டோம்' என்று போராடுகிறார்கள். மனசாட்சியைக் கொன்ற நன்றிகெட்ட உலகம்! மருத்துவ மாணவர்களின் இந்தப் போராட்டம் சரியானதே என்று வாதிடுகிறவர்களுக்கும், அதை ஆதரிக்கிறவர்களுக்கும் பதில் சொல்வதற்கே இந்த விளக்கக் கட்டுரை.

மருத்துவ மாணவர்கள் தங்களின் கல்லூரிப் படிப்பினையும், பயிற்சிக் காலத்தையும் முடித்த வுடன் ஓராண்டுக் காலம் கிராமத்தில் உள்ள மருத்துவமனைகளில் கட்டாய (கவனிக்க : சும்மாயில்லை மாதமொன்றிற்கு 8,000 ரூபாய் உதவித் தொகை) சேவையை முடித்த பின்னரே -மருத்துவப் பட்டப்படிப்புச் சான்றிதழைப் பெற முடியும் என்றொரு திட்டத்தை செயல்படுத்தப் போவதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. தமிழக அரசு மருத்துவமனைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், இந்த அறிவிப்பை எதிர்த்து உடனடியாக பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தினார்கள் (இதில் பகுத்தறிவுக்கு எதிரான "நூதன' போராட்டங்களும் அடங்கும். மருத்துவர்கள் மூடநம்பிக்கைவாதிகளாக இருக்கலாமா?)

“ஏற்கனவே மருத்துவப் படிப்பை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுங்கள்”; “ஓராண்டு படிப்பை நீட்டிப்பதால் மேற்படிப்பு வாய்ப்பு தள்ளிப் போகிறது” என்று மாணவர்கள் தங்கள் தரப்பு நியாயங்களை (!) முன்வைத்தாலும், அவர்களின் முடிவு ஒன்றே ஒன்றுதான். அது... கிராமங்களுக்குப் போக மாட்டோம் என்பது. சரி, மருத்துவ மாணவர்களின் இந்தப் போராட்டங்கள் நியாயமானதுதானா? மாட்டோம் என்று மறுப்பதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறதா? நிச்சயமாக இல்லை.

இந்தியா என்பது சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா மட்டுமன்று. அது லட்சக்கணக்கான கிராமங்களை உள்ளடக்கியதே. தமிழகம் என்றால் சென்னை, மதுரை, சேலம், திருச்சி, வேலூர், திருநெல்வேலி, கோவை மட்டுமன்று; ஏறத்தாழ 37,000 கிராமங்களையும் உள்ளடக்கியதே! அடிப்படை மருத்துவ வசதியில்லாத, முதலுதவி, மகப்பேறு மற்றும் தடுப்பூசி போன்ற வசதிகள் மறுக்கப்பட்டவையாகவே இன்றும் இந்திய கிராமப்புறங்கள் உள்ளன. தங்க நாற்கரச் சாலையில் வசதியான இந்தியர்கள் நாட்டைச் சுற்றி வலம் வரும் இந்த நாளில்கூட, நோய் வாய்ப்பட்டால் தூளியில், தோளில் சுமந்து மலை அடிவாரத்திற்கு வந்து சேரும் முன்னரே செத்துப்போகும் மலைவாழ் மக்கள் இங்கே உண்டு. குழந்தை பிறக்காமல் தாயின் வயிற்றிலேயே பிணக்குழி காணும் குழந்தைகள், செத்துப்போன குழந்தையோடு பாடை ஏறும் பெண்கள் இந்த நாட்டின் அவலம்.

தமிழ் நாட்டில் மருத்துவக் கல்வி இயக்குநகத்தின் கீழ் இயங்கும் மருத்துவமனைகள் 42; மருத்துவர்கள் 4,336. நலவாழ்வு மற்றும் ஊரக மருத்துவமனை இயக்குநகத்தின் கீழ் இயங்கும் மருத்துவமனைகள் 264; மருத்துவர்கள் 2,456. ஆரம்ப சுகாதார மய்ய இயக்குநகத்தின் கீழ் இயங்கும் மருத்துவமனைகள் 1,417; மருத்துவர்கள் 2,577. தமிழகத்திலுள்ள 14 மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 42 நகர்ப்புற மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் எண்ணிக்கை 4,336. வட்ட மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள 1,681 மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் எண்ணிக்கை 5,033. நாள்தோறும் இம்மருத்துவமனைகளில் புறநோயாளிகளின் எண்ணிக்கை 189 லட்சம். நாள்தோறும் இம்மருத்துவமனையில் நிகழும் மகப்பேறுகள் 217 லட்சம். இந்த அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சேவை பெறுவது நகர மக்கள் அல்ல. மாறாக, ஏழை கிராமப்புற மற்றும் ஏழை நகர்ப்புற மக்கள் மட்டுமே. தமிழகத்தில் உள்ள 1,474 தொடக்க நலவாழ்வு மய்யங்களில் சற்றேறக்குறைய அனைத்திலும் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகிறார்கள். தற்போதுள்ள அனுமதிக்கப்பட்ட நிரந்தர மருத்துவர் பணியிடத்தில் பட்டம் பெறாத மருத்துவ மாணவர்களை நியமிக்க முடியாது. அதனால்தான் அவர்களை பயிற்சி மருத்துவர்களாக கிராமப்புறங்களுக்கு சேவை செய்ய அனுப்பும் திட்டம் உருவாக்கப்பட்டது.

ஓராண்டு கிராமப்புற சேவை என்பது பணி ஆகாது. ஆனால், கல்வித்தகுதி சான்று பெற இப்பயிற்சி கட்டாயம். ஏற்கனவே உள்ள அய்ந்தரை ஆண்டுகால படிப்பில் ஓராண்டு அனைத்துத் துறைகளிலும் சுழல்முறைப் பயிற்சி; இதில் நான்கு மாத காலம் கிராமப்புறப் பயிற்சி. இக்கிராமப்புறப் பயிற்சி நான்கு மாதங்களிலிருந்து 16 மாதங்களாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவே! இதில் எங்கே மருத்துவர்களின் வேலையைப் பறிக்கும் மறைமுகத் திட்டம் அடங்கி இருக்கிறது?

இப்பயிற்சி நியமனம் என்பது நிரந்தர மருத்துவர்களுக்குப் பதிலாக என்பதாகாது. சொல்லப் போனால், உண்மையில் ஏற்கனவே கிராமப்புறங்களில் பணிபுரியும் சுமார் 1,474 மருத்துவர்களுடன் இப்பயிற்சி மாணவர்கள் இணைந்து செயல்படுவதால், கிராமப்புற மருத்துவச் சேவை மிகச் செம்மையாக நடைபெற வாய்ப்பிருக்கிறது. மக்களுக்குக் கிடைக்கும் மருத்துவச் சேவையும் இரட்டிப்பாகும் என்ற நோக்கிலேயே இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நடைமுறைப்படி, படிப்பை முடித்து மருத்துவர்கள் ஆக முழுத்தகுதி பெற்றவர்கள்தான் பயிற்சி நீட்டிப்பாக கிராமப்புறங்களுக்கு அனுப்பப்படவுள்ளனர். இப்பயிற்சித் திட்டம் இல்லையெனில், அவர்களில் சிலர் அரசு வேலை பெற்ற மருத்துவர்களாக இதே கிராமப்புறங்களுக்கு அனுப்பப்படலாம். ஆனால், கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மய்யங்களில் பணியில் அமர்த்தப்பட்ட மருத்துவர்களில் பெரும்பாலானோர் பதிவேட்டில் கையொப்பமிட மட்டுமே அங்கு வருகின்றனர். இதனால் பாமர மக்கள் -போலி மருத்துவர்கள், மந்திரவாதிகள் போன்ற ஏமாற்றுப் பேர்வழிகளை நம்பி உயிரை விடும் ஆபத்து அதிகரிக்கிறது. ஆக, கிராமப்புற மருத்துவ மய்யங்களில் பணி ஏற்க -படிப்பை முடித்த மருத்துவர்களும் தயாராக இல்லை; படித்துக் கொண்டிருப்பவர்களும் தயாராக இல்லை.

எந்த மக்களின் பணத்தில் தாங்கள் படிக்கிறோமா, எங்கு தங்கள் வேர் உள்ளதோ, அந்த மக்களுக்காகப் பணியாற்ற மாணவர்களும் விரும்பவில்லை எனில், அம்மக்களின் நிலை என்னாவது? மருத்துவப் படிப்பிற்காக அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் செலுத்தும் ஆண்டுக் கட்டணம் வெறும் 4,000 ரூபாய் மட்டுமே. இவர்களைப் பயிற்றுவிக்க ஆகும் பிற செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்கிறது. அரசின் பணம் என்ன அரசியல்வாதிகளின் பணமா? அது மக்களின் பணம். நாம் வியர்வை சிந்த உழைத்து கட்டிய வரிப்பணம்! அந்தப் பணத்தில் சுகபோகமாக படித்து முடிக்கிறவர்கள்தான் கிராமப்புற சேவையை மறுக்கிறார்கள். இந்த நன்றிக் கடனை அடைக்க, கிராமப்புறங்களில் அவர்களை இலவசமாக சேவை செய்யக்கூட சொல்லவில்லை. மாறாக, மாதம் 8,000 ரூபாய் தொகுப்பூதியம் கொடுத்து அனுபவத்திற்கு அனுபவமும் அளித்து, அவர்களைப் புடம் போட்டவர்களாக வெளியே அனுப்பவே அரசின் இத்திட்டம் வழிவகுக்கிறது.

பல்வேறு உலக நாடுகளில் ராணுவ சேவை கட்டாயத்தில் உள்ளது. ராணுவம் என்பது மக்களை அழிக்கும் சேவை. மருத்துவம், மக்களைக் காப்பாற்றும் சேவை. மேலும், மருத்துவ சேவையின் மூலம் லட்சியமுள்ள தலைமுறை உருவாகும். தமிழகத்தில் 60 ஆண்டிற்கும் மேலாக மருத்துவச் சேவைகளில் பெரும்பங்காற்றி வரும் வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு, தங்களைப் பரிந்துரைத்த அமைப்பின் மருத்துவமனைகளில் இரண்டாண்டுகள் கட்டாய மாகப் பணிபுரிந்த பின்னரே சான்றுகள் வழங்கப்படுகின்றன. இது, இன்றுவரை நடைமுறையில் உள்ளது. ஆனால் அரசு, மாணவர்களுக்கு முன்மொழிந்திருப்பது ஓராண்டை மட்டுமே!

Students

மருத்துவர்களை உருவாக்குவது செலவீனம் அல்ல. அது முதலீடு. மக்களின், சமூகத்தின் நல வாழ்விற்கான முதலீடு. அதைக்கூட அரசுகள் முழுமையாகச் செய்யவில்லை! ஆனால், மருத்துவப் படிப்பை தங்கள் தனிப்பட்ட நல்வாழ்விற்கான முதலீடாக மட்டுமே கருதி, பெற்றோரின் மருத்துவமனை தொழிலை எடுத்து நடத்தவும், நல்ல வருமானம் வரக்கூடிய ஒரு தொழிலுக்கான முதலீடாகவும், இவற்றைவிட கேவலமாக வரதட்சணைக்காகவும், கவுரவத்திற்காகவும் -மருத்துவ மாணவர்கள் தாங்கள் வருமானம் ஈட்டுவது, மாநகரங்களில் பெரும் பணம் ஈட்டுவது ஓராண்டு தள்ளிப் போகும் என்ற கவலையில் போராட்டத்தைத் தீவிரமாக நடத்துகின்றனர்.

மேலும், "மனமுவந்து ஏற்பதுதான் சேவை” என்று இவர்கள் கூறுவதன் மூலம், மருத்துவ மாணவர்கள் சேவைக்குத் தயாரில்லை என்றுதானே வெளிப்படையாக சொல்ல வருகிறார்கள்! சேவை மனப்பான்மையைச் சிறுவயதிலிருந்தே வளர்க்க வேண்டிய சமூக, அரசியல் கட்சித் தலைவர்களும் கிராமப்புற மருத்துவ சேவையை இம்மாணவர்களிடம் அறிவுறுத்தத் தவறுவதேன்? மருத்துவத்தை வியாபாரமாக்கிய கேவலம் இந்தியாவில்தான் மிக மோசமாக நடந்திருக்கிறது. சிறந்த மருத்துவ சேவைக்கு முன்னுதாரணமாக விளங்கிக் கொண்டிருக்கும் கியூபாவைப் பற்றி இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

150 குடும்பங்களுக்கு ஓர் ஆரம்ப சுகாதார மய்யம். மருத்துவர் அச்சுகாதார மய்யத்திலேயே தங்கியிருப்பார். அதாவது, மருத்துவரின் வீடும் மருத்துவமனையும் ஒன்றாக அமைந்திருக்கும். இதனால் மக்கள் மருத்துவரை எந்நேரமும் அணுகக்கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. காலையில் புறநோயாளிகளை கவனித்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர், நண்பகலுக்குப் பிறகு வீடுகளுக்குச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டிய நோயாளிகளை கவனிப்பார். பின்னர் மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை வாழும் முறைகள் குறித்து சொல்லிக் கொடுப்பது, அப்படி இல்லாத சுற்றுப்புறங்களை சீரமைப்பது குறித்து மக்களுடன் ஆலோசனைகள் நடத்துவது என மக்களுடன் இணைந்து பணியாற்றுவார்.

மக்களுடன் இப்படி நேரடியான தொடர்பு இருப்பதன் காரணமாக, ஒவ்வொருவரைப் பற்றிய மருத்துவக் குறிப்பையும் அறிந்தவராக அவர் இருக்கிறார். அதோடு முறையான ஆவணங்களும் பராமரிக்கப்படுகின்றன. இதனால் தொற்று நோய்கள் உருவான உடனேயே எளிதில் அவற்றைக் கண்டுபிடிக்க முடிகிறது. 30 முதல் 40 ஆரம்ப சுகாதார மய்யங்களுக்கு ஒரு பொது மருத்துவமனை உள்ளது. அதன் பிறகு இரண்டாம் நிலை மருத்துவமனைகள், உயர் நிலை மருத்துவமனைகள் ஆகியவையும் உள்ளன. நோயாளிகள் சுகாதார மய்ய மருத்துவரின் பரிந்துரையுடனேயே பொது மருத்துவமனை, இரண்டாம் நிலை மற்றும் உயர் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

இவை அனைத்திற்கும் மேலாக, மருத்துவத்தை ஒரு தொழிலாக செய்வது இங்கு சட்டப்படி குற்றச் செயலாகும். அனைவருக்கும் மருத்துவ சேவை இலவசமாகவே வழங்கப்படுகிறது. தங்கள் நாட்டில் உள்ள அதிகப்படியான மருத்துவர்களை, உலகில் போரினால் அல்லது இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மருத்துவ சேவை செய்ய, அரசு தனது சொந்த செலவில் அனுப்பி வைக்கிறது. கியூபாவில் உள்ளது போல் இங்கு மருத்துவத்தை ஒரு தொழிலாகச் செய்வது, சட்டப்படி குற்றமாக்கப்படவில்லை. மருத்துவர்கள் கண்டிப்பாக அரசுப் பணியில்தான் ஈடுபட வேண்டும் என்று நிர்பந்திக்கப்படவில்லை. அரசு மருத்துவர்களை கட்டாயப்படுத்தி வெளிநாடுகளுக்குச் சேவை செய்ய அனுப்பவில்லை. மிகக் குறைந்தபட்சமாக தங்கள் படிப்பின் ஒரு பகுதியாக கிராமப்புறங்களில் ஓராண்டு பணிபுரிய வேண்டும் என்று மட்டுமே கோருகிறது -அதுவும் மாதம் 8,000 ரூபாய் தொகுப்பூதியத்தோடு.

தங்களின் பிழைப்புக்கான சுயநலப் போராட்டத்தை, தற்காலிகமாக நிறுத்திக் கொண்டிருக்கும் மாணவர்களிடம் சில கேள்விகளை கேட்டாக வேண்டும்...

இந்தியத் தலைநகர் தில்லியில், சமூக நீதிக்கான அடிப்படைக் கோட்பாடான இடஒதுக்கீட்டை, அதுவும் உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை எதிர்த்து 17 நாட்கள் “எய்ம்ஸ்” மேட்டுக்குடி மாணவர்கள் போராடியபோது, தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டின் முழுப்பயனையும் அனுபவித்து, அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம்பிடித்த தமிழகத்தின் செல்லப் பிள்ளைகளே! இடஒதுக்கீட்டை வற்புறுத்தி ஒரு நாளாவது போராடினீர்களா? ஒருவராவது மொட்டை அடித்துக் கொண் டீர்களா? உங்கள் பெற்றோர்கள் உங்களோடு இணைந்து போராடினார்களா?
தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு எம்.எஸ்., எம்.டி. போன்ற பட்ட மேற்படிப்புக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து, இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் தில்லியில் போராட்டம் நடத்தியபோது, உச்ச நீதிமன்றத்தில் வழக்காடியபோது, நீங்களும் உங்கள் பெற்றோர்களும் உங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் தமிழக அரசு மருத்துவமனை மருத்துவர் சங்க நிர்வாகிகளும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் சேர நுழைவுத் தேர்வு கூடாதென உங்களில் எவராவது, உங்கள் பெற்றோர்களில் எவராவது போராடினீர்களா? மொட்டை அடித்துக் கொண்டீர்களா? கடந்த அறுபது ஆண்டுகளில் மக்கள் நலனுக்காக, நல்வாழ்விற்காக ஜனநாயக சக்திகள் தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கலை எதிர்த்து, சுயநிதிக் கல்லூரிகள், குறிப்பாக சுயநிதி மருத்துவ பொறியியல் கல்லூரிகளை எதிர்த்துப் போராடியபோது -ஒரு மருத்துவ மாணவராவது போராட்டத்தில் பங்கேற்ற வரலாறு உண்டா? இவர்களின் பெற்றோர்கள் இப்போராட்டங்களைப் பற்றி அறிந்ததுண்டா? இன்றும்கூட மக்களுக்காகப் போராடுவோர் யார்? இடதுசாரி மற்றும் சமூக நீதிக்கான ஜனநாயகவாதிகளோடு பள்ளி, கல்லூரிகளைப் பார்க்காத வேளாண் கூலிகளும், தோல் பதனிடும் தொழிலாளர்களும், அமைப்பு சார்ந்த,சாராத தொழிலாளர்களுமே ஆவர்.

அய்ந்து தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடஒதுக்கீடின்றி சேர்க்கப்படும் மாணவர்கள் 420 பேர். அரசுக் கல்லூரிகளில் ஆண்டுக் கட்டணம் 4,000 ரூபாய் மட்டுமே. தனியார் கல்லூரிகளில் ஆண்டுக் கட்டணம் நான்கு லட்சம் முதல் 7 லட்சம் வரை (இந்தக் கல்லூரி மாணவர்கள் போராடவில்லை). போராடும் மாணவர்களே! இடஒதுக்கீட்டின் முழுப்பலனையும் அனுபவிக்கும் மாணவர்களே! நீங்கள் யாருக்கு மருத்துவம் பார்க்க மறுப்புத் தெரிவிக்கிறீர்கள்? கிராமங்களில் உங்களுக்காகச் செக்குமாடு போல் உழைத்து உழைத்து ஓடாய்ப் போன, பள்ளிக்கூடத்தை எட்டிப் பார்க்காத 1,46,02,183 (ஒன்றரை கோடி) மக்களுக்கு, 83,08,890 தலித்துகளுக்கு 5,52,143 பழங்குடியினருக்கு 42,34,644 குழந்தைகளுக்கு மருத்துவம் பார்க்க உங்களுக்கு மனமில்லையா?

சமூக நோக்கத்துடன் கூடிய கல்வியும், சமூகத் தொண்டும், மனிதநேயமுமே இன்றைய இந்திய ஜனநாயகத்திற்கான அடிப்படைத் தேவை. இதனை எந்த ஒரு குடிமகனும், படிப்பாளியும் குறிப்பாக மருத்துவ மாணவர்களும் மறுக்க முடியாது, மறுக்கவும் கூடாது. கிராமப்புற சேவை என்பதை மருத்துவ மாணவர்களுக்கு மட்டுமின்றி, தொழிற்கல்வி பெறும் அனைத்து மாணவர்களும் கிராமப்புறங்களில், ஈராண்டுகள் கட்டாயமாகச் சேவை செய்ய வேண்டுமென அரசும் தொடர்புடைய பல் கலைக் கழகங்கள் மற்றும் கல்விசார் நிறுவனங்களும் சட்டமியற்ற வேண்டும் என்பது, இந்நாட்டின் உழைக்கும் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

அரசின் முக்கிய கவனத்திற்கு...

நடுவண் அரசின் இப்புதிய திட்டத்தை மக்கள் வரவேற்கின்றனர். மத்திய அரசு, தான் எடுத்த முடிவிலிருந்து சற்றும் பின்வாங்கக் கூடாது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டியுள்ளது. அரசுக்கு சில பரிந்துரைகள் :

கட்டாய கிராமப்புற சேவையை ஓராண்டு என்பதற்குப் பதிலாக இரண்டாண்டுகள் உயர்த்த வேண்டும்.

குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் கிராமப்புறத்தில் வேலை செய்திருந்தால் மட்டுமே மேற்படிப்பிற்குத் தகுதியானவர்கள் என எம்.டி., எம்.எஸ். மாணவர் சேர்க்கைக்கான விதிமுறைகளில் “மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா” மாற்றம் கொண்டு வர வேண்டும்.

அரசுப் பணியாளர் விதிகளில் / பணி உயர்வு விதிகளில், குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் கிராமப்புறத்தில் வேலை செய்திருந்தால் மட்டுமே -பணி உயர்விற்குத் தகுதி உடையவர்கள் என திருத்தம் கொண்டு வர வேண்டும்.

நகர்ப்புற மருத்துவமனைகளுக்கு மாறுதல் கோரும்போது, குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் கிராமத்தில் வேலை செய்திருந்தால் மட்டுமே பரிசீலனை செய்ய வேண்டும்.

வெளிநாடு செல்லும் மருத்துவர்களுக்கு, குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் கிராமப்புறத்தில் வேலை செய்திருந்தால் மட்டுமே தடையின்மைச் சான்றிதழ் வழங்க வேண்டுமென அரசு மற்றும் மருத்துவக் கல்விசார் உயர் நிறுவனங்களையும் -கிராமப்புற, அடித்தட்டு மக்களின் சார்பாக மீண்டும் வலியுறுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நேச சக்திகளே!

வேலைக்காகக் காத்திருக்கும் மருத்துவர்கள் 17,000 பேருக்கு வேலை கோரி; 30,000 மக்கள் தொகைக்கு ஒரு தொடக்க நலவாழ்வு நிலையம் கோரி; மருத்துவச் சேவைக்கு அடித்தளமாக 9,500 கோடி ரூபாயும், ஆண்டுச் செலவினங்களுக்குக் கூடுதலாக 3,500 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யக்கோரி; மருத்துவ ஒதுக்கீட்டை வெறும் 0.9 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாக உயர்த்தக்கோரி -கடந்த 60 ஆண்டுகளில் என்றைக்காவது, ஏன் என்றாவது மருத்துவ மாணவர்கள் குரல் கொடுத்தார்களா? ஒரு நாளாவது அதற்காகப் போராடினார்களா?

Pin It