கவின் செல்வகுமார் ஆணவக் கொலை வழக்கில் (Saravanan V state of Tamilnadu (Cr.OP.No.995/2026) 29-09-2026) முதன்மை குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித்தின் தந்தை சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி ஆகியோரை குற்றப் பத்திரிகையில் இருந்து நீக்கம் செய்து ஆணை பிறப்பித்திருக்கிறார் நீதியரசர் ஆர். விஜயகுமார். இந்த நீக்கத்தின் மீது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பியூசிஎல்) தன் ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கிறது.Madurai High Courtகுற்றப் பத்திரிகையைப் பார்த்த அளவில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது குற்ற முகாந்திரம் இருக்கிறதா இல்லையா? என்பதைக் காண்பதே பிஎன்எஸ்எஸ் பிரிவு 528-ன் முதன்மை நோக்கமாகும். சாட்சியங்களை ஆழமாக உரசிப் பார்த்து முடிவுக்கு வருதல் என்பது விசாரணை நீதிமன்றத்தின் சட்டத்தின் பாற்பட்ட கடமைப் பணியாகும். இதை உயர் நீதிமன்றம் செய்திருப்பது விசாரணை நீதிமன்றத்தின் அதிகாரத்தின் மீது கையேற்றம் செய்வதாகும்! இதையும் செய்துவிட்டு, விசாரணை நீதிமன்றம் விசாரணையின் போது, இவர்கள் இருவர் மீதும் மேலும் புது சாட்சியங்கள் கிடைத்தால், மீண்டும் அவர்களைச் சேர்ப்பதற்கான அதிகாரம் விசாரணை நீதிமன்றத்துக்கு உண்டு என உயர் நீதிமன்றம் சொல்லி இருப்பது "தும்பை விட்டு வாலைப் பிடிப்பதற்கு" ஒப்பாகும்! "சிபிஐ எதிர் ஆரியன் சிங், (2023) 18 SCC 399" வழக்கில், உயர் நீதிமன்றம் தனது உள்ளார்ந்த அதிகார வரம்பைப் பயன்படுத்தும்போது, அரசுத்தரப்பு வழக்கின் தகுதிகளை ஆராயவோ அல்லது சிறிய அளவிலான விசாரணையை (mini-trial) நடத்தவோ முடியாது என்பதை உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியது என்பதை நினைவுகூர்வது பொருத்தமாகும்.

குற்ற நிகழ்வு நடந்த 16 நிமிடங்களுக்குள் சரவணன் குற்ற நிகழ்வு இடத்திற்குச் சென்றார் என்பதும், அதற்குப் பிறகு தொடர்புடைய காவல் நிலையக் காவலரிடம் தன் மகன் சுர்ஜித்தான் கொலை செய்தான் என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட ஒரு கண்ணியை மட்டும் சரவணன் விடுவிப்புக்கு ஏதுவாக எடுத்துக் கொண்டிருப்பது, கண்ணுற்ற சாட்சியம் இல்லாதபோது, சூழ்நிலை சாட்சியத்தின் முழுச் சங்கிலிக் கண்ணிகளையும் இணைத்துப் பார்த்து முடிவுக்கு வர வேண்டும் என்ற குற்றவியல் சட்டவியலின் அடிப்படைக்கு எதிரானதாகும். மேலும், சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி இருவரும் சார்பு காவல் ஆய்வாளர்களாக இருந்து பல்லாண்டு கால அனுபவம் (பட்டறிவு) உடையவர்கள் என்பதும், குற்ற நிகழ்வுக்குப் பிறகு 90 நாட்கள் தலைமறைவாக கிருஷ்ணகுமாரிிருந்தார் என்பதும் கணக்கில் கொள்ளப்படாமல் விடுவித்திருப்பது வியப்பளிப்பதாக உள்ளது!

அதே சமயம், குற்றம் சாட்டப்பட்ட தாய், தந்தை, மகன் மூவரும் "ஒரே கைபேசி மின்னணு கோபுர அலைவரிசையில் இருந்தார்கள்" என்பது மூவரும் குற்ற நிகழ்வுக்குப் பின் ஒரே இடத்தில் இருந்தார்கள் என்பதை நிரூபிக்கப் போதுமானது அல்ல என்று சொல்லி, தாய், தந்தை இருவரையும் விடுவிப்பதற்கு ஏதுவாக உயர் நீதிமன்றம் இதை எடுத்துக் கொண்டுள்ளது!

கவின் கொலையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும்போது, சரவணன் தாராபுரத்தில் கொலையுண்ட வழக்கறிஞர் முருகானந்தம் வழக்கின் முக்கிய சாட்சியைக் கொலை செய்வதற்கு கூலிப்படையை ஏற்பாடு செய்தார் என்ற குற்றச்சாட்டிலும் இவர் கைது செய்யப்பட்டிருப்பதை உயர் நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாதது வியப்பைத் தருவதாகவே உள்ளது!

மேலும் 7 ஆண்டுகளுக்கு முன், சரவணன் கைபேசி வாயிலாகக் காதலைக் கைவிடுமாறு கவினை மிரட்டினார் என்கிற கைபேசி உரையாடல் பதிவான மின்னணு சாட்சியத்தையும் உயர் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாதது ஏமாற்றத்தைத் தருகிறது!

சாதியை இழிவுபடுத்திப் பொதுவெளியில் பொதுமக்கள் முன் சொன்னால் மட்டுமே, பட்டியலின மற்றும் பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 3(1)(r), 3(1)(s) மற்றும் 3(2)(v)-ன் கீழ் வரும் என்று குறுக்குவது கிடைக்க வேண்டிய நீதி கிடைப்பதற்கான வழியை அடைப்பதாகும்!

கவின் - சரவணன், கிருஷ்ணகுமாரி இணையர் மகளுக்குமிடையிலான காதல் இருவழிப் பாதையிலான முதிர்ச்சியான காதலே; இருவர் குடும்பமும் நல்ல பொருளாதாரப் பின்னணி உடையவை; கவினும் அவர் காதலியும் உயர்படிப்பு படித்து முடித்து நல்ல வேலையில் இருந்தவர்கள்; இருவரும் ஒரே தாய்மொழியைக் கொண்டிருந்தவர்கள்; இதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு கவின் ஏன் பொதுவெளியில் பட்டப்பகலில் கொல்லப்பட்டார்? ஆதிக்க சாதி மனப்பாங்கு அன்றி வேறு எதுவும் இல்லை. இவையெல்லாம் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் மேற்கண்ட பிரிவுகளை ஈர்க்காது என்ற முடிவுக்கு உயர் நீதிமன்றம் வந்திருப்பது புரியாத புதிராகவே உள்ளது! உச்ச நீதிமன்ற அமர்வு, ஆணவக் கொலைச் செயலை "இந்தியாவின் இறுக்கமான படிநிலை சாதி அமைப்பிலிருந்து உருவான கொடூரமான கௌரவக் கொலை" என்று "K.P. Tamil Maran V State of Tamilnadu" (கண்ணகி முருகேசன் ஆணவக் கொலை வழக்கு) வழக்கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்த விடுவிப்பு ஆணையை எதிர்த்தும், புலன் விசாரணை முறையாகச் சரியாகச் செய்யப்படாமையால் மேலும் கூடுதல் புலன் விசாரணை (Further investigation) மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து திறம்பட இவ்வழக்கை நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பியூசிஎல் கோருகிறது.

- இரா. முரளி, தலைவர் & து. சேகர் அண்ணாதுரை, பொதுச்செயலாளர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பியூசிஎல்).

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.